கோவிட் 19 : ஊதியம் இல்லா விடுப்பு – தொழிலாளர்களை நிர்பந்திக்க வேண்டாம்!

கோவிட்-19 அச்சுறுத்தலைத் தொடர்ந்து, பல நிறுவனங்கள் தங்கள் தொழிலாளர்களை ஊதியம் இல்லா விடுப்பு எடுக்கச் சொல்லி நிர்பந்திப்பதைக் கடுமையாகக் கருதுவதாக மலேசிய சோசலிசக் கட்சியின் (பி.எஸ்.எம்.) தொழிலாளர் நலப்பிரிவு ஒருங்கிணைப்பாளர் சிவரஞ்சனி மாணிக்கம் நேற்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் கூறியுள்ளார்.

“கோவிட்-19 நச்சுக்கிருமியின் தாக்கம் தற்போது மிகக் கடுமையான அச்சுறுத்தலாக உருவாகியுள்ளதை நாங்கள் உணர்ந்துள்ளோம். மார்ச் 16 நிலவரப்படி, 500-க்கும் மேற்பட்டோரை இந்நோய்க்கிருமி தாக்கியுள்ளது கண்டறியப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.”

“இந்நிலையில், பல முதலாளிகள் தங்கள் தொழிலாளர்களை வீட்டிலிருந்து வேலை செய்யும்படியும் சில வாரங்கள் அல்லது மாதங்கள் விடுமுறை எடுத்துக்கொள்ளுமாறும் அறிவுறுத்தி வருகின்றனர். அனைவரின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் வகையில் இது ஊக்குவிக்கப்பட வேண்டிய ஒரு முடிவாகும்.

“இருப்பினும், அவர்களை ஊதியம் இல்லா விடுப்பு எடுக்கச் சொல்லி நிர்பந்திப்பது நியாயமில்லை,” என்று அவர் அவ்வறிக்கையில் தெரிவித்துள்ளார்.

சீனாவில் இருந்து உபரிப் பொருள்கள் வராததால், தங்கள் நிறுவனங்கள் இரண்டு, மூன்று வாரங்களுக்கு விடுப்பு கொடுத்துள்ளதாகத் தொழிலாளர்களிடம் இருந்து பி.எஸ்.எம். புகார்களைப் பெற்றுள்ளதாகவும் அவர் சொன்னார்.

“இதில் முக்கியப் பிரச்சனை என்னவென்றால், சம்பளம் இல்லாமல் இந்தத் தொழிலாளர்கள் எப்படி தங்களின் அன்றாட வாழ்க்கைச் செலவினங்களைச் சமாளிக்க முடியும்?” என்று அவர் கேள்வி எழுப்பினார்.

விடுப்பில் இருக்கும் தொழிலாளர்களுக்குத் தொடர்ந்து சம்பளத்தை வழங்குவது முதலாளிகளின் தார்மீகப் பொறுப்பு என்றும் சிவரஞ்சனி கூறியுள்ளார்.

“இந்த மோசமான சூழ்நிலையை எதிர்கொள்ள வேண்டிய பொறுப்பு முதாலாளிகள், தொழிலாளர்கள் என அனைத்து தரப்பினரையும் சார்ந்தது. இதுநாள் வரை, தொழிலாளர்களின் உழைப்பில் பன்மடங்கு இலாபம் சம்பாதித்த முதலாளிகள், இதுபோன்ற நெருக்கடி காலத்தில் அவர்களைக் கைவிடுவது சரியல்ல. விடுப்பு எடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் தொழிலாளர்களுக்கு முதலாளிகள் தொடர்ந்து சம்பளத்தை வழங்க முன் வரவேண்டும்,” என்று அவர் வலியுறுத்தினார்.

பள்ளி நிர்வாகங்கள் தங்கள் பணி சுமையை அதிகரித்துள்ளதாக, பள்ளி துப்புரவு பணியாளர்கள் புகார் அளித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

“கடந்தாண்டு, நாட்டில் நிதிநிலவரம் சரியில்லாததால் பல துப்புரவு பணியாளர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டனர். இருவர், மூவர் மட்டுமே பணியில் இருக்கும் நிலையில், கோவிட்-19 காரணமாக, பள்ளி நிர்வாகங்கள் துப்புரவு பணிகளை அதிகரித்துள்ளதாக எங்களுக்குப் புகார்கள் வந்துள்ளன.”

“பள்ளி வளாகங்களின் தூய்மையைப் பேண, இப்பணியாளர்களின் தேவை இன்றியமையாதது. ஆக, இவர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதோடு, அவர்களின் பங்கையும் தியாகத்தைப் பாராட்டும் வகையில் சம்பளத்தை அதிகரிக்க வேண்டிய காலம் கணிந்துவிட்டது,” என்றார் அவர்.

நாட்டில் கோவிட்-19 தீவிரமடைந்துவரும் நிலையில், சுகாதார அமைச்சு அதன் பாதுகாப்பு பணிகளை அதிகரித்துள்ள வேளையில், மனித வள அமைச்சும் தொழிலாளர்கள் நலன் கருதி, தங்கள் பணியைச் செவ்வனே ஆற்ற வேண்டும். ஊதியம் இல்லா விடுப்பு எடுக்குமாறு நிர்பந்திக்கும் பெருநிறுவனங்கள் மீது மனிதவள அமைச்சு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.

 

அதேவேளையில், சிறுநிறுவனங்களின் பணியாளர்கள் தங்கள் வாழ்க்கைச் செலவினங்களைச் சமாளிக்க, அரசாங்கம் உதவிநிதி வழங்க முன்வரவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதுமட்டுமின்றி, கோவிட்-19 தாக்கத்தினால், நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார மந்தநிலை மீட்சியடையும் வரை, பேங்க் நெகாரா வீட்டு கடன்களைச் செலுத்துவதில் சில சிறப்பு வசதிகளை வழங்க வேண்டும், குறிப்பாக, மலிவுவிலை வீட்டு உரிமையாளர்கள் கடன்களைத் திருப்பி செலுத்துவதற்குக் கால அவகாசம் கொடுக்க வேண்டும் என்றும் சிவரஞ்சனி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

“நாட்டு மக்களின் ஆரோக்கியத்தை உறுதிப்படுத்த, கோவிட்-19 உடன் போராடிக் கொண்டிருக்கையில், நம் நாட்டில் தொழிலாளர் வர்க்கத்தைப் பாதிக்கும் மற்றொரு பேரழிவிற்கு – பசி மற்றும் வறுமை- நாம் வழிவகுத்துவிடக்கூடாது,” என அவர் கேட்டுக்கொண்டார்.