குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களுக்கு RM100,000 அபராதம், 20 ஆண்டுகள் சிறை – லிம் குவான் எங்

குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களுக்கு RM100,000 அபராதம், 20 ஆண்டுகள் சிறை – லிம் குவான் எங்

போதைப்பொருள் மற்றும் மதுபோதயில் வாகனம் ஓட்டியதாக குற்றம் சாட்டப்படும் வாகன ஓட்டிகளுக்கு அபராதங்களை திருத்தும் செய்ய அரசாங்கம் ஆய்வு செய்து வருகிறது. போதைப்பொருள் மற்றும் மதுபோதயில் வாகனம் ஓட்டுவது, ஆபத்தாக வாகனம் ஓட்டுவது, மரணத்தை ஏற்படுத்துதல், போன்ற குற்றங்களுக்கு, RM100, 000 வரை அபராதம் அளிக்கப்படும் என்று நிதியமைச்சர் லிம் குவான் எங் கூறினார்.

அபராதத்தைத் தவிர, குற்றவாளிக்கான தற்போதைய 10 ஆண்டு சிறைத்தண்டனை இனி 20 ஆண்டுகளாக உயர்த்தப்படும் என்றார்.
“குடிபோதையில் வாகனம் ஓட்டி மரணத்தை விழைவிக்கும் விபத்துக்களை ஏற்படுத்துபவர்களுக்கு பிரிவு 41 (சாலை போக்குவரத்து சட்டம் 1987) இன் கீழ் தண்டனை திருத்தத்தை அரசாங்கம் பரிசீலனை செய்து வருகிறது” என்று அவர் கூறினார்.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து குழந்தைகளை சந்தித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய லிம் இதனைத் தெரிவித்தர். குடிபோதையில் இருந்ததாக நம்பப்படும் ஒரு வாகன ஓட்டுநரால் மோதப்பட்ட அவர்களது தந்தை கைரிசுல் முகமட் நூர் (39) விபத்தில் இறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது, அபராதம் 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும், RM20,000 வரை அபராதமும் ஆகும். எனவே சாலை விபத்துக்களில் அதிக எண்ணிக்கையிலான இறப்புகள் நிகழ்வதால், சட்டத்தில் திருத்தம் அவசியம் என்றார்.

ஒவ்வொரு ஆண்டும் குறைந்தது 7,000 அபாயகரமான சாலை விபத்துக்கள் பதிவாகின்றன என்றும், அபாயகரமான சாலை விபத்துகளின் விகிதத்தில் மலேசியா உலகிலேயே அதிகமாக உள்ள நாடுகளில் ஒன்றாக உள்ளது என்றும் அவர் கூறினார்.

அபாயகரமான விபத்துக்களின் வீதம் குறைந்துவிட்ட போதிலும், அதை மேலும் குறைக்க பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

முன்னதாக, பாகான் நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் லிம், அந்த ஐந்து குழந்தைகளுக்கும் RM5,000 நன்கொடையை வழங்கினார்.

“மாநில அரசு மற்றும் பொதுநலத் துறை, மற்றும் பாகான் நாடாளுமன்றத் தொகுதி அலுவலகம் உள்ளிட்ட நிறுவனங்கள் இந்த குடும்பத்திற்கு நன்கொடை அளித்துள்ளன. இந்த குடும்பத்திற்கு எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன், மேலும் அவர்களின் தாய் சுயநினைவு அடைந்து விரைவில் குணமடைவார் என்று நம்புகிறேன். இந்த குடும்பத்திற்கு நாங்கள் தொடர்ந்து உதவுவோம்,” என்று அவர் கூறினார்.

பிப்ரவரி 9 ஆம் தேதி அதிகாலை 5 மணியளவில் நடந்த விபத்தில், கைரிசுல் சம்பவ இடத்திலேயே இறந்தார், அவரது மனைவி சூரியானா ஹசன் (36) பலத்த காயமடைந்து செபராங் ஜெயா மருத்துவமனையில் சுயநினைவற்ற நிலையில் உள்ளார்.

இந்த விபத்தில், குடிபோதையில் இருந்ததாக நம்பப்படும் ஒருவரால் ஓட்டப்பட்ட கார், கைரிசூலின் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. வடக்கு தெற்கு நெடுஞ்சாலையின் கிலோமீட்டர் 140.2 என்ற இடத்தில், பெராய் செல்லும் புக்கிட் மெர்தாஜாம் சாலையில் இவ்விபத்து நடந்துள்ளது.