நாட்டு மக்களுடன் முகிதீனின் முதல் உரை

நாட்டு மக்களுடன் முகிதீனின் முதல் உரை

நேற்று தனது முதல் நாள் பதவியில் பிரதம மந்திரி முகிதீன் யாசின், தான் அனைத்து மலேசியர்களுக்கும் பிரதமராக இருப்பதாகவும், ஊழல் இல்லாத அமைச்சரவையை நியமிப்பதாகவும் உறுதிமொழி அளித்து தொலைக்காட்சியில் உரையாற்றினார்.

முகிதீன் தான் பிரதமர் பதவியை விரும்பவில்லை என்றும் ஒரு நெருக்கடியைத் தீர்க்கவே களத்தில் இறங்கினார் என்றும் கூறினார்.

தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பப்பட்ட ஒரு சிறப்பு செய்தியில், முகிதீன் இந்த நியமனம் தேர்தல் முறையில் அல்லாமல், மாறாக சபையின் பிரதிநிதிகள் ஆதரவால் நடந்துள்ளது தெரியும் என்று கூறினார்.

“மலேசியாவில் பாராளுமன்ற ஜனநாயகத்தின் கொள்கைகளுக்கு இணங்க இது மத்திய அரசியலமைப்பால் அனுமதிக்கப்பட்ட ஒரு நடைமுறை”.

“கடந்த ஒரு வாரமாக நம் நாட்டைப் பாதித்த அரசியல் கொந்தளிப்பில் இருந்து, நிச்சயமாக நம் நாட்டை சரியான பாதையில் திரும்ப கொண்டுவர விரும்புவீர்கள் என்பதை நான் அறிவேன்”.

“நம் நாடு அதிக அரசியல் கொந்தளிப்பிற்குள் இழுக்கப்படுவதை நீங்கள் நிச்சயமாக விரும்பமாட்டீர்கள்” என்று கூறினார்.

யாருடனும் மோதும் எண்ணம் தனக்கு இல்லை என்று முகிதீன் கூறினார்.

“எனது நேர்மை கேள்விக்குறியாக இருக்கக்கூடாது என்பதற்காக உண்மையில் என்ன நடந்தது என்பதற்கான ஒரு சிறிய விளக்கத்தை உங்களுக்கு வழங்க நான் விரும்புகிறேன். நான் பிரதமர் பதவிக்கு ஆசைப்படவில்லை. இரு பிரதமர் வேட்பாளர்களுக்கும் சபை பிரதிநிதிகளின் பெரும்பான்மை ஆதரவு இல்லாதபோதுதான் நான் முன் வந்தேன்” என்று முகிதீன் கூறினார்.

‘டாக்டர் மகாதீர் பெரும்பான்மை ஆதரவைப் பெறத் தவறிவிட்டார்’

பெர்சத்து, பாரிசான் மற்றும் பாஸ் கூட்டணியின் எட்டாவது பிரதமராக முகிதீன் நேற்று பதவியேற்றார். அவருக்கு சரவாக் கட்சி (ஜி.பி.எஸ்) ஆதரவும் கிடைத்தது.

எவ்வாறாயினும், டாக்டர் மகாதிர் முகமட், கடந்த வாரம் முதல் முகிதீன் அரசியல் கொந்தளிப்பை ஏற்படுத்தியதாக குற்றம் சாட்டினார். முகிதீன் பி.கே.ஆர் தலைவர் அன்வார் இப்ராஹிமை, நெருக்கடியைத் தூண்டுவதற்குப் பயன்படுத்தினார் என்று குற்றம் சாட்டினார்.

முஹைதீன், ஆரம்ப நாட்களில், அவரும் அனைத்து பெர்சத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் டாக்டர் மகாதீருக்கு பிரதமராக வலுவான ஆதரவை வழங்கியதாக கூறினார்.

“ஆனால் துரதிர்ஷ்டவசமாக அவர் சபையின் மற்ற உறுப்பினர்களிடமிருந்து பெரும்பான்மையின் ஆதரவைப் பெறத் தவறிவிட்டார். இது பிப்ரவரி 28, 2020 அன்று இஸ்தானா நெகாரா வெளியிட்ட அறிக்கையில் விளக்கப்பட்டுள்ளது” என்று முகிதீன் கூறினார்.
எனவே, பெரும்பான்மையான சட்டமன்ற உறுப்பினர்களின் நம்பிக்கையைப் பெறக்கூடிய மற்றொரு வேட்பாளரை முன்வைக்க பேரரசர் யாங் டி-பெர்டுவான் அகோங் கட்சித் தலைவர்களை அழைத்ததாக அவர் கூறினார்.

“அந்த நேரத்தில் பிரதம மந்திரி வேட்பாளராக எனது பெயர் பெர்சத்து கட்சியின் சபை உறுப்பினர்கள், மற்றும் பிற கட்சித் தலைவர்களால் பரிந்துரைக்கப்பட்டது”.

“ஒரு முடிவை எடுப்பதற்கு முன் ஆழமாக சிந்திக்க நான் நேரம் எடுத்துக்கொள்வேன். எனக்கு வேறு என்ன தேர்வு இருந்தது? பெரும்பான்மை ஆதரவு இல்லாத துன் டாக்டர் மகாதீருக்கு தொடர்ந்து ஆதரவளிப்பதா அல்லது பிரதமர் பதவியை எற்பதா?

“நான் துன் டாக்டர் மகாதீருக்கு தொடர்ந்து ஆதரவளித்தால், அரசியல் கொந்தளிப்பு தொடரும். பாராளுமன்றம் கலைக்கப்பட வேண்டும், பொதுத் தேர்தல் நடத்தப்பட வேண்டும்” என்று அவர் கூறினார்.

பின்னர் மகாதீரைச் சந்தித்து தனது ஆதரவைக் கேட்டதாகவும், இதற்கு இரண்டு கட்சித் தலைவர்களும் சாட்சியாக இருந்தனர் என்றும் முகிதீன் கூறினார்

கூட்டத்தின் போது, பெரும்பான்மையினரின் ஆதரவைப் பெற்றால் மகாதீர் அவரை ஆதரவளிப்பதாக ஒப்புக் கொண்டதாக அவர் கூறினார்.

நன்றாகக் கேளுங்கள், நான் ஒரு துரோகி அல்ல

பலர் அவர் மீது கோபமாக இருப்பதை அறிவதாகவும், அவரை ஒரு துரோகி என்று முத்திரை குத்தியதாகவும் முகிதீன் கூறினார்.

“நான் ஒரு துரோகி அல்ல. என் நாட்டை தொடர்ந்து வீழ்ச்சியடையாமல் காப்பாற்றுவதே எனக்கு முக்கியம்”.

முகிதீன் தனது சிறப்பு செய்தியில், நாட்டுக்கு செய்த சேவைக்காக மகாதீருக்கு நன்றி தெரிவித்தார்.