பெர்சே: புதிய மாநில அரசை அறிவிப்பதில் ஜோகூர் அவசர முடிவை எடுத்துள்ளது

பெர்சே: புதிய மாநில அரசை அறிவிப்பதில் ஜோகூர் அவசர முடிவை எடுத்துள்ளது

ஜோகூரில் பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கத்தை மாற்ற, புதிய கூட்டணி அரசாங்கத்தை அறிவித்தது ஒரு அவசர முடிவு என்று பெர்சே இன்று கூறியது.

56 உறுப்பினர்களைக் கொண்ட சட்டமன்றத்தில், புதிய கூட்டணிக்கு 28 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு உள்ளது என்றும், ஹராப்பான் 26 நபர்களும், தங்கள் நிலைப்பாட்டை எடுக்காத இரண்டு சட்டமன்ற உறுப்பினர்களும் உள்ளதாக ஜோகூர் அரண்மனை அறிவித்தது.

“ஹராப்பானுக்கு ஆதரவளிக்க அந்த இருவரும் முடிவு செய்தால், 28-28 எனும் ஆபத்து உள்ளது. அதனால், இந்த நேரத்தில் மாநில அரசாங்கத்தின் அறிவிப்பு அவசர முடிவாக இருக்கலாம்”.

“அடுத்த பிரதமரை நாடாளுமன்றம் எவ்வாறு தேர்ந்தெடுப்பார்கள் என்பதற்கு ஏற்ப, மாநில அரசை யார் உருவாக்க வேண்டும் என்பது குறித்த சிறப்பு மாநில சட்டமன்றக் கூட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர்களை தேர்வுசெய்ய அனுமதிக்குமாறு ஜோகூர் சுல்தானை நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்,” என்று பெர்சே இன்று ஒரு அறிக்கையில் கூறியுள்ளது.

சிம்பாங் ஜெராம் சட்டமன்ற உறுப்பினர் சலாவுதீன் அயூப் (அமானா) மற்றும் புத்ரி வாங்சா சட்டமன்ற உறுப்பினர் மஸ்லான் புஜாங் (பெர்சத்து) ஆகியோர் தங்கள் நிலைபாட்டை இன்னும் தெரிவிக்கவில்லை.

ஜொகூர் ஆட்சியாளர் நேற்று அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களையும் பேட்டி கண்டார். ஆனால் மாமன்னருடன் ஒரு தனி நேர்காணல் இருந்ததால் சலாவுதீனால் ஜோகூர் பேட்டியில் கலந்து கொள்ள முடியவில்லை.

இதற்கிடையில், மஸ்லான், முடிவெடுக்க அதிக நேரம் கேட்டிருந்தார்.

56 சட்டமன்ற உறுப்பினர்களில் 54 பேர் நேர்காணலின் போது கட்சி அடிப்படையில் தங்கள் ஆதரவை வெளிப்படுத்தியிருந்தால், மொத்த வாக்குகள் 27-27 ஆக இருந்திருக்கும்.

இருப்பினும், புதிய கூட்டணிக்கு ஆதரவாக 28-26 வாக்குகள் இருப்பதால், சட்டமன்ற உறுப்பினர்களில் யாரோ PH-இலிருந்து விலகிவிட்டதைக் காட்டுகிறது.