பயணக் கப்பலுக்கு மலேசியாவில் அனுமதியில்லை
கொரோனா வைரஸ் | சீனாவின் எந்தவொரு துறைமுகங்களிலிருந்தும் புறப்படும் அல்லது கடக்கும் எந்தவொரு கப்பல்களையும் நாட்டிற்குள் நுழைய அரசாங்கம் அனுமதிக்காது என்று துணை பிரதமர் டாக்டர் வான் அஜிசா வான் இஸ்மாயில் இன்று அறிவித்தார்.
பிப்ரவரி 13ம் தேதி கம்போடியாவில் வந்தடைந்த MS Westerdam/எம்.எஸ்.வெஸ்டர்டாம் பயணக் கப்பலில் இருந்து பயணிகள் தங்கள் சொந்த நாடுகளுக்குத் திரும்புவதற்கான ஏற்பாடுகளைச் செய்து கொண்டிருக்கும் வேளையில், அவர்கள் மலேசியாவிற்குள் வர அனுமதிக்கப்படமாட்டார்கள் என்றும் அவர் அறிவித்தார்.
எம்.எஸ். வெஸ்டர்டாமில் இருந்த 83 வயதான அமெரிக்க பெண்ணும் மற்றும் 144 பயணிகளும் அமெரிக்க அரசாங்கத்தால் வாடகைக்கு அமர்த்தப்பட்டுள்ள மலேசியா ஏர்லைன்ஸ் (மாஸ்) விமானத்தில் மலேசியாவுக்கு வரவழைக்கப்பட்டனர். கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையத்திற்கு வந்ததும் அவர்கள் மீது கோவிட் -19க்கான சோதனை செய்யப்பட்டது. அதில் அந்த 83 வயதான அமெரிக்க பெண் கோவிட்-19 தொற்று நோயினால் பாதிகப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.
“கம்போடியாவில் உள்ள எம்.எஸ். வெஸ்டர்டாம் கப்பலில் மீதமுள்ள பயணிகள் மலேசியாவிற்குள் நுழைய அனுமதிக்கப்பட மாட்டார்கள். இப்போது அனைத்து பயணிகளும் உறுதிப்படுத்தப்பட்ட பாதிப்பின் நெருங்கிய தொடர்பு என்று கருதப்படுகிறார்கள்” என்று வான் அஜிசா ஒரு செய்திக்குறிப்பில் தெரிவித்தார்.
பிப்ரவரி 14-ஆம் தேதி மலேசியா வந்தவுடன் அந்தப் பெண் பரிசோதிக்கப்பட்டார், முடிவுகளுக்குப் பின் அவர் மலேசியாவில் 22வது பாதிப்பாக பதிவாகியுள்ளார்.
எந்த ஒரு பயணியும் கோவிட்-19 பாதிப்பில் இல்லை என்று கம்போடிய அதிகாரிகள் ஆரம்பத்தில் கூறியிருந்தனர்.
இதனைத்தொடர்ந்து மலேசியா தனது கண்டுபிடிப்புகளை கம்போடிய அதிகாரிகளுக்கு தெரிவித்துள்ளது என்று வான் அஜிசா கூறினார்.
மலேசிய சுகாதார அதிகாரிகள் அனைத்து 145 பயணிகளையும் பரிசோதித்ததாகவும், அந்த பெண் மட்டுமே பாதிக்கப்பட்டுள்ளதாகவும் துணை பிரதமர் தெரிவித்தார்.
மலேசியாவில் உள்ள அமெரிக்க தூதரகம் மலேசியா வழியாக பயணிகளை தங்கள் சொந்த நாடுகளுக்கு திரும்ப உதவுவதற்காக மொத்தம் நான்கு MAS விமானங்களை வாடகைக்கு அமர்த்தியுள்ளது என்று அவர் மேலும் கூறினார்.
83 வயதான அப்பெண் சுங்கை புலோ மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்ட வார்டில் கண்காணிப்பில் உள்ளதாகவும், அவருடன் 85 வயதான கணவரும் உள்ளதாகவும் அவர் கூறினார்.
மீதமுள்ள 143 பயணிகளைப் பொறுத்தவரை, 137 பேர் தங்களது அடுத்த பயண இடத்திற்குத் சென்றுவிட்டனர். மேலும் ஆறு பேர் அந்தந்த இடங்களுக்கு விமானங்களுக்காக காத்திருக்கிறார்கள்.
இருப்பினும், மலேசியா அந்த ஆறு பயணிகளையும் கோவிட்-19க்காக சோதிக்கும் என்றும், முடிவுகள் சாதகமாக வந்தால்மட்டுமே அவர்களை தங்கள் பயணத்தைத் தொடர அனுமதிக்கும் என்றும் அவர் கூறினார்.
மலேசிய சுகாதார அதிகாரிகள், பயணிகள் பற்றிய தகவல்களை அந்தந்த நாடுகளின் சுகாதார அதிகாரிகளுக்கு தெரிவித்துவிட்டனர். இதனை கண்காணிப்பு நோக்கங்களுக்காக வழங்கியுள்ளனர் என்றும் அவர் கூறினார்.
மலேசியாவில் மற்றொரு நோயாளி முழுமையாக குணமடைந்துள்ளார் என்று வான் அஜிசா கூறினார். 22 பாதிப்புகளில் எட்டு நபர்கள் இப்போது முழுமையாக மீண்டுள்ளனர்.
நெதர்லாந்தில் பதிவுசெய்யப்பட்ட எம்.எஸ். வெஸ்டர்டாம் கப்பல் (மேலே) ஜப்பான், தைவான், குவாம், பிலிப்பைன்ஸ் மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளால் நுழைய மறுக்கப்பட்டது. இது இறுதியாக கம்போடியாவில் நுழைய அனுமதிக்கப்பட்டது.
இந்த கப்பலில் 1,544 பயணிகள் மற்றும் 802 பணியாளர்கள் இருந்தனர்.
சியாட்டலை தளமாகக் கொண்ட ஹாலண்ட் அமெரிக்கா லைன் நிறுவனத்திற்கு சொந்தமான இந்த கப்பல் பிப்ரவரி 1 ஆம் தேதி ஹாங்காங்கிலிருந்து புறப்பட்டது. இது சீனாவின் ஷாங்காயில் தனது 14 நாள் கிழக்கு ஆசியா பயணத்தை முடிக்கவிருந்தது.
கோவிட்-19 பாதிப்புக்கு மத்தியில், கப்பல் அதன் நங்கூரமிடும் இடத்தை ஜப்பானின் யோகோகாமாவுக்கு மாற்றியது, ஆனால் அனுமதி மறுக்கப்பட்டது. இது பின்னர் பல நாடுகளில் நங்கூரமிட முயன்றது, ஆனால் அனுமதி மறுக்கப்பட்டது.
உலக சுகாதார அமைப்பால் உலகளாவிய அவசரநிலையாக அறிவிக்கப்பட்ட கோவிட்-19 தொற்றுநோய்க்கு மத்தியில் சீனா பல நகரங்களை பூட்டியுள்ளது. சீனாவின் வுஹானில் முதன்முதலில் பரவிய இந்த வைரஸ் 69,264 பேரை பாதித்து, இதில் 1,669 பேர் இறந்துமுள்ளனர்.