கொரோனா தொற்றிலிருந்து உங்களை காத்து கொள்வது எப்படி?
சீனாவில் பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் தொற்று தற்போது 110 நாடுகளுக்கு பரவியுள்ளது. இந்த கொரோனா தொற்றுக்கு இதுவரை 4200 பேர் உயிரிழந்துள்ளனர்.
கொரோனா என்றால் என்ன? அது எவ்வாறு பரவுகிறது என்பதை பார்ப்போம்.
கொரோனாவிலிருந்து எவ்வாறு தற்காத்து கொள்ளலாம்?
கொரோனாவிலிருந்து உங்களை தற்காத்து கொள்வதற்கான சிறந்த வழி நன்றாக கைகளை சுத்தம் செய்வது. சோப்பையும், தண்ணீரையும் கொண்டு உங்கள் கைகளை நன்றாக சுத்தம் செய்யுங்கள்.
கொரோனா பாதிக்கப்பட்ட ஒருவர் இரும்பும்போது, அந்த வைரஸ் காற்றில் கலக்கலாம். இதை சுவாசித்தாலோ அல்லது அந்த வைரஸ் துகள்கள் பட்ட இடத்தை தொட்டு பின் கண்கள், மூக்கு அல்லது வாயை தொட்டாலோ தொற்று ஏற்படலாம்.
இருமும் போதோ அல்லது தும்மலின் போதோ டிஷ்யூ வைத்துக் கொள்ள வேண்டும். கைகளை கழுவாமல் முகத்தை தொடக்கூடாது. மேலும் தொற்று இருக்கலாம் என சந்தேகிக்கப்படும் நபர்களிடமிருந்து தள்ளி இருத்தல் வேண்டும்.
கொரோனா தொற்று நுரையீரலை பாதிக்கும். அதன் அறிகுறி முதலில் காய்ச்சலாக தொடங்கும், பின் வறட்டு இருமல் ஏற்படும் அதன்பின் சுவாசப் பிரச்சனைகள் ஏற்படும்.
சராசரியாக கொரோனா அறிகுறிகள் வெளியே தெரிய ஐந்து நாட்கள் ஆகும் என விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். ஆனால் சிலருக்கு அதைக்காட்டிலும் தாமதம் ஆகலாம் என்றும் கூறப்படுகிறது.
சிலருக்கு உடல் நலக்குறைவு இருப்பது தென் படுவதற்கு முன்னரே அவர் தொற்றை பரவலாம் என்றும் கூறப்படுகிறது.
56,000 நோயாளிகளிடம் உலக சுகாதார நிறுவனம் சோதனை செய்தது; அதில் கண்டறிந்தவை:
6% பேரின் உடல்நிலை மோசமாக உள்ளது என்றும் அவர்களுக்கு – நுரையீரல் பழுது, செப்டிக் ஷாக் (தொற்றிலிருந்து நம்மைக் காக்க நோய் எதிர்ப்பு சக்தி ரத்தத்தில் வெளியிடும் ரசாயனம் தவறாக நமக்கு ஆபத்தை உருவாக்கும் நிலை), உறுப்புகள் செயலிழப்பு மற்றும் இறப்பு ஏற்படும் ஆபத்து ஆகியவை தென்படுகிறது.
14% பேருக்கு தீவிர அறிகுறிகள் காணப்படுகின்றன. – சுவாப்பதில் சிரம்ம் மற்றும் நுரையீரலுக்குள் சரியாக காற்று செல்லாமை
80% பேருக்கு மிதமான அறிகுறிகள் – காய்ச்சல், இருமல் சிலருக்கு நிமோனியாவும் இருக்கலாம்.
வயதானவர்கள், ஆஸ்துமா, நீரிழிவு மற்றும் இதய நோய்கள் உள்ளவர்கள் இதனால் அதிகம் பாதிக்கப்படலாம்.
கொரோனா தொற்று எந்தளவிற்கு ஆபத்தானது?
கொரோனா தொற்று குறித்த அச்சம் பரவலாக இருந்தாலும், இதனால் இறப்பு ஏற்படும் விகிதம் மிகவும் குறைவே. ஒரு சதவீதத்திலிருந்து 2 சதவீதம் வரையே இறப்பு விகிதம் என கூறப்படுகிறது. ஆனால் அதை உறுதியாக கூற முடியவில்லை.
சிகிச்சையும் மருந்தும்
இதற்கான சிகிச்சை என்பது நோயுற்றவர்களின், நோய் எதிர்ப்பு சக்தி வைரஸ் தொற்றை எதிர்த்து போராடும் வரையில் உடலை தொடர்ந்து இயங்க செய்வதாகும். சுவாசக் கருவிகள் கொண்டு ஆதரவு வழங்க வேண்டும்.
கொரோனா தொற்றுக்கான மருந்து கண்டுபிடிக்கும் பணி நடைபெற்று வருகிறது.
BBC.TAMIL