கோவிட்-19: பொது நடமாட்டத்துக்கு கட்டுப்பாடு – முகிதீன்

கோவிட்-19: பொது நடமாட்டத்துக்கு கட்டுப்பாடு – முகிதீன்

கோவிட்-19 பரவுவதைக் கையாள்வதில் அத்தியாவசிய சேவைகளைத் தவிர்த்து அரசு மற்றும் தனியார் நிறுவனங்களை மூடுவதாக பிரதமர் முகிதீன் யாசின் அறிவித்துள்ளார்.

“அத்தியாவசிய சேவைகளில் ஈடுபட்டுள்ள (நீர், மின்சாரம், எரிசக்தி, தொலைத்தொடர்பு, தபால், போக்குவரத்து, நீர்ப்பாசனம், எண்ணெய், எரிவாயு, எரிபொருள், மசகு எண்ணெய், ஒளிபரப்பு, நிதி, வங்கி, சுகாதாரம், மருந்தகங்கள், தீயணைப்பு, சிறைச்சாலைகள், துறைமுகங்கள், விமான நிலையங்கள், பாதுகாப்பு, துப்புரவு, சில்லறை தொழில் மற்றும் உணவுப் பொருட்கள் ஆகியவற்றைத் தவிர அனைத்து அரசு மற்றும் தனியார் வளாகங்கள் மூடப்படும்,” என்று அவர் இன்று இரவு ஒரு சிறப்பு செய்தியில் தெரிவித்தார்.

கோவிட்-19ஐ சமாளிக்க மார்ச் 18 முதல் மார்ச் 31 வரை பொது நடமாட்டத்துக்கு கட்டுப்பாடு உத்தரவை பிறப்பித்துள்ளது.

இந்த கட்டளை, தொற்று நோய்களைத் தடுக்கும் மற்றும் கட்டுப்படுத்தும் சட்டம் 1988 (சட்டம் 342) மற்றும் காவல்துறை சட்டம் 1967 (சட்டம் 344) ஆகியவற்றின் கீழ் எடுக்கப்பட்டதாகவும், “மலேசியாவில் உள்ள அனைத்து நாட்டினருக்கும், நாட்டினரல்லாதவர்களுக்கும் உட்படுத்தப்படும்” என்றும் கூறினார்.

பொது நடமாட்ட கட்டுப்பாடு கட்டளைகள் பின்வருமாறு:

  1. மத, விளையாட்டு, சமூக மற்றும் கலாச்சார நடவடிக்கைகள் உட்பட நாடு முழுவதும் உள்ள அனைத்து சூழ்நிலைகளிலும் இடங்களிலும் பொது நடமாட்டங்கள் மற்றும் கூட்டங்களுக்கு விரிவான தடையை அமல்படுத்துதல்.

  2. வெளிநாடுகளுக்குச் செல்லும் அனைத்து மலேசியர்களுக்கும் விரிவான தடையை அமல்படுத்துதல். வெளிநாட்டிலிருந்து திரும்பி வந்த மலேசியர்கள் சுகாதார பரிசோதனை மற்றும் 14 நாள் வீட்டு தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட வேண்டும்.

  3. அனைத்து வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் மற்றும் பார்வையாளர்கள் நாட்டிற்குள் நுழைவதற்கான தடையை அமல்படுத்துதல்.

  4. மழலையர் பள்ளிகள், அரசு மற்றும் தனியார் பள்ளிகள், தங்கும் வசதி கொண்ட பள்ளிகள், சர்வதேச பள்ளிகள், தஃபிஸ் மையங்கள் மற்றும் பிற ஆரம்ப, இடைநிலை மற்றும் கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்படும்.

  5. சுகாதாரம், மருந்தகம், பாதுகாப்பு, பயன்பாடுகள் (நீர், எரிசக்தி மற்றும் தகவல் தொடர்பு), போக்குவரத்து, வங்கி / நிதி மற்றும் சில்லறை தொழில் / உணவு போன்ற அத்தியாவசிய சேவைகளைத் தவிர அனைத்து அரசு மற்றும் தனியார் அலுவலகங்களுக்கும் வேலைகளை வீட்டில் இருந்து பார்க்கும்படி ஊக்குவித்தல்.
    இன்று இரவு பிரதமர் முகிதீன் யாசின் தலைமையில் தேசிய பாதுகாப்பு அமைச்சு ஏற்பாட்டில் நடந்த கூட்டத்தைத் தொடர்ந்து பொது நடமாட்ட கட்டுப்பாட்டு உத்தரவு முடிவு செய்யப்பட்டது.

மலேசியாவில் கோவிட்-19 தொற்று தீவிரமாக அதிகரித்ததைத் தொடர்ந்து தேசிய பாதுகாப்பு அமைச்சு இந்த பொது நடமாட்ட தடை உத்தரவை பிறப்பித்துள்ளது. சுகாதார அமைச்சில் இன்று 553 பாதிப்புகள் பதிவாகியுள்ளன.

இன்றுவரை, உலகளவில் 6,650 உயிர்களைக் கொன்ற கோவிட்-19க்கு எந்த மலேசியரும் பலியாகவில்லை.