பிரதமர் முகிதீன் யாசின், பெர்சத்துவின் பொதுச்செயலாளர் பதவியில் இருந்து மர்சுகி யஹ்யாவை நீக்கியதாக கூறப்படுகிறது.
பெர்சத்துவின் தலைவராக இருக்கும் முகிதீன், மார்ச் 18ம் தேதி கடிதத்தின் மூலம் இந்த நடவடிக்கையை எடுத்ததாக கட்சியின் வட்டாரங்கள் தெரிவித்தன.
“இந்த கடிதம் மார்ச் 18 தேதியிடப்பட்ட போதிலும், நேற்று (மார்ச் 19) மட்டுமே கடிதத்தைப் பெற்றார் மர்சுகி.
“பெர்சத்து கட்சி அரசியலமைப்பின் 13.9வது பிரிவை முகிதீன் மேற்கோள் காட்டி, மர்சுகியின் பொதுச்செயலாளர் பதவியை எந்த ஒரு விளக்கமும் இன்றி நீக்கினார்” என்று அந்த வட்டாரம் தெரிவித்துள்ளது.
மலேசியாகினியைத் தொடர்பு கொண்ட மர்சுகி பதவி நீக்கம் செய்யப்பட்ட கடிதத்தை உறுதிப்படுத்தினார்.
அவரின் பதவி நீக்கம் குறித்து கருத்து கேட்ட போது, “எனக்கும் தெரியவில்லை, அவரிடம் (முகிதீன்) கேளுங்கள்” என்று மர்சுகி பதிலளித்தார்.
மேல்முறையீடு ஏதும் செய்யப் போவதில்லை என்று மர்சுகி கூறினார்.
இதற்கிடையில், கட்சி பொதுச்செயலாளரை நீக்குவது குறித்து விவாதிக்கப்பட்டு அதன் கெளரவ தலைவரால் அங்கீகரிக்கப்பட வேண்டும் என்பதால் மர்சுகியின் பதவி நீக்கம் செல்லுபடியாகுமா என்பது தெளிவாக இல்லை என்று வட்டாரங்கள் தெரிவித்தன.
பெர்சத்துவின் கெளரவ தலைவர் டாக்டர் மகாதீர் முகமது ஆவார். மர்சுகி, மகாதீரின் தனிப்பட்ட செயலாளராக இருந்தார்.
இது குறித்து மகாதீருக்கு அறிவிக்கப்படவில்லை என்று ஆதாரங்கள் கூறுகின்றன.
“அடுத்த சில நாட்களில், துன் மகாதீரின் பதிலைப் பார்க்க முடியும். அப்போது இந்த பதவி நீக்கம் செல்லுபடியாகுமா இல்லையா என்று தெரியும்” என்று அந்த வட்டாரம் தெரிவித்துள்ளது.
முகிதீனும் மகாதீரும் ஒரே கட்சியில் இருந்தாலும், பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கத்தின் வீழ்ச்சிக்குப் பின்னர் இருவரும் பல விடயங்களில் உடன்படவில்லை. முகிதீன் பின் பிரதமராக பதவி ஏற்றார்.
அஸ்மின் அலி தலைமையிலான குழு பி.கே.ஆர். கட்சியை விட்டு வெளியேறி பெர்சத்துவில் இணைந்தது. பெர்சத்து எம்.பி.க்களின் குழுவை வழிநடத்தி முகிதீன், அம்னோ, பாஸ், ஜி.பி.எஸ் மற்றும் பலருடன் கூட்டணி அரசாங்கத்தை அமைத்தார்.
இதற்கிடையில், டாக்டர் மஸ்லீ மாலிக் மற்றும் இளைஞர் தலைவர் சையத் சதிக் சையத் அப்துல் ரஹ்மான் உட்பட பல எம்.பி.க்களின் ஆதரவை மகாதீர் கொண்டுள்ளார்.