சோஸ்மா தடுப்புக்காவலை மறுபரிசீலனை செய்க – பி.எஸ்.எம்
சிறிய குற்றங்களுக்காக சிறையில் அடைபட்டிருக்கும் சோஸ்மா கைதிகளின் வழக்குகளை அவசரமாக பரிசீலிக்குமாறு புதிய ஏ.ஜி இட்ரஸ் ஹருனுக்கு பிஎஸ்எம் அழைப்பு விடுத்துள்ளது.
“இட்ரஸ் ஹருனை புதிய அட்டர்னி ஜெனரலாக நியமித்ததை பிஎஸ்எம் வரவேற்கிறது. அவர் தனது கடமையை பயமோ ஆதரவோ இன்றி நியாயத்தோடு நிறைவேற்றுவார் என்று நம்புகிறோம்” என்று பிஎஸ்எம் துணைத் தலைவர் எஸ்.அருட்செல்வன் இன்று மலேசியாகினியிடம் தெரிவித்தார்.
இந்த சட்டத்தின் கீழ் 1,000க்கும் மேற்பட்டோர் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக சுவாராமின் நிர்வாக இயக்குனர் சிவன் துரைசாமி மேற்கோளிட்டுள்ளதாக அருள் கூறுகிறார்.
இஸ்லாமிய அரசு பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வைத்திருந்த பலர் சோஸ்மாவின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.
“புதிய ஏ.ஜி., சோஸ்மாவின் கீழ் இன்னும் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களை மறுபரிசீலனை செய்வது மிகவும் முக்கியமானதாக இருக்கும். அப்பாவி மக்களை தடுத்து வைப்பதும் அவர்களின் சுதந்திரத்தை மறுப்பதும் ஒரு அடிப்படை மனித உரிமை மீறலாகும்”.
பிப்ரவரி 21 ம் தேதி, முந்தைய ஏ.ஜி. டாமி தாமஸ், செயலிழந்த தமிழ் ஈழ விடுதலைப்புலி இயக்கத்துடன் தொடர்புடையதாக குற்றம் சாட்டப்பட்ட 12 சோஸ்மா கைதிகளுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை நிறுத்திய முடிவை பி.எஸ்.எம் வரவேற்றதாக அருட்செல்வன் கூறினார்.
“இதேபோன்ற குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளும் மற்ற கைதிகளின் அவலநிலை குறித்து தாமஸுக்கு ஒரு மகஜரை சமர்ப்பிக்கும் பணியில் நாங்கள் ஈடுபட்டிருந்தோம். அத்துடன் வரவிருக்கும் நாடாளுமன்ற அமர்வில் இந்தச் சட்டத்தை ரத்து செய்ய அழைப்பு விடுக்க முனைவோம்” என்று அருள் கூறினார்.
ஒரு நபர் மீது குற்றம் சாட்டப்படுவதற்கு முன்பாக, 28 நாட்களுக்கு காவலில் வைக்க சோஸ்மா அனுமதிக்கிறது.
குற்றம் சாட்டப்பட்டதும், தண்டனைச் சட்டத்தின் (Penal Code) கீழ் வழக்கு விசாரணைக்கு உட்படுத்தப்படும்போது அந்நபர் தொடர்ந்து சிறையில் வைக்கப்படுவார்.