புதிய பிரதமர் நியமிக்கப்படும் வரை டாக்டர் மகாதீர் நாட்டை வழிநடத்துவார்

புதிய பிரதமர் நியமிக்கப்படும் வரை டாக்டர் மகாதீர் நாட்டை வழிநடத்துவார்

டாக்டர் மகாதீர் முகமட் இடைக்கால பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளதாக அரசாங்கத்தின் தலைமைச் செயலாளர் முகமட் ஜுகி அலி தெரிவித்துள்ளார்.

இன்று மாலை கோலாலம்பூரில் உள்ள இஸ்தானா நெகாராவில் யாங் டி-பெர்துவான் அகோங் சுல்தான் அப்துல்லா சுல்தான் அஹ்மத் ஷாவை சந்தித்தார் மகாதீர். அவரது ராஜிநாமாவை யாங் டி-பெர்துவான் அகோங் ஏற்றுக் கொண்டுள்ளார்.

“இருப்பினும், Federal Constitution Article 43(2)(a)/மத்திய அரசியலமைப்பின் பிரிவு 43(2) (a)-வின் படி புதிய பிரதமர் நியமிக்கப்படும் வரை மகாதீரை இடைக்கால பிரதமராக நீடிக்கும்படி அரசர் கேட்டுக் கொண்டுள்ளார்.

“எனவே, இந்த காலகட்டத்தில், ஒரு புதிய பிரதமர் நியமிக்கப்பட்டு அமைச்சரவை உருவாகும் வரை மகாதீர் நாட்டின் நிர்வாகத்தை நிர்வகிப்பார்” என்று அவர் ஒரு அறிக்கையில் மேலும் தெரிவித்தார்.

இதற்கிடையில், புதிய அரசாங்கத்தை அமைப்பதற்கு எந்த கூட்டணிக்கு பெரும்பான்மை ஆதரவு உள்ளது என்பதை தீர்மானிக்க யாங் டி-பெர்துவான் அகோங்கிற்கு 10 நாட்கள் வரை ஆகலாம் என்று வட்டாரங்கள் கூறுகின்றன.

பெர்சத்துவில் 26 எம்.பி.க்கள் உள்ளனர், ஆனால் கட்சியின் துணைத் தலைவராக இருக்கும் அவரது மகன் முக்ரிஸ் உட்பட, அவர்களில் சிலர் இப்போது மகாதீருடன் இணைந்துக் கொள்கிறார்கள்.

ஹராப்பான் தலைவர்கள், இன்று காலை மகாதீரை சந்தித்த பின்னர், அம்னோவுடன் இணைந்து பணியாற்ற மகாதீர் விரும்பாததால் புதிய கூட்டணி அமைப்பு குறித்து அவர் வருத்தப்படுவதாகக் கூறினார்.

இருப்பினும், இந்த விஷயத்தில் மகாதீர் தனது மெளனத்தை இன்னும் களைக்கவில்லை.

முன்னதாக, பி.கே.ஆர் தலைவர் அன்வார் இப்ராஹிம், மகாதீரை பதவியில் இருந்து விலக வேண்டாம் என்று கேட்டுள்ளார்.

94 வயதான மகாதீர் பிரதமராக தொடர தங்களது ஆதரவை டிஏபி மற்றும் அமானா தலைவர்களும் உறுதியளித்துள்ளனர்.