காவல்துறை ‘நடுநிலை வகிக்க’ வேண்டும்

காவல்துறை ‘நடுநிலை வகிக்க’ வேண்டும், ஆர்வலர்கள் மீதான விசாரணையை நிறுத்த வேண்டும் என்றும் சிவில் சமூக குழுக்கள் அழைக்கின்றன.

50 சிவில் சமூக அமைப்புகளின் குழுக்கள், புதிய அரசாங்கத்தை அமைப்பது குறித்து வெளிப்படுத்திய அதிருப்தி நடவடிக்கைகளை கையாள்வதில் நடுநிலை வகிக்குமாறு காவல்துறையினருக்கு அழைப்பு விடுத்துள்ளது. பேச்சு சுதந்திரம் என்பது முடியாட்சி அரசியலமைப்பின் கீழ் அனுமதிக்கப்பட்டது என்பதை வலியுறுத்துகிறது.

“பிப்ரவரி 23 முதல், மக்கள் ஆணைக்கு துரோகம் இழைத்தல், கட்சி-தாவுதல், பின் கதவு அரசாங்கம் அமைத்தல், போன்ற செயல்களை எதிர்க்கும் வகையில் அமைதியாக பேரணி அல்லது கூட்டங்கள் மூலம் எதிர்ப்பு தெரிவிக்கும் குடிமக்கள், அகோங்கிற்கு அவமரியாதை செலுத்துகின்றனர் என்று பொருள்படாது” என்று அக்குழுக்கள் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளன.

இந்த அறிக்கை, பெர்சே, சுவாராம், தெனகனிதா, இஸ்லாம் சகோதரிகள் மற்றும் ஒராங் அஸ்லி குழுக்கள், மத அடிப்படையிலான தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர் மற்றும் தொழிலாளர் உரிமைகள் அமைப்பு உள்ளிட்ட பலதரப்பட்ட குழுக்களால் கூட்டாக வெளியிடப்பட்டது.

“Article 43(2)(a) of the Federal Constitution/அரசியலைப்பு சட்டம் பிரிவு 43(2)(a) கீழ், சபையின் பெரும்பான்மையான உறுப்பினர்களின் ஆதரவை பெற்ற ஒரு நபரை அமைச்சரவைக்கு பிரதமராக தலைமை தாங்க நியமிக்க அகோங்கிற்கு உரிமையுள்ளது” என்று அவர்கள் அறிவதாகக் கூறியுள்ளனர்.

எவ்வாறாயினும், எந்தவொரு பிரதமரின் சட்டபூர்வமான தன்மையை ஒரு நம்பிக்கையில்லா தீர்மானத்தை நிறைவேற்றுவதன் மூலமாகவோ, நம்பிக்கையின் தீர்மானத்தை நிராகரிப்பதன் மூலமாகவோ அல்லது பட்ஜெட்டை நிராகரிப்பதன் மூலமாகவோ பாராளுமன்றத்தால் சவால் செய்யப்படலாம் அல்லது மறுக்கப்படலாம் என்று அவர்கள் கூறியுள்ளனர்.

“அவ்வாறு செய்யும்போது, பாராளுமன்ற உறுப்பினர்கள் அகோங்கிற்கு அவமரியாதை செலுத்துகிறார்கள் என்றாகாது. மாறாக, மக்கள் ஆணை முறையாக பிரதிநிதித்துவம் செய்யப்படுவதை உறுதி செய்வதன் மூலம் அவர்கள் விசுவாசமான குடிமக்களாக இருக்கிறார்கள்” என்று குழுக்கள் தெரிவித்தன.

“நியாயமான கருத்துக்கள் நாகரீகமான முறையில் வெளிப்படுத்தப்பட்டால், கூட்டங்கள் அமைதியாக ஒருங்கிணைக்கப்பட்டால், அது முடியாட்சி அரசியலமைப்புக்கு (constitutional monarchy) முற்றிலும் இணங்கி பயனளிப்பதாகவும் அமையும்.

“இந்த நடவடிக்கைகளை கண்கானிப்பதன் மூலம், அகோங் ஒரு சிறந்த மதிப்பீடு செய்து பொதுக் கருத்தைக் கருத்தில் கொள்வதற்கும் உதவுகின்றன” என்று குழுக்கள் தெரிவித்தன.

“எனவே, காவல்துறை இந்த விஷயத்தில் நடுநிலை வகிக்க வேண்டும். முகிதீன் யாசின் பிரதமராக நியமிக்கப்பட்டுள்ள நிலையில், அவர் நியமனம் செய்யப்பட்டிருப்பது நீதிமன்றத்தால் செல்லுபடியாகாது எனப்படக்கூடும் அல்லது பாராளுமன்றத்தால் நிராகரிக்கப்படக்கூடும்.

“காவல்துறையினர் தற்போதைய முகிதீனின் அரசாங்கத்திற்கு சேவை செய்ய வேண்டும் தான், ஆனால் அவரது நியமனம் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்பதில் ஒரு பாகுபாடான நிலைப்பாட்டை எடுக்கக்கூடாது. அவரது நியமனம் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்று வழியுறுத்தக்கூடாது.

“முடியாட்சியின் பெயரில் காவல்துறையை அரசியலாக்குவது முடியாட்சி அரசமைப்புக்கும் காவல்துறையினருக்கும் பெரும் அவதூறாக இருக்கும்”. கருத்துகளை வெளிப்படுத்தவும், மற்றும் ஒன்று கூடவும் உள்ள உரிமையை காவல்துறை மதிக்கும் என்று மார்ச் 2ம் தேதி காவல்துறை இன்ஸ்பெக்டர் ஜெனரல் அப்துல் ஹமீத் படோர் அளித்த வாக்குறுதியை குழுக்கள் வரவேற்றன.

கடந்த வாரம் அமைதியான கூட்டங்களில் கலந்து கொண்ட ஆர்வலர்கள் மீதான விசாரணையை நிறுத்தவும் அவர்கள் காவல்துறையினரிடம் கேட்டுக் கொண்டனர்.

ஜனநாயகம் குறித்த மிகுந்த அக்கறையில், முடியாட்சி மீது அதிகப்படியான கருத்துக்களை தெரிவித்தவர்கள் மீது குற்றச்சாட்டுகளை சுமத்த வேண்டாம் என்று அவர்கள் காவல்துறைக்கு அழைப்பு விடுத்தனர்.

“சுதந்திரமான பேச்சுக்கு பங்கம் விளைவிக்கக்கூடிய நடவடிக்கைகளை தவிர்க்க வேண்டும் என்றும், கருத்து தெரிவிப்பதில் விவேகத்தையும் நாகரிகத்தையும் கடைபிடிக்குமாறும் நாங்கள் நெட்டிசன்களிடம் வேண்டுகோள் விடுக்கின்றோம்” என்று குழுக்கள் மேலும் தெரிவித்தன.