மகாதீர் துரோகம் செய்யவில்லை, அன்வார் தெளிவுபடுத்துகிறார்

மகாதீர் துரோகம் செய்யவில்லை, அன்வார் தெளிவுபடுத்துகிறார்

புதிய கூட்டணி அரசாங்கத்தை உருவாக்கும் முயற்சியில் டாக்டர் மகாதீர் முகமது ஈடுபடவில்லை என்று பி.கே.ஆர். தலைவர் அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.

“அது அவர் அல்ல, அவருடைய பெயர் என் கட்சிக்குள்ளும் வெளியேயும் பயன்படுத்தப்பட்டுள்ளது. அவர் (மகாதீர்) முன்பு கூறியதை மீண்டும் வலியுறுத்தினார், அதில் அவர் சதித்திட்டத்தில் எந்தப் பங்கையும் வகிக்கவில்லை.

“அவர் ஆரம்பத்தில் இருந்தே தெளிவாக உள்ளார். முன்னால் அரசாங்கத்துடன் தொடர்புடையவர்களுடன் அவர் ஒருபோதும் பணியாற்ற மாட்டார்” என்று அன்வார் இன்று பிற்பகல் பெட்டாலிங் ஜெயாவில் உள்ள பி.கே.ஆர். தலைமையகத்தில் செய்தியாளர்களிடம் கூறினார்.

அன்வாரின் முன்னாள் துணை அஸ்மின் அலி, பெர்சத்து தலைவர் முகிதீன் யாசின், பாரிசான், பாஸ், ஜிபிஎஸ் மற்றும் வாரிசன் ஆகியோர் சம்பந்தப்பட்ட இந்த நடவடிக்கையின் பின்னணியில் மகாதீர் தான் உள்ளார் என்ற பரவலான ஊகங்களுக்கு மத்தியில் அன்வார் இதை ஊடகங்களுக்கு தெளிவுப்படுத்தினார்.

இன்று காலை மகாதீரைச் சந்தித்த பி.கே.ஆர். தலைவர், பிரதமர் பதவியை ராஜினாமா செய்ய விரும்புவது பற்றி தனக்குத் தெரியும் என்றும், அவ்வாறு செய்ய வேண்டாம் என்று அவரிடம் கேட்டுக்கொண்டார் என்றும் கூறினார்.

ராஜினாமா பகிரங்கப்படுத்தப்படாததால் இதை முன்னர் வெளியிட முடியவில்லை என்று அன்வார் கூறினார்.

மகாதீரை பதவி விலக வேண்டாம் என்று சமாதானப்படுத்த அவர் முயற்சித்த போதிலும், ஊழல்வாதிகளுடன் தொடர்பு படுத்தப்படுவதற்காக அவர் விரக்தியடைந்துள்ளார் என்றார் அன்வார்.

நான் அவரிடம் கெடிலன் (பி.கே.ஆர்) மற்றும் பாக்காத்தான் ஹராப்பான் சார்பாக கேட்டுக்கொண்டேன்.

இந்த துரோகத்தை ஒன்றாகக் கையாள முடியும் என்று நான் அவரிடம் சொன்னேன். ஆனால், அவர் வித்தியாசமான மனநிலையுடையவர். அவரை ஊழல் செய்தவர்களுடன் தொடர்புபடுத்தும் வகையில் நடத்தப்படக்கூடாது என்று நினைக்கிறார்,” என்று அவர் மேலும் கூறினார் .

மகாதீருடனான சந்திப்பைத் தொடர்ந்து, அன்வார் திருப்தி அடைந்ததாகக் கூறினார்.

நான் தலைமைக் குழுவுடன் சிறப்புக் கூட்டத்தை நடத்துவேன். டாக்டர் மகாதீரின் வீட்டிலிருந்து சில விஷயங்களைப் பற்றி விவாதிக்க வந்திருக்கிறேன்.

பிரதம மந்திரி பதவியை ராஜினாமா செய்வதைத் தவிர, அம்னோவுக்கு மாற்றாக கடந்த பொதுத் தேர்தலுக்கு முன்னர் அவர் தோற்றுவித்த பெர்சத்து என்ற கட்சியின் தலைவராகவும் மகாதீர் விலகினார்.

ஹராப்பானில் இருந்து விலகுவதாக முகிதீன் அறிவித்த சில நிமிடங்களிலேயே அவரது ராஜினாமா செய்தி வந்தது. இந்த நடவடிக்கை மகாதீருக்கும் முகிதீனுக்கும் இடையில் இருந்த முரண்பாடுகளைக் குறிக்கிறது.