“The Address” அந்நிய தொழிலாளர்கள் ஒடுக்கப்பட்டனரா?

“The Address” அந்நிய தொழிலாளர்கள் ஒடுக்கப்பட்டனரா?

கடந்த வாரம் இடிந்து விழுந்த The Address காண்டோமினியம் திட்டத்தின் வேலை பார்க்கும் அந்நியத் தொழிலாளர்களை கவனிக்காமலும் எந்தவித அக்கறையுமின்றி கைவிடப்பட்டதாக Protect Taman Desa Coalition குழு கூறியுள்ளது.

இருப்பினும், திட்டத்தின் மேம்பாட்டாளர் இதை மறுத்துள்ளார்.

அக்குழுவின் ஊடக ஒருங்கிணைப்பாளர் எம்.குணசேகர், The Address-ல் உள்ள தொழிலாளர்கள் உணவு, மருத்துவ பராமரிப்பு மற்றும் அவர்களின் ஊதியத்தையும் பெறவில்லை என்று கூறினார்.

“சரியான உணவு மற்றும் மருத்துவ கவனிப்பு இல்லாமல், ஏராளமான வெளிநாட்டு தொழிலாளர்கள் அந்த இடத்திற்குள் காணப்பட்டனர்”.

அந்த மேம்பாட்டுத் திட்டத் தளத்திற்குள் ஏராளமான தொழிலாளர்கள் சிக்கியுள்ளனர், அவர்களுக்கு உணவு மற்றும் ஊதியம் இல்லை என்று அத்தொழிலாளர்களுடன் தொடர்பு கொண்டுள்ள அருகிலுள்ள காண்டோ குடியிருப்பாளரின் வெளிநாட்டு பணிப்பெண் கூறியதாக குணசேகர் நேற்று இரவு ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

தொழிலாளர்களுக்கு உணவளித்து உதவுவதற்காக குடியிருப்பாளர்கள் ஒரு தொண்டு நடவடிக்கையை மேற்கொண்டு வருவதாகவும், இது குறித்து விசாரிக்க அதிகாரிகளையும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

இதன் தொடர்பாக, மலேசியாகினி மனிதவள அமைச்சகத்தை தொடர்பு கொண்டுள்ளது.

இதனிடையில், மலாய் மெயில் நாளிதழ், The Address திட்ட மேலாளர் சீமோர் சியூ இந்த குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளதாக மேற்கோளிட்டுள்ளது.

“உண்மையில், எங்கள் தரப்பிலிருந்து ஆட்களும், அனைத்து நிர்வாக உறுப்பினர்களும் இன்னும் தளத்தில் தான் உள்ளனர்,” (“Actually, my people, all the management people are still at the site) என்று சியூ கூறினார்.

அந்நியத் தொழிலாளர்கள் கவனிக்கப்படுகிறார்களா என்று கேட்டதற்கு, சியூ: “நிச்சயமாக, நிச்சயமாக, நிச்சயமாக” (“Of course, of course, of course”) என்று பதிலளித்தார்.

கடந்த வெள்ளிக்கிழமை, காண்டோமினியம் கட்டுமானத்தின் ஒரு பகுதி சரிந்தது. இரண்டு கட்டுமானத் தொழிலாளர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கி பின்னர் மீட்கப்பட்டனர். இதைத் தொடர்ந்து, கட்டுமான வேலைத் திட்டத்தை நிறுத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.