கோவிட்-19: சீனாவின் ஒட்டுமொத்த இறப்பு எண்ணிக்கை 2,000-ஐ தாண்டியுள்ளது

கோவிட்-19: சீனாவின் ஒட்டுமொத்த இறப்பு எண்ணிக்கை 2,000-ஐ தாண்டியுள்ளது

கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து சீனாவின் மத்திய ஹூபே மாகாணத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை செவ்வாய்க்கிழமை நிலவரப்படி 132 அதிகரித்து 1,921 ஆக உயர்ந்துள்ளது என்று மாகாண சுகாதார ஆணையம் இன்று காலை தனது இணையதளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

பாதிப்பின் மையமான ஹூபேயில் மேலும் 1,693 பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளன. இது மாகாணத்தில் மொத்தம் 61,682 பாதிப்புகள் என பதிவாகி உள்ளது.

உலகளவில் இறப்பு எண்ணிக்கை 2,005 ஆக உள்ளது, சீனாவின் பிரதான நிலப்பரப்பில் 2,000 இறப்புகள், மற்றும் பிலிப்பைன்ஸ், ஹாங்காங், தைவான், ஜப்பான் மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளில் தலா ஒரு இறப்பு நிகழ்ந்துள்ளது.

75,122 உறுதிப்படுத்தப்பட்ட பாதிப்புகள் உள்ளன, இதில் 12,624 நோயாளிகள் குணமடைந்துள்ளனர்.

செவ்வாயன்று புதிய இறப்புகளில் பெரும்பாலானவை ஹூபேயின் மாகாண தலைநகர் வுஹானில் நிகழ்ந்தன, அங்கு தான் வைரஸ் தோன்றியதாக நம்பப்படுகிறது.

புதிய கொரோனா வைரஸ் தொற்றுநோயைக் கட்டுப்படுத்தும் நோக்கில், காய்ச்சல் நோயாளிகளைக் கண்டுபிடித்து உதவ, ஹூபே முழுமையான, கடுமையான நடவடிக்கைகளை பலப்படுத்தி மேற்கொள்ளும் என்று மாநில ஊடகங்கள் செவ்வாயன்று செய்தி வெளியிட்டுள்ளன.

அம்மாகாணத்தில் ஜனவரி 20 முதல் மருத்துவர்களை சந்தித்த அனைத்து காய்ச்சல் நோயாளிகளின் பதிவுகளையும் பரிசோதிக்கும். கடைகள் மற்றும் ஆன்லைன் மருந்துக் கடைகளில் இருமல் மற்றும் காய்ச்சல் மருந்துகளை வாங்கிய நபர்களின் பதிவுகளையும் மாகாணம் விசாரிக்கும் என்று கூறப்படுகிறது.

  • ராய்ட்டர்ஸ்