அன்வார், வான் அஜிசா பேரரசரை சந்திக்கின்றனர்

அன்வார், வான் அஜிசா பேரரசரை சந்திக்கின்றனர்

நேற்று நாட்டை உலுக்கிய அரசியல் மாற்றங்களின் வதந்திகள் இன்னும் முடிவுக்கு வரவில்லை. அது இன்றும் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இன்று நடைபெறவிருக்கும் சில நிகழ்ச்சிகளே இதற்குக் காரணம்.

துணைப் பிரதமர் டாக்டர் வான் அஜிசா வான் இஸ்மாயில் மற்றும் அவரது கணவர் அன்வார் இப்ராஹிம் ஆகியோர் மதியம் 2 மணிக்கு தேசிய அரண்மனையில் பேரரசர் யாங் டி-பெர்துவான் அகோங், அல்-சுல்தான் அப்துல்லா ரியாதுடீன் அல்-முஸ்தபா பில்லா ஷாவை சந்திப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதோடு, பாக்காத்தான் கூட்டணியில் ஒரு அங்கமாக உள்ள DAP – தலைநகரில் உள்ள கட்சியின் தலைமையகத்தில் அவசரக் கூட்டத்தையும் நடத்தும் என்று கூறப்படுகிறது.

நேற்று, அரசாங்க மற்றும் பல்வேறு அரசியல் எதிர்க்கட்சிகளின் பல முக்கிய தலைவர்கள் பெட்டாலிங் ஜெயாவில் உள்ள ஒரு ஹோட்டலில் நடந்த சிறப்புக் கூட்டத்தில் கலந்து கொண்டனர். கூட்டத்தின் நோக்கம் குறித்து கேள்விக்குறியாகவே இருந்தது.

நாட்டின் அரசியலை சீரமைக்கும் வதந்திகளுக்கு மத்தியில் பல அரசியல் கட்சிகள் நேற்று தனிக் கூட்டங்களைப் போட்டன.

அந்த இரகசிய கூட்டங்கள், தலைநகரிலும், பெட்டாலிங் ஜெயாவிலும் ஊடகங்களின் கவனத்தை ஈர்த்தன. ஆயினும் அக்கூடங்களின் நோக்கம் குறித்து கட்சித் தலைவர்கள் வாயை திறக்கவில்லை.

முன்னதாக நேற்று, புத்ரா உலக வர்த்தக மையத்தில் (பி.டபிள்யூ.டி.சி) மாலை 4 மணிக்கு, அம்னோ இரண்டு மணி நேர சிறப்பு உயர் சபைக் கூட்டத்தை நடத்தியது.

டாக்டர் மகாதிர் முகமட் தலைமையிலான பெர்சத்து, பெட்டாலிங் ஜெயாவில் உள்ள சிலாங்கூர் அறக்கட்டளை கோபுரத்தில் உள்ள கட்சி தலைமையகத்தில் ஒரு சிறப்புக் கூட்டத்தையும் நடத்தியது. அடன் பின்னர் அவர் அந்த வளாகத்தை விட்டு வெளியேறிய போது பத்திரிக்கையாளர்களுக்கு கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார்.

சபா மற்றும் சரவாக் அரசியல் கட்சிகளைச் சேர்ந்த பல எம்.பி.க்களும் தலைநகரில் கூட்டங்களை நடத்தினர்.

மாலை 5.30 மணி முதல் கொண்டே, தேசிய அரண்மனைக்குள் பல வாகனங்கள் நுழைந்த வண்ணம் இருந்தன. தேசிய அரண்மனையின் சூழ்நிலை பரபரப்பாக இருந்தது. சில காவல் பாதுகாப்புடன் அரண்மனைக்கு வந்தன. சுமார் இரண்டு மணி நேரம் கழித்து அவை அரண்மனையை விட்டு வெளியேறியதும் தெரிந்தது.

அன்வார் நேற்று இரவு புக்கிட் செகாம்பூட்டில் உள்ள தனது இல்லத்தில் நடந்த ஒரு நிகழ்வில், ஒரு புதிய அரசாங்கத்தை அமைப்பதற்கான முயற்சி நடப்பதை அவர் கருதுவதாகவும், அது குறித்த தகவல்களுக்காக காத்திருப்பதாகவும் கூறினார்.