கிட் சியாங்: பாஸ் ஏன் பீதியடைகிறது?

கிட் சியாங்: பாஸ் ஏன் பீதியடைகிறது?

கடந்த பொதுத் தேர்தலில் வாக்குறுதியளித்தபடி பிரதம மந்திரி மாற்றும் குறித்த திட்டத்தை முடிவு செய்வதற்கான பக்காத்தான் ஹராப்பானின் திட்டத்தினால் பாஸ் ஏன் பீதியடைகிறது என்று டி.ஏ.பி. தலைவர் லிம் கிட் சியாங் கேள்வி எழுப்பியுள்ளார்.

டாக்டர் மகாதீர் முகமட்டிடமிருந்து பி.கே.ஆர் தலைவர் அன்வார் இப்ராஹிமுக்கு பிரதமர் பதவி மாற்றும் திட்டத்தை விவரிக்க இந்த வெள்ளிக்கிழமை அதன் உச்சசபைக் கூட்டத்திற்கு முன்னதாகவே பல பாஸ் தலைவர்கள் ஹராப்பானைத் தாக்கிக் கொண்டிருக்கின்றனர்.

“ஹராப்பான் பிரதமர் மாற்றம் குறித்த பொதுத் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றுவதில் பாஸ் தலைவர்கள் ஏன் பீதியடைகிறார்கள்? திடீரென்று, பாஸ் தலைவர்கள் அரசியலமைப்பு வல்லுநர்களாகிவிட்டார்கள்; உயர் நீதித்துறை பதவிக்கு தகுதியானவர்கள் போன்றும் அல்லவா தெரிகிறது”, என்று லிம் கூறியுள்ளார்.

“இந்த பாஸ் தலைவர்கள் நாட்டின் உயர் நீதித்துறை பதவிகளை வகிக்கவில்லை என்பதற்காக மலேசியர்கள் நன்றி தான் சொல்ல வேண்டும்” என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

பெயர்களைக் குறிப்பிடாமல், “சட்ட பின்னணி கொண்ட ஒரு பாஸ் தலைவர் அன்வாருக்கு மகாதீர் அதிகாரத்தை ஒப்படைப்பது குறித்த விவாதம் பேரரசரின் அதிகாரத்தை மீறியதாக கூறியுள்ளார்” என்று லிம் குறிப்பிட்டார்.

“அவர் எங்கு சட்டம் படித்தார் என்று எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது,” என்று லிம் பாஸ் பொதுச் செயலாளர் தக்கியுடீன் ஹாசனுக்கு ஒரு வெளிப்படையான குறிப்பில் கூறினார் லிம்.

மற்றொரு பாஸ் தலைவர் ஹராப்பான் கூட்டத்திற்கு மகாதீரின் பதவி மாற்றம் குறித்து முடிவெடுப்பதற்கு எந்தவிதமான உரிமையும் இல்லை என்று கூறியிருந்தார். இந்த அறிக்கையை பாசீர் மாஸ் எம்.பி. அகமது பட்லி ஷாரி வெளியிட்டார்.

“ஒருவேளை, அரசியலுக்கு அடிப்படையாக புத்திசாலித்தச் சோதனை தேவைப்பட்டிருந்தால், அரசியல் தலைவர்களிடமிருந்து இதுபோன்ற முட்டாள்தனங்கள் குறைவாக இருக்கும்”.

“பாஸ் தலைவர்களுக்கு, ஹராப்பான் அதன் பொதுத் தேர்தல் வாக்குறுதியை (பிரதமர் மாற்றம்) நிறைவேற்றக்கூடாது. அவ்வளவுதான்”.

“ஆனால், ஹராப்பான் தலைவர்கள் தங்கள் பொதுத் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாததற்காக பயங்கரமாகத் தாக்கிப் பேசுவதும் இதே பாஸ் தலைவர்கள் தான்” என்று அவர் கூறினார்.

நாட்டின் வளங்களைத் திருட அரசியல் அதிகாரத்தைப் பயன்படுத்திய ஒரு ஆட்சியாளருடன் பாஸ் கடந்த பொதுத் தேர்தலில் இணைந்ததாக லிம் குற்றம் சாட்டினார். ஆதலால், பாஸ், ஒரு பக்குவமான நிலைக்கு வர வேண்டும் என்றும் லிம் கூறினார்.
பாஸ், மகாதீரை தன் முழு காலத்திற்கு பிரதமராகத் தொடர வலியுறுத்தி நம்பிக்கை வாக்கெடுப்பைத் தொடங்குகிறது.

கடந்த வெள்ளிக்கிழமையன்று, மகாதீர், அவர் இன்னும் “22 ஆண்டுகள்” பிரதமராக இருக்க சிலர் விரும்புவதாகக் கூறினார், ஆனால் நவம்பர் மாதம் கோலாலம்பூரில் நடைபெற்ற ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு (அபெக்) உச்சிமாநாட்டின் முடிவில் அவர் பதவி விலகுவதாக உறுதியளித்துள்ளார்.

கடந்த பொதுத் தேர்தலில் ஹராப்பான், மகாதீரை அதன் தலைவராக ஏற்க ஒப்புக் கொண்டது. ஆனால், அவர் பிரதமராக இருக்கும் காலம் முடிவதற்குள் அன்வாரிடம் அதிகாரத்தை ஒப்படைப்பார் என்ற நிபந்தனையின் பேரில் தான் ஹராப்பான் மகாதீரை அதன் தலைவராக ஏற்க ஒப்புக் கொண்டது. இதற்கான குறிப்பிட்ட தேதி எதுவும் குறிக்கப்படவில்லை.

பிப்ரவரி 21 ம் தேதி நடைபெறும் உச்சக்கூட்டத்தின் போது மாற்றம் திட்டத்திற்கான தேதியை நிர்ணயிப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து விவாதிக்கப்படும் என்று அன்வார் தெரிவித்தார்.