டாக்டர் மகாதீரின் அரசாங்கம் எந்த கட்சிக்கும் ஆதரவாக இல்லை

டாக்டர் மகாதீரின் அரசாங்கம் எந்த கட்சிக்கும் ஆதரவாக இல்லை

சில நாட்கள் மெளனமாக இருந்த இடைக்கால பிரதமர் டாக்டர் மகாதீர் முகமது இன்று பிற்பகல் எந்த கட்சிக்கும் சாதகமாக இல்லாத ஒரு அரசாங்கத்தை அமைப்பதாக கூறினார்.

“முடிந்தால் எந்தவொரு கட்சிக்கும் ஆதரவாக இல்லாத ஒரு அரசாங்கத்தை நிறுவ முயற்சிப்பேன். தேசத்தின் நலன்கள் மட்டுமே முதலில் வரும்” என்று அவர் தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பபட்ட சிறப்பு செய்தியில் கூறினார்.

அரசியல் மற்றும் நிர்வாக மறு சீரமைப்பின் பரபரப்பிற்கு மத்தியில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பாக்காத்தான் ஹராப்பான் வீழ்ந்ததும், மாமன்னரை சந்தித்த பின்னர் அவர் இடைக்கால பிரதமராக நியமிக்கப்பட்டார்.

மாமன்னர் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களையும் பேட்டி கண்டார், ஆனால் அவரது முடிவு இன்னும் அறிவிக்கப்படவில்லை.

“என்னை இடைக்கால பிரதமராக நியமிப்பதாக மாமன்னர் கூறியுள்ளார். நான் இப்போது செய்வது பலரால் எதிர்க்கப்படுகிறது, நிராகரிக்கப்படுகிறது என்பதை நான் உணர்கிறேன், ஆனால் சிலர் அதை ஆதரிக்கக்கூடும்.

“மற்றவர்கள் என்னை விரும்பும்படி நான் சொல்லவில்லை. நாட்டிற்கு நல்லது என்று நான் கருதும் ஒன்றை நான் செய்கிறேன், “என்று அவர் கூறினார்.

நாட்டின் பிரச்சினைகளை மறந்துவிட்டு அரசியல் நோக்கம் மட்டுமே உடைய அணுகுமுறையையும் அவர் விமர்சித்தார்.

“அரசியல், அரசியல்வாதிகள் மற்றும் அரசியல் கட்சிகள் நாட்டை அச்சுறுத்தும் பொருளாதார மற்றும் சுகாதார பிரச்சனைகளை நாடு எதிர்கொள்கிறது என்பதை மறந்து விட்டு, அரசியலுக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்” என்று அவர் கூறினார்.