டாக்டர் மகாதீர்: முகிதீன், நஜிப்பை தேர்வு செய்துவிட்டார்

டாக்டர் மகாதீர்: முகிதீன் நஜிப்பை தேர்வு செய்துவிட்டார்

முகிதீன் யாசின் இன்று பிரதம மந்திரியாக காரணம், அவர் டாக்டர் மகாதீர் முகமட் உடன் பணிபுரிவதை விரும்பாமல் நஜிப் அப்துல் ரசாக் உடன் இணைந்து பணியாற்றத் தேர்ந்தெடுத்தார், என்று மகாதீர் ஒர் உரையில் கூறினார்.

“அவர் நஜிப்பைத் தேர்ந்தெடுத்தார், அவர் என்னைத் தேர்வு செய்யவில்லை” என்று முன்னாள் பிரதமர் கூறினார், என்று பக்காத்தான் ஹராப்பான் வீழ்ச்சிக்கு வழிவகுத்த நிகழ்வுகளை விவரித்தார்.

“கடந்த பொதுத் தேர்தலில், நஜிப் தலைமையிலான ஒரு கிளெப்டோக்ராடிக் அரசாங்கத்தை தோற்கடிக்க நாம் அனைவரும் ஒன்றிணைந்தோம். மக்கள் கோபமடைந்து, அவரை தோற்கடிக்க முடிந்தது.

“இருப்பினும், தோற்கடிக்கப்பட்ட பின்னர் அவர் மத சார்பான விடயங்களில் விளையாடினார். சீனர்களால் டிஏபி-யினால் ஒடுக்கப்பட்ட மலாய்காரர்களை பாதுகாப்பதாக அவர் கூறினார்.

“முதலில், அவர் பாஸ் கட்சியின் ஆதரவைப் பெற்றார். அவர்கள் ஒன்றாக வேலை செய்தனர். ஆனால் அது ஒரு அரசாங்கத்தை அமைப்பதற்கு போதுமானதாக இல்லை. அவர்கள் பெர்சத்து உறுப்பினர்களையும் தலைவர்களையும் அழைத்துச் செல்ல வேண்டும் என்று முடிவெடுத்தனர்”, என்று மகாதீர் கூறினார்.

“பெர்சத்து தலைவர்கள் என்னை ஹராப்பானை நிராகரிக்க வேண்டும் என்று விரும்பினார்கள். ஆனால் ஹராப்பான் என்னை ஆதரித்தபோது நான் ஏன் நிராகரிக்க வேண்டும்? என்னை ஆதரவளிக்கும் ஒரு சபையும் இருந்தது. ‘ஒரு நாள் நான் பதவி விலகுவேன், பிறகு நீங்கள் என்ன செய்ய விரும்புகிறீர்களோ அதைச் செய்யுங்கள்’ என்று நான் முகிதீனிடம் சொன்னேன்”.

“ஆனால் முகிதீன் ‘அது இப்போதே இருக்க வேண்டும்’ என்று கூறினார். முகிதீனால் காத்திருக்க விரும்பவில்லை. அது இப்போது இருக்க வேண்டும் – நாங்கள் ஹராப்பானில் இருந்து வெளியேறி ஒரு மலாய் அரசாங்கத்தை உருவாக்குவோம், என்றார்.

“பாஸ் உடன் பணிபுரிவது கூட சரி பரவாயில்லை என்று நினைத்தேன். ஆனால் அம்னோவுடன் பணிபுரிவதா? நாம் அவர்களையும் அவர்களின் கிளெப்டோக்ராடிக் அரசாங்கத்தையும் தோற்கடித்தோம். எதிரி நஜிப் உடன் பணிபுரிவதா? நான் அதை செய்ய தயாராக இல்லை.

“ஆனால் முகிதீன் நஜிப், ஜாஹித் ஹமிடி, தெங்கு அட்னான் தெங்கு மன்சோர், அஜீஸ் அப்துல் ரஹீம், ரோஸ்மா (மன்சோர்) ஆகியோருடன் இணைந்து பணியாற்றத் தயாராக இருந்தார் – நான் அவர்களுடன் எவ்வாறு பணியாற்ற முடியும்? அவர்களில் பலர் இன்னும் ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு நடுவே உள்ளனர்.

“பின்னர், ஹராப்பான் என்னை நிராகரித்து அன்வாரை பிரதமர் வேட்பாளராக நியமித்தது. அவர்கள் என்னை மீண்டும் ஆதரிக்கும் நேரத்தில், அது மிகவும் தாமதமானது. அதனால்தான் இன்றைய பிரதமர் முகிதீன் யாசின்” என்று மகாதீர் கூறினார்.

“நாம் ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு, ஒற்றுமை நீங்கின் அனைவருக்கும் தாழ்வு” என்று அவர் விவரித்தார். இறுதியில், பெர்சத்துக்குள்ளே “விவாகரத்து” செய்தவர் முகிதீன் தான் என்று கூறினார்.

“ஒரு நண்பர் உங்கள் முதுகில் குத்தும்போது, அது வலிக்கிறது,” என்று அவர் மேலும் கூறினார்.

மலேசியா இப்போது எதிர்கொள்ளும் இரண்டு பெரிய சவால்களை விட அரசியல் முக்கியமல்ல என்று மகாதீர் தொடர்ந்து கூறினார் – பொருளாதார வீழ்ச்சி மற்றும் கோவிட் -19 வெடிப்பு.

“இந்த இரண்டு சவால்களையும் எதிர்கொள்ள விரும்பினால், இது அரசியலுக்கான நேரம் அல்ல. நாம் அமைதியாக இருக்க வேண்டும்,” என்று அவர் மேலும் கூறினார்.