“கம்போங் போக வேண்டாம், விடுமுறையை தள்ளிப்போடுங்கள்” – பேராசிரியர் டாக்டர் அடீபா கமருல்சமான்

“கம்போங் போக வேண்டாம், விடுமுறையை தள்ளிப்போடுங்கள்”.

அடுத்த இரண்டு வாரங்களுக்கு கப்போங் அதாவது தங்கள் ஊருகளுக்கு திரும்ப வேண்டாம் என்றும், உள்நாட்டு விடுமுறைகளை மேற்கொள்வதை தவிர்க்குமாறும் அறிவுறுத்தப்படுகிறது. கோவிட்-19 பரவுவதைத் தடுக்கும் முயற்சியில் அரசாங்கம் விதித்துள்ள நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை அமல்படுத்துவதை இது உறுதி செய்யும் என்று நிபுணர்கள் தெரிவித்தனர்.

இந்த நேரத்தில் பொதுமக்கள் எங்கும் செல்லக்கூடாது என்று தொற்று கட்டுப்பாட்டு நிபுணர் பேராசிரியர் டாக்டர் அடீபா கமருல்சமான் தெரிவித்தார்.

“நீங்கள் இருக்கும் இடத்திலேயே இருங்கள்”.

“இந்த உத்தரவின் முக்கிய நோக்கம் எந்தவொரு இயக்கத்தையும் அல்லது நடமாட்டத்தையும் மட்டுப்படுத்துவதும், கிருமியைப் பரப்பக்கூடிய பொதுமக்களுடன் தொடர்பை குறைத்துக் கொள்வதும் ஆகும்” என்று ட்விட்டர் பதிவில் அவர் கூறினார்.

மலாயா பல்கலைக்கழக மருத்துவ துறையின் டீனாகவும் இருக்கும் அடீபா, தடை கட்டுப்பாட்டின் காலத்தில் மக்கள் தங்கள் ஊருகளுக்கு (கம்போங்) திரும்புவது பொருத்தமானதா என்று கேட்டபோது, ஆஸ்ட்ரோ அவானி நிலையத்திற்கு அவர் அவ்வாறு விளக்கினார்.

இந்த விதிகள் நாளை முதல் மார்ச் 31 வரை நடைமுறைக்கு வரும். இது அரசு மற்றும் தனியார் பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகங்களை மூடுவதையும் உள்ளடக்கியுள்ளது. வளாகங்களும் மூடப்படும். இதனால் பலர் வேலைக்கு செய்ய இயலாது, அதே நேரத்தில் மாணவர்கள் பள்ளிக்கு செல்ல வேண்டியதில்லை.

இதற்கிடையில், இந்த தடையை செயல்படுத்துவதை ஒரு விடுமுறை காலமாக எடுத்து பயன்படுத்திக் கொள்ளக்கூடாது என்றார் முன்னாள் மருத்துவ அதிகாரி டாக்டர் அமர் சிங் எச்.எஸ்.எஸ்.

மக்கள் பீதியில் பொருட்களை வாங்க வேண்டிய அவசியமில்லை என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது கோவிட்-19 நோயால் பாதிக்கப்படும் ஆபத்தை மட்டுமே அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.

“இது ஆபத்தானது, இது கொரோனா கிருமி பரவ உதவுகிறது. பீதியில் பொருட்களை வாங்குவதை நிறுத்துங்கள்” என்று அவர் கூறினார்.