கொரோனா வைரஸை Pandemic என்று குறிப்பிட காரணம் என்ன? – விரிவான விளக்கம்
உலக சுகாதார நிறுவனம் கொரோனா வைரஸை உலகளவில் பரவும் தொற்றாக அறிவித்துள்ளது.
இந்த தொற்று என்னும் பதத்தை தற்போது உலக சுகாதார நிறுவனம் மாறுபட்ட பொருளிலேயே பயன்படுத்துகிறது.
Pandemic என்றால் என்ன?
Pandemic என்பது உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் ஒரே நேரத்தில் மக்களிடையே பரவும் தொற்றாகும்.
உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ரோஸ், வைரஸை தடுக்க நடவடிக்கை எடுக்காமல் இருக்கும் நிலையின் ஆபத்தை விவரிக்கவே இந்த பதம் இப்போது பயன்படுத்தப்படுகிறது எனக் கூறியுள்ளார்.
ஒரு வைரஸ், மக்களிடமிருந்து மக்களுக்கு எளிதாக பரவினால் அது தொற்று எனப்படுகிறது.
கடைசியாக 2009-ல் வந்த பன்றி காய்ச்சல் உலகளவில் பரவும் தொற்றாக அறிவிக்கப்பட்டது. இதில் பல்லாயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர்.
மேலும் கொரோனாவுக்கு தடுப்பு மருந்தும் இல்லை, வேறு சிகிச்சையும் இல்லை. இது உலகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது.
கொரோனாவால் இப்போது 114 நாடுகளில் மொத்தம் 1,18,000 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மருத்துவர் டெட்ரோஸ் கூறுகையில், சில நாடுகள் கட்டுப்படுத்தும் திறன் இல்லாமலும் ,வளம் இல்லாமலும், பிரச்சனைகளை தீர்க்க முடியாமலும் போராடிக் கொண்டிருக்கின்றன என்கிறார்.
எனவே உலக சுகாதார நிறுவனம் அனைத்து நாடுகளிடமும்
உடனடி சிகிச்சை தரும் முறையை உயர்த்தவும்
மக்கள் தங்களைத் தாங்களே காப்பாற்றி கொள்ளும் முறை குறித்து அவர்களுக்கு எடுத்துரைக்கவும்
கொரோனா வைரஸ் எனப்படும் கோவிட்-19-ஆல் பாதிக்கப்பட்டவர்களை கண்டறிந்து, தனிமைப்படுத்தி, சோதனைக்குள்ளாக்கி அவர்களுக்கு சிகிச்சை வழங்கவும் எடுத்துரைப்பதாக கூறியுள்ளது.
இவ்வாறு ஒரு நோயை தொற்று என அறிவிப்பது புதிது கிடையாது. உலகம் முழுவதும் பரவிய பல நோய்கள் பல்வேறு காலங்களில் தொற்று என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்பானீஷ் ஃப்ளூ (flu)
1918-ல் H1N1 வைரஸால் ஏற்பட்ட காய்ச்சல் காரணமாக சுமார் 50 மில்லயன் மக்கள் உயிரிழந்தனர். இது ஸ்பானீஷ் ஃப்ளூ எனப்பட்டது குறிப்பாக 15 வயது முதல் 34 வயதுக்குப்பட்டோர் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.
ஏசியன் ஃப்ளூ (flu)
1957ல் சிங்கப்பூரில் முதன்முறையாகக் கண்டறியப்பட்டது. இதில் உலகம் முழுவதும் 11 லட்சம் பேர் உயிரிழந்தனர்.
ஹாங்காங் ஃப்ளூ (flu)
1968ல் ஹாங்காங்கில் 5 லட்சம் பேர் இந்த காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது பின் ஆசிய கண்டத்திலும் ஐரோப்பாவிலும் பரவியது. வியட்நாம் போரில் கலந்து கொண்ட அமெரிக்கப் படை வீரர்கள் வீடு திரும்பிய போது அவர்களுக்குக் காய்ச்சல் தொற்று ஏற்பட்டது. இதன் பின் பல்லாயிரக்கணக்கான மக்கள் அமெரிக்காவில் இந்த தொற்று நோயால் மடிந்தனர்.
பன்றி காய்ச்சல்
2009ல் ஏற்பட்ட பன்றி காய்ச்சலால் உலகில் 2 லட்சம் பேர் வரை இறந்தனர். இந்த நோய் முதலில் மெக்சிகோவில் கண்டறியப்பட்டது. இந்த காய்ச்சலைப் பரப்பும் வைரஸ்கள் பன்றிகளைத் தாக்கிய வைரஸ்கள் போன்று இருந்தது. இந்த காய்ச்சலால் தாக்கப்பட்டவர்களில் சிலர் மட்டுமே உயிரிழந்தனர். ஆனால் பல்வேறு நாடுகளில் பரவியது.
ஹெச்ஐவி/ எய்ட்ஸ்
1981ல் அமெரிக்காவில் முதன் முதலில் கண்டறியப்பட்டது ஹெச் ஐ வி. இதுவரை உலகம் முழுவதும் 7.5 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் 3 கோடியே 20 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். ஆனால் இதுவரை ஹெச் ஐவிக்கு மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை.
BBC.TAMIL