தாமதித்தால் புதிய கூட்டணி தோல்வியடையும் என்று அஞ்சுகிறார் அஸ்மின்.
எதிர்க்கட்சியுடன் புதிய கூட்டணியை உருவாக்கும் திட்டங்கள் ஒத்திவைக்கப்பட்டால் தோல்வியடையும் என்று பொருளாதார விவகார அமைச்சர் அஸ்மின் அலி கவலை தெரிவித்துள்ளார்.
நேற்று இரவு தனது ஆதரவாளர்களுடனான சந்திப்பின் போது அஸ்மின் இதனைக் கூறினார்.
பிரதம மந்திரி டாக்டர் மகாதீர் முகமட் மற்றும் பேரரசர் யாங் டி-பெர்துவான் அகோங் ஆகியோர் புதிய அரசாங்க முன்மொழிவைப் பற்றி விவாதிக்க நேரம் தேவை என்று கூறிய பின்னர், அஸ்மின் இதைத் தெரிவித்துள்ளார்.
நேற்று, அஸ்மின் தனது ஆதரவாளர்களுடன், பெர்சத்து, அம்னோ, பாஸ், சரவாக் கூட்டணி கட்சிகள் மற்றும் வாரிசான் கட்சிகளைச் சேர்ந்த தலைவர்களுடன் தேசிய அரண்மனைக்குச் சென்று, பாராளுமன்றத்தில் தங்களுக்கு பெரும்பான்மை ஆதரவு இருப்பதாகக் கூறியுள்ளனர்.
சந்திப்பின் முடிவுகள் வெளியிடப்படவில்லை, ஆனால் முடிவெடுக்க அதிக நேரம் தேவை என்று அஸ்மின் கூறினார்.
“துன் டாக்டர் மகாதீர் மற்றும் பேரரசர் யாங் டி-பெர்டுவான் அகோங் ஆகியோருக்கு கலந்தாலோசிக்க சிறிது நேரம் தேவைப்படுவதால் அவர்களுக்கு வாய்ப்பு கொடுங்கள்.
“ஆனால் சில தரப்பினர் பாராளுமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்க முயற்சிப்பதனால், அதிக நேரம் எடுத்துக் கொள்ளாதீர்கள் என்று நான் கேட்டுக்கொள்கிறேன். அவர் யார் என்று எனக்குத் தெரியும். அவர் என்னுடைய முன்னால் தலைவரும் கூட” என்று அஸ்மின் கூறியுள்ளார்.
தன்னை ஆதரிக்கும் பி.கே.ஆர். எம்.பி.க்களுக்கு தொலைப்பேசி அழைப்புகள் வருவதாகவும், அவர்களுக்கு துணை பிரதமர், நிதியமைச்சர் உள்ளிட்ட பல சலுகைகள் பேரம் பேசப் படுவதாகவும் அஸ்மின் கூறினார்.
அதனால்தான் புதிய கூட்டணியை அமைக்க அதிக நேரம் எடுத்துக்கொள்ள முடியாது என்று அவர் கூறினார்.
“(நேற்று) பிற்பகல் அகோங்கை சந்தித்த கட்சிகளின் இந்த கொள்கையை நிலைநிறுத்துவதாக உறுதியளித்துள்ளனர். நமது எதிர்காலத்தை சிறப்பாக உறுதிப்படுத்தும் ஒரு புதிய கூட்டணியைக் விரைவில் காண்போம்,” என்று அவர் மேலும் கூறினார்.
சமரசம் ஏதும் இல்லை
புதிய கூட்டணி உருவாக்கப்பட்டால், அது டிஏபி, அமானா மற்றும் பி.கே.ஆர். ஆகிய மூண்ரு கட்சிகளை உள்ளடக்குவது சாத்தியமில்லை. நேற்று இரவு பல அரசியல் கட்சி கூட்டங்களில் இம்மூன்று கட்சிகளும் ஈடுபடவில்லை. அதைத் தொடர்ந்து, அரசருடனான சந்திப்பிலும், ஷெரட்டன் ஹோட்டலில் நடைபெற்ற விருந்திலும் இவர்கள் கலந்து கொள்ளவில்லை.
பி.கே.ஆர். தலைவர் அன்வார் இப்ராஹிம் நேற்றிரவு நடந்த சம்பவங்கள் ஒரு துரோகம் என்று விவரித்தார்.
கூட்டத்தின் போது, புதிய கூட்டணியை உருவாக்க அம்னோ மற்றும் பாஸ் கட்சிகளுடன் இணையவில்லை என்று அஸ்மின் மறுத்துள்ளார்.
நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்ட எந்தவொரு கட்சித் தலைவரும் தொடர்ந்து வழக்குகளை எதிர்கொள்வார் என்று அவர் கூறினார்.
“நாங்கள் சமரசம் செய்ய மாட்டோம். அம்னோ அல்லது பாஸ் உடன் எந்த ஒப்பந்தமும் இல்லை.
“யார் நீதிமன்றத்தில் பலவிதமான குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டாலும், அவர்கள் குற்றச்சாட்டுகளை நீதிமன்றத்தில் எதிர்கொள்வார்கள். இதுதான் எங்களின் நிபந்தனை.
“யார் ஒருவர் குற்றச்சாட்டை எதிர்கொண்டுள்ளாரோ, அவர்கள் நிரபராதிகள் என்று சொல்லும் போதிலும், சட்டத்தின் செயல்முறையின் வழியாக செல்வேண்டும். நீதிமன்றம் தீர்மானிக்கட்டும். அவர்களை காப்பாற்றுவது எங்கள் வேலை அல்ல,” என்று அவர் மேலும் கூறினார்.
நேற்றிரவு ஷெரட்டன் ஹோட்டலில் கூடியிருந்த அரசியல் தலைவர்களில் அம்னோ தலைவர் அகமட் ஜாஹிட் ஹமிடி, பாஸ் தலைவர் அப்துல் ஹாடி அவாங், பெர்சத்து தலைவர் முகிடீன் யாசின் மற்றும் கட்சிகளைச் சேர்ந்த ஏராளமான நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடங்குவர்.
நேற்று இரவே ஒரு அறிவிப்பு வெளியிடப்படவிருந்தது, ஆனால் பின்னர் அது ரத்து செய்யப்பட்டது.