முதல் பக்காத்தான் நேஷனல் அரசாங்கத்தை மலாக்கா அமைக்குமா?
பக்காத்தான் நேஷனல் அரசாங்கத்தை அமைக்கும் முதல் மாநிலமாக மலாக்கா இருக்கக்கூடும் என்று மாநில பி.கே.ஆர் தலைவர் ஜி.ராஜேந்திரன் கூறியுள்ளார்.
மலாக்காவில் பல பி.கே.ஆர். மற்றும் பெர்சத்து தலைவர்கள் அம்னோவுடன் இணைந்து புதிய மாநில அரசாங்கத்தை அமைப்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக அவர் கூறினார்.
“அமைச்சர் அட்லி ஜஹாரிக்கு பதிலாக மாநில நிர்வாக சபை உறுப்பினரை நியமிக்க விவாதங்கள் நடந்துள்ளன என்பதை என்னால் உறுதிப்படுத்த முடியும்
“பக்காத்தான் நேஷனல் என்று அழைக்கப்படும் ஒரு புதிய மாநில அரசாங்கத்தை உருவாக்க அம்னோவுடன் பேச்சுவார்த்தைகள் நடந்திருப்பதையும் நான் கேள்விப்பட்டேன்,” என்று அவர் மலேசியாகினியிடம் கூறினார்.
பக்காத்தான் நேஷனல் கூட்டணி பற்றிய பேச்சு தேசிய அளவில் அன்மையில் வெளிவந்த நிலையில், மாநில அளவில் இது கடந்த அக்டோபரிலிருந்தே விவாதிக்கப்பட்டுள்ளது என்று மலாக்கா பி.கே.ஆர். தகவல் தொடர்பு இயக்குனர் ஜி.ராஜேந்திரன் கூறுகிறார்.
“எனவே இந்த புதிய கூட்டணிக்கு முதன்முதலில் சான்றாக மலாக்கா அமையலாம் என்று நான் கணித்துள்ளேன்.
“நான் கேள்விப்பட்டதிலிருந்து, தீர்க்கப்படாத இரண்டு சிக்கல்கள் இன்னும் உள்ளன. முதலாவது, பக்காத்தான் நேஷனல் செயல்பாட்டுக்கு வந்தால் அம்னோ அமைச்சர் பதவியைக் கேட்பதாகக் கூறப்படுகிறது. ஆனால் பி.கே.ஆர். மற்றும் பெர்சத்து தலைவர்கள் இதற்கு ஆதரவாக இல்லை என்று தெரிகிறது.
“பி.கே.ஆர். மற்றும் பெர்சத்து தலைவர்கள் அடுத்த நடவடிக்கை குறித்து அந்தந்த தேசிய தலைவர்களிடமிருந்து உத்தரவுகளை எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள்,” என்று அவர் கூறினார்.
தற்போது, பக்காத்தான் ஹராப்பான் மலாக்கா மாநில அரசாங்கத்தை இரண்டு இருக்கைகள் கொண்ட பெரும்பான்மையுடன் கைப்பற்றியுள்ளது. ஹராப்பானுக்கு 15 இடங்களும், பாரிசானுக்கு 13 இடங்களும் உள்ளன.
ஹராப்பன் கட்சிகளில், டி.ஏ.பி. அதிக இடங்களையும் (எட்டு இடங்கள்), பி.கே.ஆர். மூன்று இடங்களையும், அமானா மற்றும் பெர்சத்து தலா இரண்டு இடங்களையும் கொண்டுள்ளன. பாரிசானைப் பொறுத்தவரை, அனைத்து 13 இடங்களும் அம்னோவுக்கு சொந்தமானது.
இதற்கிடையில், மாநில தலைமை சம்பந்தப்பட்ட கூட்டங்களில் மலாக்கா பெர்சத்து துணைத் தலைவர் முகமட் ரபீக் நைசமோஹிதீன் பலமுறை ஆஜராகவில்லை என்ற குற்றச்சாட்டை ராஜேந்திரனால் உறுதிப்படுத்த முடியவில்லை.
“ஒரு எக்ஸ்கோ உறுப்பினர், கூட்டங்களில் கலந்து கொள்ளவில்லை என்றும், எக்ஸ்கோக்களுக்காக ஒரு வாட்ஸ்அப் குழுவிலிருந்து தன்னை விலக்கிக் கொண்டதாகவும் நான் கேள்விப்பட்டேன். ஆனால் எனக்கு உறுதியாக தெரியவில்லை,” என்று அவர் பதிலளித்தார்.
மலேசியாகினி அமைச்சர் ரபீக் மற்றும் பிற மாநிலத் தலைவர்களை கருத்துக்களுக்காக தொடர்பு கொண்டுள்ளது. கடந்த அக்டோபரில், பல அம்னோ மாநில சட்டமன்ற உறுப்பினர்களுடன் அவர் நடத்திய கூட்டங்கள் வெளிச்சத்திற்கு வந்தன.
இது ஒரு சதித்திட்டத்தின் ஊகங்களுக்கு வழிவகுத்தது. ஆனால் ரபீக் மலாக்காவின் முன்னேற்றங்களை மையமாகக் கொண்ட விவாதத்தை குறித்து சந்தித்ததாக மறுத்துப் பேசியிருந்தார்.
இதைத் தொடர்ந்து, மலாக்கா பெர்சத்து தலைவர் முகமட் ரெட்ஜுவான் யூசோஃப், அமானாவைச் சேர்ந்த அமைச்சருக்கு 100 சதவீதம் ஆதரவை அளிக்கிறது என்றார்.
பாஸ் மற்றும் அம்னோ சம்பந்தப்பட்ட ஒரு புதிய கூட்டணியின் உருவாக்கம் இந்த மாத தொடக்கத்தில் அம்னோ உச்ச சபை உறுப்பினர் லோக்மன் ஆடம் ஆடியோ பதிவை வெளியிட்டபோது தலைப்புச் செய்தியாக அமைந்தது.
பெர்சத்து தலைவராக இருக்கும் பிரதமர் டாக்டர் மகாதிர் முகமதுவுடன் இணைந்து பணியாற்ற கட்சித் தலைவர்களை வற்புறுத்த அம்னோ தலைவர் அகமட் ஜாஹிட் ஹமிடி முயன்றது தான் இந்த ஆடியோ பதிவு என்று அவர் கூறினார்.
மகாதீர் தனது பதவிக்காலம் முடியும் வரை பதவியில் இருக்க கோரி ஒரு நம்பிக்கை வாக்கெடுப்பை முன்வைக்க பாஸ் திட்டமிட்டுள்ளது. பி.கே.ஆர். தலைவர் அன்வார் இப்ராஹிம் அடுத்த பிரதமராவதைத் தடுக்கும் முயற்சியாக இது அமையும் என்று பேசப்படுகிறது.
கடந்த வாரம், இந்த வெள்ளிக்கிழமை நடைபெறும் ஹராப்பன் உச்சசபைக் கூட்டத்தில் பதவி மாற்றம் திட்டம் குறித்து முடிவு செய்யப்படும் என்று அன்வார் கூறினார். நவம்பர் மாதம் ஆசிய பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு (அபெக்) உச்சிமாநாட்டிற்குப் பிறகு தான் பதவி விலகுவதாக மகாதீர் மீண்டும் கூறியுள்ளார்.