பிரதமர்: தலைவர் மாறினால் நல்ல கொள்கைகள் நீடிக்கும் உத்தரவாதம் இல்லை
ஒரு தலைவரோ அல்லது அரசாங்கமோ மாற்றப்பட்டால் ஒரு நல்ல கொள்கை என்றென்றும் தொடர்ந்து நிலைத்திருக்கும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை என்று பிரதமர் டாக்டர் மகாதீர் முகமது சுட்டிக்காட்டினார்.
இருப்பினும், மோசமான கொள்கைகளை நடைமுறைப்படுத்தும் தலைவரை கவிழ்க்கும் பொறுப்பு மக்களுக்கு உள்ளது என்று மகாதீர் கூறினார்.
“நான் 2002ல் ராஜினாமா செய்வதற்கான முடிவை எடுத்தபோது, அனைத்து திட்டங்களும் வெற்றிகரமாக இருக்கும் என்றும், அது தொடரும் என்றும் நான் நம்பினேன், இதனால் 2020 தூரநோக்கை அடைந்து வளர்ந்த தேசமாக மாற முடியும் என்று நம்பினேன்.
“ஆனால், நான் பதவி விலகிய பின்னர், புதிய தலைவர்கள் தங்கள் சொந்த புதிய வழிகளை அறிமுகப்படுத்த விரும்பியதால் புதிய கொள்கைகளை அறிமுகப்படுத்தினர்” என்று நேற்று இரவு கோலாலம்பூரில் நடந்த ஒரு நிகழ்வில் கேள்வி-பதில் அமர்வின் போது அவர் கூறினார்.
“தலைமையின் மாற்றங்கள் காரணமாக ஒன்றன்பின் ஒன்றாக மோசமடைந்தது. எனவே, ஒரு புதிய தலைமை பொருப்பேற்றவரிடம் ஒரு நல்ல கொள்கை தொடர்ந்து இருக்கும் என்று உத்தரவாதம் அளிக்க முடியாது”.
“ஒரு குறிப்பிட்ட தலைவரால் அறிமுகப்படுத்தப்பட்ட கொள்கை மோசமாக இருந்தால், அந்த தலைவரை ஜனநாயக முறையில் கவிழ்ப்பது மக்கள் பொறுப்பு” என்று மகாதீர் குறிப்பிட்டுள்ளார்.
ஒரு நாட்டின் வெற்றி அதன் குடிமக்களின் குணாதிசியம், கொள்கைகள் மற்றும் அறிவை நம்பியுள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.
ஒரு புத்திசாலித்தனமான சமூகம் எப்போதும் தனக்காக மட்டுமே சிந்திக்காத ஒரு தலைவரைத் தேர்ந்தெடுக்கும், என்று மகாதீர் கூறினார்.
“ஒரு நல்ல நாட்டில் இருக்க விரும்புகிறீர்களா அல்லது அவர்கள் தங்களைப் பற்றி மட்டும் சிந்தித்து கொண்டு, நாட்டை அழிக்கப் போகிறார்களா என்பதை மக்கள் தீர்மானிக்க வேண்டும்.
“எதிர்காலத்தில் அப்படி ஏது நடந்தால், நான் இருக்க மாட்டேன். நான் மேலே இருந்து சுற்றி சுற்றி பறந்து பார்த்துக் கொண்டிருப்பேன்” என்று பிரதமர் நகைச்சுவையாக கூறினார்.