MKN-ன் உத்தரவு மாணவர்கள் தங்கள் ஊருகளுக்கு திரும்ப ‘காரணமானது’
கோவிட்-19 கிருமி பரவுவதைத் தடுக்கும் முயற்சியில், நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவு பொது நடமாட்டத்தைக் கட்டுப்படுத்தியிருக்க வேண்டும்.
எவ்வாறாயினும், நேற்றிரவு இந்த உத்தரவு நடைமுறைக்கு வருவதற்கு முன்பே, ஊருகளுக்கு திரும்புவதற்கு மாவட்டத்திலிருந்து அனுமதி பெற பேருந்து நிலையம் மற்றும் காவல் நிலையத்திற்கு மக்கள் விரைந்தனர்.
உயர்கல்வி மாணவர்கள், அவசரமாக வீடு திரும்புவதற்காக கூட்டம் கூட்டமாக வெளியேறினார்கள்.
Universiti Teknologi Mara (UiTM)இல் கல்லூரிகளில் வசிக்கும் மாணவர்களை தங்குமிடங்களை காலி செய்து அதே நாளில் வீடு திரும்புமாறு பல்கலைக்கழக சுற்றறிக்கை எச்சரிக்கை விடுத்தபோது, மாணவர்கள் அதிக எண்ணிக்கையில் வெளியேற தொடங்கினர்.
50க்கும் மேற்பட்ட் மக்களை கொண்ட கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டாம் என்று அரசாங்கம் பொதுமக்களுக்கு அறிவுறுத்திய போதிலும் இது நிகழ்ந்துள்ளது.
பல்கலைக்கழக மாணவர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குத் திரும்பும்போது, பொது சுகாதாரத்திற்கு ஆபத்து இருப்பதாக மருத்துவர்கள் எச்சரித்திருந்தாலும், அதிகாரிகள் செயல்படுவதில் நேரம் எடுத்துள்ளனர்.
சுவாச நிபுனத்துவ மருத்துவர் ஹெல்மி ஹஜா மைடின் தன் ட்விட்டரில்: “சுகாதார அமைச்சில் உள்ள எனது நண்பர்கள் தலையை சுவரில் மோதிக்கொள்ளும் அளவுக்கு நிச்சயமாக மிகவும் அதிர்ச்சியடைந்திருப்பர் என்று நான் நம்புகிறேன்” என்றுள்ளார்.
“நோய்த்தொற்று நோயாளிகளின் எண்ணிக்கை அதிக அளவுக்கு அதிகரிக்கும். நோயாளிகளுக்கு படுக்கை வசதி நெருக்கடி மற்றும் அதிக இறப்புகளுக்குத் தயாராகும் நேரம்” என்று அவர் நேற்று இரவு கூறினார்.
நேற்று மாலை 5.30 மணியளவில் உயர்கல்வி அமைச்சர் நொரைனி அகமது தனது தனிப்பட்ட பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டு, மாணவர்கள் வீட்டிற்கு விரைந்து செல்ல வேண்டாம் என்று வலியுறுத்தினார்.
“வீடு திரும்புவதற்கான அவசரம், நிலைமையை மோசமாக்கும் என்று அஞ்சப்படுகிறது. நெருக்கமான கண்கானிப்புக்கு உட்படுத்தப்படாவிட்டால் மாணவர்கள் பாதிப்பிற்கு ஆளாக நேரிடும்.
“நாடு திரும்புவதற்கு சிரமப்படும் மாணவர்களுக்கு உயர்கல்வி நிறுவனம் தற்காலிக தங்குமிடம் வழங்க வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன்”.
“சிற்றுண்டிச்சாலை மூலம் மாணவர்களுக்கு உணவு கிடைப்பதை உறுதி செய்ய உயர் கல்வி நிறுவனத்தையும் நான் கேட்டுக்கொள்கிறேன்,” என்று அவர் கூறினார்.
MKN அதன் முந்தைய உத்தரவை நேற்று இரவு 7.30 மணிக்கு திருத்தி புதிய உத்தரவை பிறப்பித்தது.
“மாணவர்கள் தங்கள் வீடுகளுக்கு, நாடுகளுக்கு திரும்பலாம் அல்லது அந்தந்த பல்கலைகழக வளாகங்களில் தங்கலாம்” எனும் வாய்ப்பு வழங்கப்பட்டது.
பொது நடமாட்ட கட்டுப்பாடு உத்தரவு மார்ச் 31 வரை அமல்படுத்தப்படும்.
முக்கியமான பொது மற்றும் தனியார் சேவைகள் மட்டுமே இந்த காலகட்டத்தில் திறக்கப்பட்டிருக்கும்.
நேற்று, கோவிட்-19 நோயினால் இரு மலேசியர்கள் பலியானார்கள். மலேசியாவில் இதுவரை கோவிட்-19 பாதிப்பின் எண்ணிக்கை 673-ஆக அதிகரித்துள்ளது.