அன்வார்: பாக்காத்தான் ஹராப்பானில் இப்போது மூன்று கட்சிகள்

அன்வார்: பாக்காத்தான் ஹராப்பானில் இப்போது மூன்று கட்சி, ஆனால் டாக்டர் மகாதீருடன் பேச முடியும்.

பெர்சத்து கூட்டணியில் இருந்து விலகியதைத் தொடர்ந்து பக்காத்தான் ஹராப்பான் இப்போது மூன்று கட்சிகளை மட்டுமே கொண்டுள்ளது என்று பி.கே.ஆர். தலைவர் அன்வார் இப்ராஹிம் கூறினார்.

டாக்டர் மகாதீர் முகமது இன்னும் அக்கூட்டணிக்கு தலைவராக இருக்கிறாரா என்று கேட்டபோது அவர் இதனைக் கூறினார்.

“நீங்கள் அவரிடம் தான் கேட்க வேண்டும், அவர் அடிக்கடி மனம் மாறக்கூடும்” என்று கேலி செய்தார்.
“எனக்குத் தெரிந்தவரை, PH இன் நிலை என்ன? PH இன்று எப்படியுள்ளதோ அப்படித்தான். இன்று காலை நாங்கள் விவாதித்தபடி பி.கே.ஆர், டி.ஏ.பி. மற்றும் அமானா, இம்மூன்று தான் PH”.

“சில வாரங்களுக்கு முன்பு பெர்சத்து, PH-ல் இருந்து வெளியேற முடிவு செய்தது. ஆனால் நிச்சயமாக துன் மகாதீர் உட்பட நாம் பேச்சுவார்த்தையை தொடரலாம்” என்று அவர் இன்று முன்னதாக PH கூட்டத்திற்கு தலைமை தாங்கிய பின்னர் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

‘மலாய் பெரும்பான்மையினர் என்னை ஆதரிக்கின்றனர்’

மலாய்க்காரர்கள் அன்வாரை அடுத்த பிரதமராக ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்ற மகாதிர் கூறியதை பற்றி அன்வாரிடம் கேட்கப்பட்டது.

அதற்கு அன்வார், முன்னாள் பிரதம மந்திரியான மகாதீர் தான் தன்னை ஏற்றுக்கொள்ளவில்லை என்றும் மலாய்க்காரர்கள் தன்னை நிராகரிக்கவில்லை என்றும் கூறினார்.

“துன் மகாதீர் என்னை ஏற்கவில்லை. ஆனால் மலாய்க்காரர்களைப் பற்றி உறுதியாக தெரியவில்லை. நான் போட்டியிட்ட எல்லா பகுதிகளிலும் பெரும்பான்மை மலாய்க்கார மக்கள் என்னை ஆதரிக்கின்றனர்.

“போர்ட் டிக்சனில் பெரும்பான்மை மலாய்க்காரர்கள். 60 சதவீதத்தினர் என்னை ஆதரிக்கின்றனர். பினாங்கு மலாய்க்காரர்களும் தான்” என்று அவர் கூறினார்.