பொது நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவை பின்பற்றுங்கள் – பேரரசர்

பிரதமர் முகிதீன் யாசின் செய்திக்கு இரண்டு நாட்களுக்குப் பிறகு, பேரரசர் யாங் டி-பெர்த்துவான் அகோங் சுல்தான் அப்துல்லா சுல்தான் அகமது ஷா, மக்கள் பொது நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவுக்கு கீழ்ப்படிய வேண்டும் என்று அழைப்பு விடுத்தார். இது சிறிது நேரத்திற்கு முன்பு ஆர்.டி.எம். மற்றும் டிவி 3இல் ஒளிபரப்பப்பட்டன.

“பொது நடமாட்டக் கட்டுப்பாடு ஆணைக்கு கீழ்ப்படியுமாறு மக்களை நான் கேட்டுக் கொள்ள விரும்புகிறேன். ஊருக்கு திரும்புவதற்கான விருப்பத்தையும் ரத்து செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன். வீட்டிற்கு வெளியே எந்த சமூக நடவடிக்கைகளிலும் கலந்து கொள்ள வேண்டாம்”.

“அத்தியாவசிய பொருட்களின் இருப்பு போதுமானதாக உள்ளது என்று அரசாங்கத்தால் உத்தரவாதம் அளிக்கப்படுவதால் மக்கள் பீதி அடைய வேண்டாம் என்று நான் அறிவுறுத்துகிறேன்”.

“மக்களும் தவறான செய்திகளை பரப்ப வேண்டாம்” என்று அவர் கூறினார்.

கோவிட்-19 நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்த இந்த உத்தரவு மார்ச் 31 வரை நடைமுறைபடுத்தப்படும். இது இரண்டு வாரங்களுக்கு நீடிக்கும்.

இதற்கிடையில், திருமணங்களை ஒத்திவைக்க மலேசியர்களை அவர் வலியுறுத்தினார்.

மக்கள் எப்போதும் தங்களை சுத்தத்தைப் பேண வேண்டும் மற்றும் பரவலைத் தடுக்கக்கூடிய நடைமுறைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறினார்.

“… மிக முக்கியமாக, உங்களை சுத்தமாக வைத்திருங்கள், தவறாமல் கைகளை கழுவுங்கள், கிருமிநாசினிகள் மற்றும் முகக்கவசங்களை பயன்படுத்துங்கள், அத்துடன் சமூக கூடல் இடைவெளியை பின்பற்றுங்கள்” என்று அவர் கூறினார். மேலும் பாதிப்பை கட்டுப்படுத்த உதவுவதில் மக்கள் பங்கு வகிக்கின்றனர் என்றார்.

முன்னதாக இன்று, சுல்தான் அப்துல்லா கோலாலம்பூர் மற்றும் சிலாங்கூரில் ரோந்து சென்று நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவுகளை அமல்படுத்துவதை கண்காணித்தார். அவர் துவாங்கு அப்துல் ரஹ்மான் சாலை, கே.எல்.சி.சி-வளாகத்தை சுற்றி வந்தார். மேலும் ஜாலான் செமந்தான், ஸ்ரீ ஹர்த்தமாஸ், லோக் யூ மற்றும் அம்பாங் சாலையில் உள்ள போக்குவரத்தை கண்காணித்த காவல்துறை அதிகாரிகளை சந்தித்தார்.

சாலையில் இன்னும் நிறைய கார்கள் உள்ளன, அது விரைவில் குறைக்கப்படும் என்று நம்புவதாக அவர் விளக்கினார்.

பொது நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவு அமல்படுத்தப்பட்ட மூன்றாவது நாள் இன்று.