கோவிட்-19 : மலேசியாவில் முதல் இருவர் மரணம்

கோவிட்-19 கிருமி பாதிப்பல் மலேசியா தனது முதல் இரண்டு இறப்புகளைப் பதிவு செய்துள்ளது.

அவர் இந்த மாத தொடக்கத்தில் கோலாலம்பூரில் நடந்த ஒரு மத நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஒரு நபர் (“நோயாளி 178”), வயது 34 என சுகாதார அமைச்சர் டாக்டர் ஆதாம் பாபா அடையாளம் காட்டினார்.

இந்த நோயாளி மார்ச் 5 ஆம் தேதி அறிகுறிகளைக் காட்டினார். பின்னர் ஜோகூர் பாருவில் உள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். அவர் மார்ச் 12 அன்று தீவிர சிகிச்சையில் வைக்கப்பட்டார்.

“நோயாளி 178” இன் மரணத்தில் கோமொர்பிடிட்டி (comorbidity) காரணி எதுவும் இல்லை என்று ஆதாம் தெரிவித்தார்.

“கோமொர்பிடிட்டி (comorbidity) என்றால் மற்ற நோய்கள்… அவர் முற்றிலும் கோவிட்-19 காரணமாகத் தான் இறந்துள்ளார். பிற நோய்கள் ஏதும் இல்லை,” என்று அவர் மேலும் கூறினார்.

பாதிக்கப்பட்ட மற்றொருவர், “நோயாளி 358” என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர் கூச்சிங்கை தளமாகக் கொண்ட ஒரு பாதிரியார் என்று சரவாக் சுகாதாரத் துறை கூறியது.

“நோயாளி 358”, மார்ச் 7 ஆம் தேதி அறிகுறிகளைக் காட்டத் தொடங்கினார். பின், மார்ச் 14 ஆம் தேதி சரவாக் பொது மருத்துவமனையில் சிகிச்சையைத் தொடங்கினார்”.

“நோயாளி 358″ க்கு முன்னதாக இதய நோய் இருப்பதாக ஆதாம் கூறினார்.

60 வயதான அந்நோயாளி, காலை 11 மணிக்கு காலமானார் என்று சரவாக் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

அவரின் நோய்த்தொற்றின் மூலத்தை அடையாளம் காண சுகாதாரத் துறை இன்னும் முயன்று வருகிறது.

“இறந்தவரின் 193 நெருங்கிய தொடர்புகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். மேலும் அவர்கள் வீட்டு தனிமைப்படுத்தலுக்கு உட்பட்டுள்ளனர்” என்று அறியப்படுகிறது.

இதற்கிடையில், சரவாக், 11 புதிய கோவிட்-19 நோய்த்தொற்றுகளைப் பதிவுசெய்துள்ளது. அவற்றில் ஆறு கூச்சிங்கிலிருந்தும், மூன்று லிம்பாங்கிலிருந்தும் மற்றும் பெத்தொங் மற்றும் லாவாஸிலிருந்து தலா ஒன்றும் பதிவாகியுள்ளன.

இது சரவாகில் கோவிட்-19 நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கையை 45ஆக உயர்த்தியுள்ளது. இது நேற்று இருந்ததைவிட 32 சதவீதம் அதிகரித்துள்ளது.

நுழைவுகளை கண்காணிக்கும் வகையில் சரவாக் நாட்டின் மிகக் கடுமையான மாநிலமாக இருக்கின்றது.

சரவாகியர்கள் உட்பட மாநிலத்திற்குள் வரும் எவரும் நாளை முதல் 14 நாள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்த வேண்டியிருக்கும்.

நடமாட்ட கட்டுப்பாட்டு உத்தரவை புத்ராஜெயா நேற்று அறிவிப்பதற்கு முன்பே, மார்ச் 29 வரை பள்ளிகள் மூடப்பட வேண்டும் என்றும் சரவாக் அறிவுறுத்தியிருந்தது.