பெர்சத்து தலைவர் பதவிக்கான வேட்பு மனுவை சமர்ப்பித்தார் முகிதீன்

பிரதம மந்திரி முகிதீன் யாசின், முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் உடனான நேரடி மோதலைத் தவிர்க்க முயற்சிப்பதைக் காணமுடிகிறது. அவர் பெர்சத்து கெளரவ தலைவர் (pengerusi Bersatu) பதவியில் போட்டியிடுவதற்குப் பதிலாக பெர்சத்து தலைவர் (presiden Bersatu) பதவிக்கு மட்டுமே போட்டியிடுகிறார், பெர்சத்து கெளரவ தலைவர், கட்சியின் முக்கியமான மற்றும் செல்வாக்குமிக்க பதவியாகும்.

முகிதின் இன்று பெர்சத்து தலைவர் பதவிக்கான வேட்பு மனுவை தனது அரசியல் செயலாளர் மூலம் சமர்ப்பித்ததாக பெர்னாமா தெரிவித்துள்ளது.

அம்னோ ஒத்துழைப்புடன் ஒரு புதிய அரசாங்கத்தை அமைப்பதன் காரணமாக மகாதீரை எதிர்த்த முகிதீன், முன்னதாக கட்சியை கைப்பற்றும் முயற்சியில் தன்னை பெர்சத்து கட்சியின் தலைவராக அறிவித்திருந்தார்.
பெர்சத்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் தன்னை புதிய பிரதமராக ஆதரிப்பதை உறுதி செய்வதே இந்த நடவடிக்கைக்கு காரணமாக இருந்தது.

பெர்சத்து, பக்காத்தான் ஹராப்பானை (பி.எச்) விட்டுச் விளகுவதாக முகிதீன் அறிவித்ததை அடுத்து பிப்ரவரி 24 ம் தேதி மகாதீர் பெர்சத்துவின் கெளரவ தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். பிரதமர் பதவியையும் ராஜினாமா செய்தார்.

முகிதீன் தலைமையிலான ஒரு கட்சி கூட்டம் பின்னர் அன்றிரவு மகாதீர் ராஜினாமா செய்வதை நிராகரித்தது, மறுநாள் தன் பதவியைத் தொடர அவரை சமாதானப்படுத்தியது, மகாதீரும் ஒப்புக்கொண்டார்.
பெர்சத்துவின் பொதுச்செயலாளர் மர்சுகி யஹ்யா பிப்ரவரி 27 அன்று அதிகாரப்பூர்வ அறிக்கையில் மகாதீர் தொடர்ந்து பெர்சத்து கெளரவ தலைவராக இருப்பார் என்று அறிவித்தார்.

மகாதீர் புதிய அரசாங்கத்தை வழிநடத்த வேண்டும் என்று முகிதீன் விரும்பினார். ஆனால் மகாதீர் அம்னோவுடன் ஒத்துழைக்க மறுத்தபோது, மகாதீரின் மறுநிர்நயத்தை நிராகரித்து, தலைவர் பதவியை பறித்தார் முகிதீன். அந்த பதவி காலியாக இருப்பதாக அறிவித்தார் முகிதீன்.

எனவே, அவர் செயல் தலைவராக பொறுப்பேற்று மகாதீர் தன் மீது செயல்படுவதைத் தடுத்தார்.
பின்னர் முகிதீன் மார்ச் 1 அன்று பிரதமரானார்.