சுல்தான் சிலாங்கூர்: பெரிக்காத்தான் நேசனல் ஒரு பின் கதவு அரசாங்கம் என்பது உண்மை இல்லை

சுல்தான் சிலாங்கூர்: பெரிக்காத்தான் நேசனல் ஒரு பின் கதவு அரசாங்கம் என்பது உண்மை இல்லை.

பெரிக்காத்தான் கூட்டணி (பி.என்) அரசாங்க உருவாக்கம் பின் கதவு அல்லது அதிகார பறிப்பு மூலம் அல்ல என்று சிலாங்கூர் சுல்தான் சுல்தான் ஷராபுதீன் இத்ரிஸ் ஷா கூறினார்.

பக்காத்தான் அரசாங்கற்கு பதிலாக, பெரிக்காத்தான் அரசாங்கம் உருவாக்கப்பட்டது என அவர் கூறினார்.
“மாட்சிமை தங்கிய பேரரசர் யாங் டி-பெர்த்துவான் அகோங், அரசியலமைப்பின் அடிப்படையில் பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு ஒரு கவனமான முடிவை எடுத்துள்ளார்.”

கூட்டாட்சி அரசியலமைப்பின் விதிகளின்படி, மாட்சிமை தங்கிய பேரரசர் யாங் டி-பெர்த்துவான் அகோங் கவனமாகவும், திறந்த ஆலோசனையுடனும் மேற்கொள்ளப்பட்ட இந்த மாற்றங்களின் முன்னேற்றத்தை தான் தொடர்ந்து காண்கானித்து வந்ததாகச் சொன்னார்.

இந்த மத்திய அரசாங்கம் பின் கதவு அரசாங்கமாகவும் சதித்திட்டமாகவும் அமைக்கப்பட்டது தொடர்பான குற்றச்சாட்டுகள் முற்றிலும் தவறானவை என்றார்.

“… இந்த குற்றச்சாட்டுகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும், ஏனென்றால் மாட்சிமை தங்கிய பேரரசர் யாங் டி-பெர்த்துவான் அகோங் சட்டத்தில் வழங்கப்பட்டுள்ளபடி தனது அதிகாரத்தின்படி செயல்பட அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது,” என்று அவர் கூறினார்.

மார்ச் 1ம் தேதி, பெர்சத்து தலைவர் முகிதீன் யாசின், டாக்டர் மகாதீர் முகமதுவுக்கு பதிலாக எட்டாவது மலேசிய பிரதமராக பதவியேற்றார்.

பெரும்பான்மை நாடாளுமன்ற பிரதிநிதிகளின் ஆதரவைப் பெற்ற பின்னர் முகிதீனை பிரதமராக ஏற்றுக்கொள்ள யாங் டி-பெர்த்துவான் அகோங் முடிவை எடுத்தார்.

பிப்ரவரி 24 அன்று பெர்சத்து, பாக்காத்தான் கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து முன்னாள் பி.கே.ஆர் துணைத் தலைவர் முகமட் அஸ்மின் மற்றும் 10 பி.கே.ஆர் எம்.பி.க்கள் பாக்காத்தான் கூட்டணியில் இருந்து விலக முடிவு செய்தனர். இதனால் நாட்டின் அரசியல் கொந்தளிப்பு வெடித்தது. மகாதீர் பிரதமர் பதவியை ராஜினாமா செய்ததோடு, பி.எச். அரசாங்கமும் வீழ்ந்தது.

பெரிக்காத்தான் நேசனல், பின்னர் பெர்சத்து, அம்னோ, பாஸ் மற்றும் பேபாஸ் ஆகியவற்றின் ஆதரவுடன் ஒரு அரசாங்கத்தை அமைத்தது.

இதனிடையே, அரசியல் கொள்கைளுக்கு அப்பாற்பட்டு சிலாங்கூர் மாநில அரசு மத்திய அரசாங்கத்துடன் இணைந்து செயல்பட வேண்டும் என்றும் சிலாங்கூர் சுல்தான் கூறினார்.

அரசாங்கத்திற்கும் அரசியல் கொள்கைகளுக்கும் இடையிலான வேறுபாடுகளினால் தற்போதைய பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சியில் சிலாங்கூர் மக்கள் ஓரங்கட்டப்படுவதை அவர் விரும்பவில்லை என்றும் அவர் கூறினார்.

“மாநிலத்தில் ஒரு சுல்தான் என்ற முறையில், மக்களுக்கு தீங்கு விளைவிக்கும் எந்தவொரு பொறுப்பற்ற நடவடிக்கைகளையும் தவிர்க்க உறுப்பினர்களுக்கு ஆலோசனை வழங்க நான் கடமைப்பட்டுள்ளேன்,” என்று அவர் கூறினார்.

தனது உரையின் முடிவில், மக்கள் மற்றும் அரசின் செழிப்புக்காக பணிகளை மேற்கொண்டுவரும் இராணுவம், காவல்துறை, தீயணைப்பு மற்றும் பாதுகாப்புப் பணியாளர்களுக்கும் சிலாங்கூர் சுல்தான் தனது நன்றியைத் தெரிவித்தார்.