கோவிட்-19 பாதிப்பின் இரண்டாவது அலையைக் கட்டுப்படுத்த நாட்டின் 26 மருத்துவமனைகளுக்கு கூடுதல் RM160 மில்லியன் ஒதுக்கீடு செய்யப்படுவதாக பிரதமர் முகிதீன் யாசின் இன்று அறிவித்தார்.
கடந்த 90 நாட்களாக அயராது உழைத்த மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ அதிகாரிகள் மற்றும் சுகாதார அமைச்சில் உள்ள அனைவருக்கும் நன்றி மற்றும் பாராட்டுகளைத் தெரிவித்த முகிதீன் RM160 மில்லியன் ஒதுக்கீட்டை மருத்துவ சார்புடைய பொருள்களை வாங்க பயன்படுத்தலாம் என்று கூறினார்.
“கோவிட்-19இன் பரவலைக் கட்டுப்படுத்தும் திட்டங்களை செயல்படுத்த சுகாதார அமைச்சகத்திற்கு உதவ, மருந்து, உபகரணங்கள் மற்றும் பல்வேறு தேவைகளை வாங்க RM259 மில்லியனுக்கும் அதிகமான தொகையை நாங்கள் அங்கீகரித்துள்ளோம்.
“மேலும் RM160 மில்லியனுக்கான விண்ணப்பம் நிதி அமைச்சகத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டது. இது ஒரு கடுமையான நெருக்கடி நேரமானதால் ஒப்புதலை தாமதப்படுத்த முடியாது. அதனால், அதை விரைவாக ஒப்புதல் அளிக்க நான் நிதி அமைச்சருக்கு அறிவிப்பேன்,” என்று முகிதின் கூறினார். ஜொகூரில் உள்ள பெர்மாய் மருத்துவமனையில் ஜொகூர் சுகாதார இயக்குனர் டாக்டர் அமன் ரபு, கோவிட்-19 இன் பரவலைக் கட்டுப்படுத்தும் முயற்சிகள் குறித்து ஒரு மாநாட்டிற்குப் பிறகு பெர்னாமா மற்றும் ஆர்.டி.எம்.-க்கு முகிதின் இதனைக் கூறினார்.
சுகாதார அமைச்சின் பங்களிப்புகளை தாம் பாராட்டுவதாகவும், தொற்றுநோயை சமாளிப்பதற்கான போராட்டத்தில் அமைச்சின் முயற்சிகளுக்கு அனைத்து மலேசியர்களும் நன்றியுள்ளவர்களாக இருப்பார்கள் எனவும் அவர் கூறினார்.