கோவிட்-19 பாதிப்பை தடுப்பதற்கான பொது நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவைத் தொடர்ந்து நிலைமையைக் கண்காணிக்க மலேசிய காவல்துறைக்கு உதவ இராணுவம் அழைக்கப்படும் என்று பாதுகாப்பு அமைச்சர் இஸ்மாயில் சப்ரி தெரிவித்தார்.
“நிலைமையைக் கண்காணிக்க, குறிப்பாக மக்கள் தங்கள் வீடுகளில் இருப்பதை உறுதிசெய்ய இராணுவம் காவல்துறைக்கு உதவ வேண்டும் என்று இன்று முடிவு செய்யப்பட்டுள்ளது.
“ஞாயிற்றுக்கிழமை முதல் இராணுவம் அணிதிரட்டப்படும். எனவே பாதுகாப்புப் படையினரின் உதவிய்யுடன் இந்த உத்தரவை அமல்படுத்த சாத்தியமாகும் என்று நாங்கள் நம்புகிறோம். அரசாங்கம் பிறப்பித்த உத்தரவுகளை மக்கள் தொடர்ந்து பின்பற்றுவார்கள் என்று நாங்கள் நம்புகிறோம்” என்று அவர் இன்று செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.
இராணுவத்தின் உதவியுடன், நடமாட்ட கட்டுப்பாடு உத்தரவுக்கு மக்கள் இணங்குவதற்கான நிலை அதிகமாக இருக்கும் என்று அரசாங்கம் நம்பிக்கை கொண்டிக்கிறது என்று அவர் தெரிவித்தார்.
“இராணுவ கட்டளைக்கு மக்கள் தொடர்ந்து ஒத்துழைப்பார்கள் என்று நாங்கள் நம்புகிறோம். காவல்துறை அறிக்கையிலிருந்து, அதிக மக்கள் உத்தரவை பின்பற்றுகிறார்கள் என்பது தெளிவாகிறது. மக்களுக்கு நன்றி கூறுகிறோம்”.
“இருப்பினும், அரசாங்க மற்றும் காவல்துறையினரின் உத்தரவுகளைப் புறக்கணிக்கும் பல சம்பவங்கள் இன்னும் உள்ளன. இந்த ஆரம்ப கட்டத்தில், நாங்கள் அறிவுறுத்தல், விவேகமான நடவடிக்கைகள் போன்றவைகளை மட்டுமே மேற்கொண்டோம். தொடர்ந்து உத்தரவு மீறல் இருந்தால், சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்,” என்றார்.
எவ்வாறாயினும், இஸ்மாயில் சப்ரியின் கூற்றுப்படி, இராணுவ ஈடுபாடு ஒரு அவசரகால ஊரடங்கு உத்தரவு அல்ல என்று தெரிவித்தார். ஒரு அவசரகால உத்தரவை அல்லது ஊரடங்கை நிறைவேற்றுவதற்கு பேரரசர் யாங் டி-பெர்த்துவான் அகோங்கின் ஒப்புதலை தான் நாடுவதாக பரவிய செய்தியை அவர் மறுத்துள்ளார்.
“நேற்று, பல்வேறு போலி செய்திகள் பரப்பப்பட்டன. இது மக்களிடையே மேலும் பீதியை எழுப்பியுள்ளது. பேரரசரின் ஒப்புதலுக்குப் பிறகு பாதுகாப்பு மந்திரி அவசர உத்தரவை அறிவிப்பார் என்று பேஸ்புக்கில் ஆடியோ கூட வெளியிடப்பட்டது”.
“அந்த பாதுகாப்பு மந்திரி யார் என்று எனக்குத் தெரியவில்லை. ஊரடங்கு, அவசர உத்தரவுக்கான திட்டங்கள் எதுவும் இல்லை. எனவே மக்களை இதையெல்லாம் நம்ப வேண்டாம் என்று நான் அறிவுறுத்துகிறேன்,” என்று அவர் கூறினார்.

























