ஒற்றுமை அரசாங்கம் அமைப்பதில் மகாதீர் பெரும்பான்மையை இழந்துவிட்டார்!

துன் மகாதீர் பிரதமர் பதவியைத் துறந்ததால், காலியான அவ்விடத்தை நிரப்ப ஒருவரை தேர்ந்தெடுக்கும் வரை, இடைக்காலப் பிரதமராக துன் மகாதீரை மாமன்னர் நியமித்தார். ஆனால், தற்போது இடைக்காலப் பிரதமரின் பங்கு மற்றும் நோக்கத்தில் ஒரு பெரிய சிக்கல் இருப்பதாகத் தெரிகிறது.

கடந்த பிப்ரவரி 24-ல், எந்தவொரு கட்சியின் தூண்டுதலும் இல்லாமல், துன் மகாதீர் பிரதமர் பதவியை இராஜினாமா செய்தது அனைவரும் அறிந்ததே. அதே நாளில், அவர் இடைக்காலப் பிரதமராக நியமிக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து, இடைக்கால பிரதமராக, அவருக்கு நிர்ணயிக்கப்பட்ட கால அவகாசம் ஏதுமில்லை, அமைச்சரவை நியமனங்கள் மற்றும் பலவற்றை அவரால் செய்ய முடியும் என்று அட்டர்னி ஜெனரல் அறிக்கை வெளியிட்டார்.

அட்டர்னி ஜெனரலின் நிலைப்பாட்டை என்னால் ஏற்க முடியவில்லை, இடைக்கால பிரதமர் என்ற வகையில், மாமன்னர் புதியப் பிரதமரை நியமிக்கும் வரை மட்டுமே துன் மகாதீரால் பதவியில் இருக்க முடியும். ஆக, அவரால் நியமிக்கப்படும் ஓர் அமைச்சரவையும் இடைக்கால அமைச்சரவை உறுப்பினர்களையேக் கொண்டிருக்கும். முறையான ஓர் அமைச்சரவை நிறுவப்படும்போது, நிலைமையை இது மேலும் சிக்கலாக்கும்.

மகாதீரின் கூற்றுப்படி, புதிய அரசாங்கம் அரசியல் கட்சிகள் சார்ந்து இல்லாமல், பல தரப்பினரைக் கொண்டிருக்கும் என்றால், அடுத்து தேர்ந்தெடுக்கப்படும் பிரதமருக்கு இது மிகவும் சிக்கலான ஒன்றாக அமைவதோடு, புதிய மோதல்கள் எழவும் வழிவகுக்கும்.

இருப்பினும், திங்களன்று (பிப்ரவரி 24, 2020) அவருக்குப் பல தரப்பினரின் ஆதரவு உண்டு என்பதை அறிந்த பிறகு, துன் மகாதீர் மிகவும் திமிர்பிடித்தவராகவும் சக்திவாய்ந்தவராகவும் மாறிவிட்டார் என்று தெரிகிறது. காரணம், எதிர்க்கட்சி உட்பட அனைவரும் அவரைப் பிரதமர் பதவியில் நீடிக்கச் சொல்லி கேட்டுக்கொண்டதே. அவரது சொந்தக் கட்சியான பிரிபூமி பெர்சத்து மலேசியக் கட்சியும் (பிபிபிஎம்) அவர் ஓய்வு பெறுவதை நிராகரித்துள்ளது.

துன் மகாதீர் பிரதமராகத் தொடர வேண்டுமென அனைத்து கட்சிகளும் ஒவ்வொன்றாக ஒன்று திரண்டன. அந்நேரத்தில், பங்குச் சந்தை மற்றும் ரிங்கிட்டின் மதிப்பு கடுமையாக வீழ்ச்சியடைந்ததால், இது நாட்டின் நலனுக்காக என்று அனைத்து கட்சிகளும் கூறின.

 

பிப்ரவரி 26-ம் தேதி, துன் மகாதீர் ஓர் அறிவிப்பைச் செய்தார். இந்த அறிவிப்பு முன்கூட்டியே பதிவு செய்யப்பட்டதாகத் தெரிகிறது. பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி மாலை மணி 4.30-க்கு, ஒரு பத்திரிகையாளர் சந்திப்பை நடத்த திட்டமிட்டுள்ளதை அறிந்து, இடைக்கால பிரதமராக துன் மகாதீர், மாலை 4.45 மணிக்கு இந்த அறிவிப்பு இறுதி நேரத்தில் வெளியிட்டுள்ளதாகத் தெரிகிறது. இருப்பினும், பி.எச். இடைக்காலப் பிரதமருக்கு வழிவிட்டு ஒதுங்கியது.

இதில் ஆச்சரியம் என்னவென்றால், இடைக்காலப் பிரதமரின் அறிவிப்பின் போது, அவர் பிரதமராக இருக்க வேண்டும் என்று விரும்புவதாக இரு தரப்பினரும் கூறினர், ஆனால் பத்திரிக்கையாளர் செய்தியின் போது அந்தச் சூழ்நிலை மாறிவிட்டது. பொதுத் தேர்தலை மீண்டும் நடத்த வேண்டும்மென்று பிஎன்-அம்னோ மற்றும் பாஸ் முந்தைய நாள் முடிவை எடுத்து அழைப்பு விடுத்ததோடு, துன் மகாதீருக்கு அளித்த ஆதரவையும் வாபஸ் பெற்றுள்ளனர். இடைக்காலப் பிரதமர் நியமனம் செய்யப்பட்ட ஒரு மணி நேரத்திற்குப் பிறகு, மகாதீருக்குப் பதிலாக அன்வார் இப்ராஹிமைப் பிரதமராக நியமிக்க வேண்டுமென பி.எச். முடிவெடுத்தது.

இதில் ஆச்சரியம் என்னவென்றால், இடைக்காலப் பிரதமரின் அறிவிப்பின் போது, அவர் பிரதமராக இருக்க வேண்டும் என்று விரும்புவதாக இரு தரப்பினரும் கூறினர், ஆனால் பத்திரிக்கையாளர் செய்தியின் போது அந்தச் சூழ்நிலை மாறிவிட்டது. பொதுத் தேர்தலை மீண்டும் நடத்த வேண்டும்மென்று பிஎன்-அம்னோ மற்றும் பாஸ் முந்தைய நாள் முடிவை எடுத்து அழைப்பு விடுத்ததோடு, துன் மகாதீருக்கு அளித்த ஆதரவையும் வாபஸ் பெற்றுள்ளனர். இடைக்காலப் பிரதமர் நியமனம் செய்யப்பட்ட ஒரு மணி நேரத்திற்குப் பிறகு, மகாதீருக்குப் பதிலாக அன்வார் இப்ராஹிமைப் பிரதமராக நியமிக்க வேண்டுமென பி.எச். முடிவெடுத்தது.

ஒரு பிரதம வேட்பாளரை முன்மொழிய, உறுதியான மற்றும் தெளிவான நடவடிக்கை எடுத்த பி.எச்.-இல் தற்போதுள்ள கட்சிகளை நாங்கள் பாராட்டுகிறோம், அதே நேரத்தில், மே 2018-ல், மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றவும் அவர்கள் உறுதிகொண்டிருக்க வேண்டும். பி.எச். கூட்டணியின் பிரச்சினைகள் அவர்களின் அடிப்படை போராட்டத்திலோ அல்லது அவர்களின் தேர்தல் அறிக்கையிலோ இல்லை. உண்மையில், பி.எச். தேர்தல் அறிக்கை பிரபலமானதுதான், ஆனால் பிரச்சனை என்னவென்றால், பி.எச். அவ்வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு முன்னுரிமை வழங்கவில்லை அல்லது பலவீனமாக இருந்துவிட்டது. அதுமட்டுமின்றி, அதிகார மாற்றச் சிக்கல்களில் பெரும்பாலும் சிக்கிக்கொண்டதோடு, இனப்பிரச்சினைகள் சம்பந்தப்பட்ட சிக்கல்களுக்கு முடிவெடுப்பதிலும் பி.எச். கருத்தொற்றுமை இல்லாமல் இருந்தது.

பெரும்பான்மை எம்.பி.-க்களின் ஆதரவு இல்லாததால், ஒற்றுமை அரசாங்கத்தை அல்லது கூட்டணி அரசாங்கத்தை அமைப்பதற்கான அதிகாரத்தைத் துன் மகாதீர் இழந்துவிட்டார் என்று நாங்கள் கருதுகிறோம். எனவே, பிற கட்சிகளிடம் நாட்டின் எதிர்கால அரசியலை ஒப்படைத்துவிட்டு, பதவி விலகுவதே துன் மகாதீருக்குச் சிறந்தது ஆகும். அதிகாரத்தை கைவிட்டு, அமைதியான முறையில் மாற்றத்தை ஏற்படுத்துவதே ஒரு மூத்த அரசியல்வாதியான மகாதீருக்கு விவேகமான செயலாகும். அதைவிடுத்து, இனவெறி அல்லது பிற பிரச்சனைகளைத் தூண்டி, நாட்டில் கொந்தளிப்பை ஏற்படுத்தினால், மக்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்தியவரும் அவரே, அந்த நம்பிக்கையை அழித்தவரும் அவரே என்று குற்றம் சாட்டப்படுவார்.

எழுத்து :- எஸ் அருட்செல்வன், தேசியத் துணைத் தலைவர், மலேசிய சோசலிசக் கட்சி

தமிழாக்கம் :- சாந்தலட்சுமி பெருமாள்,