விதிகளுக்கு இணங்குங்கள் அல்லது ராஜினாமா செய்யுங்கள் – மாஸ்லீ

விதிகளுக்கு இணங்குங்கள் அல்லது ராஜினாமா செய்யுங்கள் – மாஸ்லீ

முன்னாள் கல்வி அமைச்சர் மஸ்லீ மாலிக், அட்டர்னி ஜெனரல் டாமி தாமஸை அரசாங்க விதிகளை பின்பற்ற வேண்டும் அல்லது ராஜினாமா செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

அமைச்சரவை உத்தரவுகளை மீறியதாகக் கூறி மஸ்லீயை அமைச்சர் பதவியிலிருந்து ராஜினாமா செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்பட்ட ஒரு மாதத்திற்குப் பிறகு இவர் இவ்வாறு கூறியுள்ளார்.

இன்று ஒரு அறிக்கையில், தமிழீழ விடுதலைப் புலிகள் (LTTE) தொடர்பாக 12 பேர் மீதான குற்றச்சாட்டுகளை கைவிட தாமஸ் எடுத்த முடிவு தவறானது என்றும், ஏனெனில் இந்த குழு இன்னும் பயங்கரவாதிகளாக கருதப்படுகிறது என்ற புத்ராஜயாவின் நிலைப்பாட்டை கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை என்றும் மஸ்லீ கூறியுள்ளார்.

“இது அரசின் முக்கிய சட்ட ஆலோசகராக அட்டர்னி ஜெனரலின் பங்கிற்கு எதிரானது” என்று அவர் மேலும் கூறினார்.

“அரசாங்க கொள்கைகளை மீண்டும் கடைப்பிடிக்கவும், தேசிய பாதுகாப்புக்கு முன்னுரிமை கொடுக்கவும் அல்லது அட்டர்னி ஜெனரல் பதவியை ராஜினாமா செய்யவும் தாமஸை நான் கேட்டுக்கொள்கிறேன்,” என்று அவர் கூறினார்.

சிம்பாங் ரெங்கம் எம்.பி.யாக இருக்கும் மஸ்லீ, கடந்த மாத தொடக்கத்தில் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமதால் கல்வி அமைச்சர் பதவியை ராஜினாமா செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டார்.

பள்ளிகளில் ஜாவி கற்பித்தல், பள்ளிகளுக்கு இலவச இணைய சேவை மற்றும் மாணவர்களுக்கு இலவச காலை உணவு திட்டம் குறித்த அமைச்சரவை உத்தரவுகளை பின்பற்றத் தவறியதற்காக ராஜினாமா செய்யுமாறு மாஸ்லீயை கேட்டுக் கொள்ளப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.