டி.ஏ.பி. உறுப்பினர் சுரேஷ் குமாருக்கு ஜாமீன் நிராகரிப்பு
தமிழ் ஈழ விடிதலைப்புலி குழுவுக்கு ஆதரவளித்த குற்றச்சாட்டை எதிர்கொண்டுள்ள டி.ஏ.பி. கட்சியின் உறுப்பினர் வி.சுரேஷ்குமாரின் ஜாமீன் மனுவை கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது.
பாதுகாப்பு குற்றங்கள் (சிறப்பு நடவடிக்கைகள்) சட்டம் 2012 (சோஸ்மா) இன் பிரிவு 13-ன் கீழ் வழங்கப்பட்டுள்ளபடி, தண்டனைச் சட்டத்தின் பிரிவு 130 J இன் கீழ் ஒரு பயங்கரவாதக் குற்றத்தை எதிர்கொண்டுள்ளவருக்கு ஜாமீன் அனுமதிக்க இயலாது என்ற அடிப்படையில் 44 வயதான குற்றம் சாட்டப்பட்டவரின் விண்ணப்பத்தை நீதிபதி கோலின் லாரன்ஸ் செக்வேரா தள்ளுபடி செய்தார்.
ஜாமீன் வழங்க மறுக்கும் சோஸ்மாவின் கீழ் உள்ள விதிமுறை அரசியலமைப்புக்கு உட்பட்டது தான் என்று நீதிபதி செக்வேரா தீர்ப்பளித்தார்.
“கடெக் சட்டமன்ற உறுப்பினர் ஜி சாமிநாதன் வழக்கில் எனது சக சகோதரர் (உயர் நீதிமன்ற நீதிபதி முகமட் நஸ்லான் முகமட் கசாலி) தீர்ப்பிலிருந்து நான் வேறுபடுகிறேன்.
“சோஸ்மாவின் 13வது பிரிவில் உள்ள விதிமுறையின்படி, பயங்கரவாதம் தொடர்பான குற்றங்களுக்காக குற்றம் சாட்டப்பட்ட நபருக்கு ஜாமீன் வழங்குவதற்கான முழுமையான தடையை விதித்துள்ளது. இது அரசியலமைப்புக்கு உட்பட்டது என்று நான் கருதுகிறேன். எனவே, விண்ணப்பம் தள்ளுபடி செய்யப்பட்டது,” என்று நீதிபதி கூறினார்.
பயங்கரவாத குற்றங்களுக்காக குற்றம் சாட்டப்பட்ட நபருக்கு ஜாமீன் மனு தொடர்பான வழக்குகளில் நடவடிக்கை எடுக்க நீதிமன்றத்தை வெறுமனே கேட்டுக் கொள்ள முடியாது என்றும் நீதிபதி கூறினார். ஏனென்றால், அந்த அதிகாரத்தைப் பயன்படுத்துவதற்கான அடித்தளம் அங்கு இல்லை. எனவே, நீதி அதிகாரத்தை அகற்ற வேண்டிய அவசியம் இல்லை,” என்று அவர் கூறினார்.
கடந்த ஆண்டு அக்டோபர் 7 ஆம் தேதி பிற்பகல் 2 மணிக்கு புக்கிட் அமான் சிறப்பு கிளை அலுவலகத்தில் உள்ள E8 (M) பயங்கரவாத தடுப்பு பிரிவு, புக்கிட் அமான் சிறப்பு கிளை அலுவலகத்தில் “ராக்கெட்சுரேஷ் Dap” என்ற பெயரில் பேஸ்புக்கைப் பயன்படுத்தி தமிழ் ஈழ விடிதலைப்புலி குழுவுக்கு ஆதரவளித்த குற்றச்சாட்டை மறுத்துள்ளார் வி.சுரேஷ்குமார்.
தண்டனைச் சட்டத்தின் பிரிவு 130J (1)(a)இன் கீழ் இந்த குற்றச்சாட்டு உருவாக்கப்பட்டுள்ளது. குற்றம் நிரூபிக்கப்பட்டால், ஆயுள் தண்டனை அல்லது அதிகபட்சம் 30 ஆண்டுகள் சிறைத்தண்டனை அல்லது அபராதம் மற்றும் குற்றத்தைச் செய்ய பயன்படுத்தப்பட்ட அல்லது பயன்படுத்த விரும்பிய எந்தவொரு சொத்தையும் பறிமுதல் செய்தல் போன்ற தண்டனை வழங்கப்படும்.
- பெர்னாமா