டாக்டர் மகாதீர்: டி.ஏ.பி. மாறிவிட்டது; பாஸ் ஏமாற்றமளிக்கிறது

டாக்டர் மகாதீர்: டிஏபி மாறிவிட்டது, ஆனால் பாஸ் மிகவும் ஏமாற்றமளிக்கிறது

முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமது, அரசியல் யதார்த்தத்தின் அடிப்படையில் டிஏபி “மாறிவிட்டது” என்றும் “கோரிக்கையை குறைத்துவிட்டது” என்றும் கூறியுள்ளார்.

“எனது கருத்து மாறவில்லை, ஆனால் அவர்கள் மாறிவிட்டனர்” என்று டாக்டர் மகாதீர் இன்று வெளியிட்ட பேட்டியில் சினார் ஹரியானிடம் கூறினார்.

டி.ஏ.பி.யில் முன்பு சீனர்கள் மட்டும் தான் இருந்தனர். ஆனால் இப்போது டி.ஏ.பி.யில் நிறைய தலைவர்களும் மற்றும் மலாய்க்காரர்கள் உறுப்பினர்களாகவும் உள்ளனர்.

“மலாய்க்காரர்கள் இல்லாமல் அவர்களால் வெல்ல முடியாது என்று உணர்ந்து உள்ளனர். எனவே அவர்கள் அவர்களின் கோரிக்கையை குறைத்துவிட்டனர்”.

“டி.ஏ.பி. கூட்டு தேர்வு சான்றிதழை (யுஇசி) அங்கிகரிக்க நாங்கள் விரும்பவில்லை என்று கூறியபோது, அவர்கள் இறுதியாக ஒப்புக்கொண்டனர்.

“டி.ஏ.பி.யின் வேறு பல கொள்கைகள் புறக்கணிக்கப்பட்டுள்ளன. எனவே இது எனது கருத்து மட்டும் அல்ல.
“ஒருவருடன் நெருங்கி இருக்கும் போது தான், அவர்களின் நிலைபாடு நமக்குத் தெரிய வருகிறது. மலாய்க்காரர்களின் ஆதரவு இல்லாமல் வெற்றி பெற முடியாது என்பதை டிஏபி அறிந்துள்ளது” என்று அவர் கூறினார்.

பாஸ் கட்சியை பொருத்தவரையில், இஸ்லாத்தை ஒரு அரசியல் கருவியாகப் பயன்படுத்துவது உம்மாவின் ஒற்றுமையை உடைக்கும் ஒரு மோசமான விஷயம் என்று டாக்டர் மகாதீர் கூறினார்.

“அவர்கள் என்னை ஆதரித்தாலும் எனக்கு இன்னும் திருப்தியாக இல்லை. இன்றுவரை அவர்கள் பாஸ் அல்லாதவர்கள் முஸ்லிம்கள் அல்ல என்ற கருத்தில் இருந்து வெளிவரவில்லை”.

“இது தான் பாஸ் தலைமையின் மீதான எனது விரக்தி” என்று மகாதீர் கூறினார்.

பிரதமராக தொடர்ந்து பணியாற்ற ஆரம்பத்தில் தன்னை ஆதரித்ததாகவும், இறுதியில் முகிதீன் யாசினுக்கு ஆதரவளிப்பதன் மூலம் பாஸ் தனக்கு துரோகம் செய்துவிட்டது என்றும் அவர் கூறினார்.

“அவர்கள் சொல்வது ஒன்று செய்வது ஒன்று. இதில் என்ன அர்த்தம் உள்ளது? இது மிகவும் வெறுப்பாக இருக்கிறது”.

“அவர்களே இஸ்லாத்தின் போதனைகளை கடைபிடிப்பதில்லை. ஒரு வாக்குறுதியை அளிக்கும்போது, அந்த வாக்குறுதியை கடைப்பிடிக்க வேண்டும்,” என்று மகாதீர் கூறினார்.

பிப்ரவரி 23 “ஷெராடன் நகர்வுக்கு” முன்னதாக, அம்னோ பெர்சத்துவுடன் இணைந்து ஒரு கூட்டணியை உருவாக்கும் என்ற பலமான ஊகங்கள் இருந்தன.

அந்த நேரத்தில், மகாதீரை பிரதமராக ஆதரிக்கும் தீர்மானத்தை பாஸ் அளிப்பதாக உறுதியளித்திருந்தது.