ஆசியாவுக்கு வெளியே முதல் கொரோனா வைரஸ் மரணம் – ஐரோப்பாவில் இறந்த முதியவர்
பிரான்ஸ் நாட்டுக்கு சுற்றுலா சென்ற சீன நாட்டவர் ஒருவர் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக உயிரிழந்துள்ளார்.
கோவிட்-19 என்று பெயரிடப்பட்டுள்ள கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஆசிய நாடுகளுக்கு வெளியே நிகழும் முதல் மரணம் இதுவாகும்.
உயிரிழந்த 80 வயது முதியவர் சீனாவின் ஹூபே மாகாணத்தை சேர்ந்தவர் என்று பிரான்ஸ் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஹூபே மாகாணத்தில் உள்ள வுஹான் நகரமே கொரோனா தொற்று பரவல் தொடங்கிய இடமாக கருதப்படுகிறது.
ஜனவரி 16ஆம் தேதி சீனாவில் இருந்து, தன் குடும்பத்தினருடன் பிரான்ஸ் வந்தார் இந்த முதியவர். கோவிட்-19 பாதிப்பு உறுதியானபின் ஜனவரி 25ஆம் தேதி முதல் இவர் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டிருந்தார்.
பிரான்ஸ் நாட்டில் இதுவரை 11 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. அவர்களில் ஆறு பேர் மருத்துவமனையில்
இன்று உயிரிழந்த முதியவரின் மகளும் கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். அவர் உடல்நலம் தேறி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீனாவுக்கு வெளியே என்ன நிலவரம்?
இதுவரை சீனாவின் நிலப்பரப்புக்கு வெளியே மூவர் மட்டுமே இறந்துள்ளனர். சீனாவின் ஒரு பகுதியாக உள்ள ஹாங்காங்கில் ஒருவர், பிலிப்பைன்ஸ் மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளில் தலா ஒருவர் உயிரிழந்துள்ளனர்.
இதுவரை கொரோனா வைரஸ் தொற்றால் சீனாவில் மட்டும் 1500க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். சீனாவில் கொரோனா வைரஸால் 66,492 பேர் பாதிக்கப்பட்டிருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.
சீனாவுக்கு வெளியே 24 நாடுகளில் 500க்கும் மேலானவர்கள் கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.