டாமான்சாரா மெதடிஸ்ட் தேவாலயத்தின் மூன்று உறுப்பினர்களுக்கு கோவிட்-19

பெட்டாலிங் ஜெயாவில் உள்ள டாமான்சாரா உத்தாமா மெதடிஸ்ட் தேவாலயத்தில் குறைந்தது மூன்று உறுப்பினர்கள் கோவிட்-19 நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக செய்தி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர்கள் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டனர் என்றும் கோவிட்-19 கண்டறிதல் சோதனைக்கு மாதிரிகள் எடுக்கப்பட்டன என்றும் தெரிகிறது.

தேவாலயத்தின் சுற்றறிக்கையின் படி, பாதரியார் டாக்டர் டேனியல் ஹோ, கோவிட்-19 வைரஸ் பரவுவதைத் தடுப்பதில் அதிகாரிகளுடன் ஒத்துழைக்குமாறு அதன் உறுப்பினர்களை வலியுறுத்தினார்.

“நாம் இன்று உலகளாவிய சவால்களை எதிர்கொள்கிறோம், பலர் கோவிட்-19 ஆல் பாதிக்கப்பட்டுள்ளனர்; பலர் அன்புக்குரியவர்களை இழந்துவிட்டனர்; துரதிர்ஷ்டவசமாக இந்த எண்ணிக்கை இன்னும் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

“மலேசியாவிலும் உலகெங்கிலும் உள்ள பல சுகாதார வல்லுநர்கள் பெரிய பொறுப்புகளை பூர்த்தி செய்ய மிகுந்த அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளனர். அவர்களது குடும்ப உறுப்பினர்களும் தியாகம் செய்துள்ளனர். அரசு, வணிக மற்றும் சமூகத் துறைகள் சமாளிக்க சிரமப்படுகின்றன” என்று அவர் கூறினார். தேவாலய உறுப்பினர்களை பிரார்தனை செய்யவும் ஒத்துழைக்கவும் கேட்டுக் கொண்டார்.

நேற்றைய நிலவரப்படி, சுகாதார அமைச்சகம் நாடு முழுவதும் மொத்தம் 1,030 கோவிட் -19 பாதிப்புகளை பதிவு செய்துள்ளது. இதில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.

மார்ச் 18 முதல் தொடங்கி, 14 நாட்களுக்கு பொது நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவுகளை அமல்படுத்துவதன் மூலம் இந்த கொரோனா கிருமி பரவுவதைத் தடுக்க அரசாங்கம் முயற்சிக்கிறது.