பாராளுமன்ற சிறப்பு அமர்வு: 112 வாக்குகள் எனும் மந்திர எண்!

பாராளுமன்ற சிறப்பு அமர்வு: 112 வாக்குகள் எனும் மந்திர எண்!

மலேசியாவின் வரலாற்றில் முதல்முறையாக, யார் பிரதமர் ஆவார் என்பதை நாடாளுமன்றம் முடிவு செய்யும்.

நாடு இப்போது மூழ்கியுள்ள அரசியல் நெருக்கடியை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக முயற்சியாக, எம்.பி.க்கள் எட்டாவது பிரதமரைத் தேர்ந்தெடுக்க மார்ச் 2, திங்கள் அன்று பாராளுமன்ற சிறப்பு அமர்வு நடைபெறும் என்று இடைக்கால பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் அறிவித்தார்.

மகாதீர் திங்களன்று பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார். ஆளும் பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை இழந்ததைத் தொடர்ந்து, நாடு ஒரு அரசியல் நெருக்கடியில் மூழ்கியது. மகாதீர் அதே நாளில் பெர்சத்து தலைவர் பதவியையும் ராஜினாமா செய்தார்.

திங்களன்று, மாமன்னர் யாங் டி-பெர்துவான் அகோங், 94 வயதான மகாதீரை இடைக்கால பிரதமராக நியமித்தார்.

உலகளாவிய கோவிட்-19 பாதிப்பை தொடர்ந்து நிழவிய பொருளாதார தாக்கத்தை நிவர்த்தி செய்வதற்காக 2020 பொருளாதார தூண்டுதல் தொகுப்பை வெளியிட்ட பின்னர் புத்ராஜெயாவில் ஒரு செய்தியாளர் கூட்டத்தில் மகாதீர் பேசினார். செவ்வாய்க்கிழமை மற்றும் புதன்கிழமை அனைத்து எம்.பி.க்களையும் நேர்காணல் செய்த பின்னர், அகோங் எந்த தலைவருக்கும் அடுத்த பிரதமராக தனித்துவமான பெரும்பான்மை இல்லை என்று கூறியதாக மகாதீர் அறிவித்தார்.

எனவே, அடுத்த பிரதமரைத் தேர்ந்தெடுப்பதற்கான முடிவை மன்னர் நாடாளுமன்றத்திற்கே விட்டு விடுவதாகச் சொல்லியுள்ளார். இதுவும் தோல்வியுற்றால், பாராளுமன்றம் கலைக்கப்பட வேண்டும், பின், ஒரு விரைவான தேர்தல் நடத்தப்படும், என்றும் கூறினார்.

நேற்றைய பத்திரிகையாளர் சந்திப்பில், மகாதீர் மீண்டும் பெர்சத்து தலைவர் ஆனதாகவும் அறிவித்தார்.

ஒரு எம்.பி. பிரதமராக இருக்க எத்தனை வாக்குகள் தேவைப்படும் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

அரசியலமைப்பு நிபுணர் மற்றும் இணை பேராசிரியர் டாக்டர் ஷம்ரஹாயு அப்துல் அஜீஸ், மத்திய அரசியலமைப்பின் பிரிவு 43 (2) (a)/ Article 43 (2)(a) of the Federal Constitution ‘பெரும்பான்மை’ என்றால் என்ன என்பதை குறிப்பிடவில்லை என்றாலும், குறைந்தபட்ச நம்பிக்கையை, அதாவது நாடாளுமன்றத்தில் 222 எம்.பி.க்களில் 112 வாக்குகளைப் பெறும் வேட்பாளர் பெரும்பான்மையை பெறுவார் என்று அவர் விளக்கினார்.

“சிலர் ‘பெரும்பான்மை’ என்பதற்கு ‘மிக அதிகமான’ என்று அர்த்தம் கொள்கிறார்கள் … உதாரணமாக, மூன்று வேட்பாளர்கள் இருந்தால், அதிக வாக்குகளைப் பெறுபவர் பிரதமராக வேண்டும் என்கிறார்கள். ஆனால் என்னைப் பொறுத்தவரை ஒரு வேட்பாளர் தகுதி பெற 112 வாக்குகளைப் பெற வேண்டும்,” என்று அவர் பெர்னாமாவிடம் சொன்னார்.

பெரும்பான்மை வாக்குகள் மிக முக்கியமானவை என்றும் ஷாம்ரஹாயு கூறினார், ஏனெனில் இது கட்சி சித்தாந்தத்தை அல்லது கொள்கைகளைப் பொருட்படுத்தாமல் ஒரு வேட்பாளர் பிரதமர் பதவியை வகிக்க உகந்தவர், தகுதியுடையவர் என்ற ஆதரவைக் காட்டும் என்றார்.

இதற்கிடையில், மலேசியாவின் சர்வதேச இஸ்லாமிய பல்கலைக்கழக சட்ட நிபுணர் பேராசிரியர் டாக்டர் நிக் அஹ்மத் கமல் நிக் மஹ்மூத்தும் ஷம்ராஹாயுவைப் போன்ற கருத்துக்களைக் கொண்டுள்ளார். வருங்கால பிரதமர் குறைந்தபட்சம் ஒரு எளிய பெரும்பான்மையைப் (a simple majority) பெற வேண்டும், என்றார்.

“பாராளுமன்றத்தில் வாக்களிப்பது என்பது அங்குள்ள பெரும்பான்மையினரின் நம்பிக்கையை பெறும் ஒரு பிரதமரைக் கண்டுபிடிப்பதாகும். எனவே இந்த செயல்முறை மிக முக்கியமானது. பாராளுமன்றம் இத்தகைய பொறுப்பை மேற்கொள்வது இதுவே முதல் முறை என்று நம்பப்படுகிறது.

“ஒவ்வொரு அரசியல் கட்சியும் ஒரு வேட்பாளரை நியமிக்குமா என்பது எனக்குத் தெரியவில்லை … சில தலைவர்களை மையமாகக் கொண்ட அரசியல் நெருக்கடியைக் கருத்தில் கொண்டு, இப்போது சில பெயர்கள் மட்டுமே முன்மொழியப்படும்,” என்று அவர் கூறினார்.

வாக்களிக்கும் செயல்முறை நிலையான கட்டளைகளுக்கு கட்டுப்பட்டு சபாநாயகரால் மேற்பார்வையிடப்படும் என்றும் அவர் கூறினார். “வாக்களிக்கும் முறை வழக்கமாக செய்யப்படுவதைவிட வித்தியாசமாக இருக்கலாம், இதற்கு எந்த ஒரு முன்னோடியும் இல்லை … இது வாக்கு பெட்டி முறையால் இருக்கலாம், அல்லது வேறு வழியிலும் இருக்கலாம் … இது சபாநாயகரை பொருத்துள்ளது” என்று அவர் கூறினார்.

தவிர்க்க முடியாத சூழ்நிலைகள் காரணமாக சிறப்பு அமர்வில் கலந்து கொள்ள முடியாத எம்.பி.க்கள் இருக்கக்கூடும் என்று நிக் அஹ்மத் கமல் கூறினார். ஆனால் நாட்டிற்கு இந்த செயல்முறையின் முக்கியத்துவத்தின் காரணமாக, கட்சிகள் தங்கள் ஒவ்வொரு எம்.பி.க்களும் வாக்களிக்க வருவதை உறுதி செய்ய வேண்டும் என்றார்.

“இதில் முக்கியமானது என்னவென்றால், 222 எம்.பி.க்கள் வரவில்லை என்றாலும், 112 வாக்குகள் உள்ளன… இருப்பினும், நாட்டின் எதிர்காலம் ஆபத்தான நிலையில் இருப்பதால் இது போன்ற ஒரு சிறப்பு அமர்வுக்கு முறையான வருகை மிகவும் அவசியம்” என்று அவர் மேலும் கூறினார்.