அஸ்மினின் ‘துரோகம்’ குறித்த கேள்வியை, தியான் சுவா திசை திருப்பினார்.
பி.கே.ஆரின் துணைத் தலைவர் தியான் சுவா, கடந்த வாரம் பி.கே.ஆரில் தனது முன்னாள் கூட்டாளிகளான அஸ்மின் அலி மற்றும் ஜுரைடா கமருதீனின் நடவடிக்கைகள் பற்றிய கேள்வியைத் திசை திருப்பினார்.
மாறாக, புதிய அரசாங்கத்தின் எதிர்காலம் மற்றும் திசை தெளிவாக இல்லை என்று அவர் பதிலளித்தார்.
“ஒரு தெளிவான திசையைக் காண முடியவில்லை. இந்த புதிய அரசாங்கம் தொடருமா என்பதை கூட என்னால் தீர்மானிக்க முடியவில்லை. நமக்குத் தெரியாது, ஏனென்றால் பிரதமராக தொடர முகிதீன் யாசினுக்கு பாராளுமன்றத்தில் பெரும்பான்மை இருக்கிறதா என்பதே ஒரு சவாலாக இருக்கும்”.
“இந்த புதிய அமைச்சரவையில் இதற்கு முன்னர் தங்கள் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்ததாகக் கருதப்பட்டவர்கள், ஊழலில் ஈடுபட்டவர்கள் போன்றோர் மீண்டும் தலைமைக்குத் திரும்புவார்களா? அதுவும் நமக்குத் தெரியாது,” என்று இன்று சினார் ஹரியானுக்கு அளித்த பேட்டியில் கூறினார்.
டாக்டர் மகாதிர் முகமட் பிரதமர் பதவியை ராஜினாமா செய்த பின்னர் பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கம் வீழ்ந்தது. அஸ்மின் மற்றும் ஜுரைடா கடந்த வாரம் நடந்த ஆட்சி கவிழ்ப்பு முயற்சியில் முக்கிய பங்கு வகித்தனர்.
அஸ்மின் மற்றும் ஜுரைடா பின்னர் பெர்சத்துவில் இணைந்துள்ளனர், இப்போது அம்னோ மற்றும் பாஸ் அடங்கிய முகிதீன் தலைமையிலான கூட்டணியின் ஒரு பகுதியாக உள்ளனர்.
அஸ்மினுடன் நெருக்கமாக இணைந்திருந்த சுவா, யார் ஆட்சியில் இருந்தாலும், 2018 இல் ஹராப்பான் ஆரம்பித்த சீர்திருத்த முயற்சிகளைத் தொடர வேண்டும் என்று கூறினார்.
2018ஆம் ஆண்டில் அரசாங்கத்தை அமைப்பதற்கான மக்கள் ஆணையைப் பெற்றவர்களையும் “நிர்வாக குழுவிலிருந்து” விலக்கப்படக்கூடாது என்றார்.
“அவர்களை உள்ளடாகாமல் போனால், அது வாக்காளரின் உரிமைகளை மறுப்பதாக இருக்கும்”.
“எந்த நிர்வாகக் குழுவாக இருந்தாலும் சரி, அது முகிதீன் அல்லது மகாதீர் தலைமையில் இருந்தாலும் கூட, கடந்த தேர்தலில் மக்கள் ஆணையைப் பெற்ற குழுவை இணைக்க வேண்டும் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன்”.
“அவர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள்” என்று அவர் கூறினார்.
சுவா, நேர்காணலின் போது, ஒரு பாகுபாடற்ற அரசாங்கத்தை அமைப்பதற்கான மகாதீரின் ஆலோசனைக்கு ஆதரவு தெரிவித்தார்.
நம்பிக்கையில்லா வாக்கெடுப்பில் அவர் யாரை ஆதரிப்பார் என்ற கேள்வியைக் கேட்டபோது, அந்த முன்னாள் பத்து எம்.பி., பி.கே.ஆர் உறுப்பினராக, மகாதீரை ஆதரிப்பார் என்று கூறினார்.