கோவிட்-19 நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க சுகாதார ஊழியர்கள் கடுமையாக உழைத்து வரும் போது, அவர்களில் 15 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார இயக்குநர் ஜெனரல் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்தார்.
இவர்களில் 12 பேர் சுகாதார அமைச்சின் ஊழியர்கள், இதர மூன்று பேர் தனியார் சுகாதார ஊழியர்கள்.
நூர் ஹிஷாமின் கருத்துப்படி, பாதிக்கப்பட்ட 12 MOH ஊழியர்களில் ஒருவர் தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் (ஐசியு) உள்ளதாகவும், அவருக்கு சுவாச உதவி தேவைப்படுகிறது என்றும் தெரிவித்தார்.
“இன்றுவரை, 12 MOH சுகாதார ஊழியர்கள் மற்றும் தனியார் சுகாதாரத் துறையைச் சேர்ந்த 3 பேர் கோவிட்-19 வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்”.
“12 MOH ஊழியர்களில் ஒருவர் இப்போது தீவிர சிகிச்சைப் பிரிவில் இருக்கிறார். அவருக்கு சுவாச உதவி தேவை. இந்த வைரஸ் உங்கள் இனம், மதம் அல்லது சொத்து மதிப்பை அறியாது. நீங்கள் முன் வரிசை சுகாதாரப் பணியாளராக இருந்தால் இதில் இன்னும் எளிதாக பாதிக்கப்படுவீர்கள்,” என்று அவர் இன்று தனது பேஸ்புக்கில் ஒரு பதிவில் தெரிவித்துள்ளார்.
கோவிட்-19 பாதிப்பைக் கட்டுப்படுத்த ஒரு நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவை நிறைவேற்றும் போது அனைவரும் வீட்டில் இருக்குமாறு மீண்டும் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்தார்.
“உங்களுக்கு உதவ, எங்களுக்கு உதவுங்கள். வீட்டிலேயே இருங்கள்,” என்றார்.
இன்றுவரை, மலேசியா இரண்டு இறப்புகளுடன் 900 கோவிட்-19 பாதிப்புகளை பதிவு செய்துள்ளது.
மார்ச் 18 முதல் மார்ச் 31 வரை தேசிய பாதுகாப்பு கவுன்சில் (எம்.கே.என்) ஒரு நடமட்டக் கட்டுப்பாடு ஆணையை நடைமுறைபடுத்துவதாக பிரதமர் முகிதீன் யாசின் அறிவித்தார்.
அந்த 14 நாள் ஆணை, நாட்டின் அத்தியாவசிய சேவைகளைத் தவிர அனைத்து அரசு மற்றும் தனியார் வளாகங்களையும் மூடுவதை உள்ளடக்கியது.