“சீரழிந்த” காட்டுக்கு மறுவாழ்வு கொடுங்கள் – Malaysian Nature Society

“சீரழிந்த” காட்டுக்கு மறுவாழ்வு கொடுங்கள் – Malaysian Nature Society

கோலா லங்காட் (வடக்கு) வனப்பகுதியின் “சீரழிந்த” பகுதிகளை அழிக்காமல் மறுசீரமைக்குமாறு மலேசிய நேச்சர் சொசைட்டி (Malaysian Nature Society (MNS)) சிலாங்கூர் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது.

காட்டுத்தீயால் சேதமடைந்த காடுகளை மறுவாழ்வு செய்ய முடியும் என்றும், கோலா லங்காட் கரி சதுப்பு காடு பாதுகாக்கப்பட வேண்டிய ஒரு தனித்துவமான அம்சத்தைப் பெற்றுள்ளது என்றும் எம்.என்.எஸ் தலைவர் அகமட் இஸ்மாயில் மலேசியாகினியிடம் தெரிவித்தார்.

“ரிசர்வ் காடு சீரழிந்தால், நாம் நமது ரிசர்வ் காட்டைப் பாதுகாக்கவில்லை என்பது என்று அர்த்தமாகிறது; ரிசர்வ் காடுகளைப் பற்றி பொதுமக்களுக்கு நன்கு எடுத்துறைக்கவில்லை என்பதையும் இது காட்டுகிறது.

“கோலா லங்காட் ரிசர்வ் காட்டை மாற்றுவதற்கு சமமான கரி சதுப்பு காடு ஏது இல்லை. அது எப்போதும் அங்கேயே இருந்து உள்ளூர் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும்,” என்று அவர் கூறினார்.

காட்டை ஒரு கலப்பு-வளர்ச்சி மேம்பாட்டு நிலமாக மாற்ற அரசாங்கம் முன்மொழிகிறது என்ற சிலாங்கூர் மந்திரி புசார் அமிருதீன் ஷரியின் கூற்றுக்கு அகமட் பதிலளித்தார்.

40 சதவிகித நிலம் “சீரழிந்ததாகவும்” காட்டுத் தீக்கு ஆளாகக்கூடியதாகவும் இருப்பதாகக் கூறிய அமிருதின், நிலத்தை வனப்பகுதியாக வர்த்தமாணியில் இருந்து வெளியேற்றுவதற்கான திட்டம் (de-gazette) உள்ளது என்றார்.

அமிருதீன் இதற்கு பதிலாக மற்ற காடுகளை வர்த்தமாணி செய்து மாற்றுவதாகவும், சிலாங்கூரில் 30 சதவீத நிலத்தை வன இருப்புகளாக பராமரிப்பதாகவும் உறுதியளித்தார்.

உள்ளூர் ஒராங் அஸ்லி சமூகத்தின் கூற்றுப்படி, கோலா லங்காட் (வடக்கு) வனப்பகுதி பல அழிந்துவரும் விலங்குகளின் தாயகமாக உள்ளது எனவும், இது வேட்டையாடுவதை ஊக்குவிக்கும் என்ற அச்சத்தால் வெளியே சொல்லவில்லை எனவும் கூறியுள்ளனர்.

இருப்பினும், நிலம் வணிகங்களுக்கான ஒரு ஏற்புடைய இடத்தில் அமைந்துள்ளது. இது சைபர்ஜயாவிற்கு மேற்கே KLIAக்கு அருகில் உள்ளது.

இந்த நிலம் எதற்காக பயன்படுத்தப்படும் என்று அமிருதீன் தெளிவுபடுத்தவில்லை. சிங்கப்பூர் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸின் ஒரு அறிக்கை, நிலத்தை மேம்படுத்துபவர்களில் ஒரு அரசகுடும்பத்தையும் மேற்கோள்காட்டி கூறியுள்ளது.