சிலாங்கூரில் உள்ள உணவகங்கள், பல்பொருள் கடைகள் நள்ளிரவு 12 மணி முதல் காலை 6 மணி வரை மூடப்பட வேண்டும்

சிலாங்கூரில் உள்ள உணவகங்கள் (Restaurant), உணவு கடைகள், (food stalls) மற்றும் பல்பொருள் கடைகள் (convenience stores) நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவு காலம் முழுவதும் தினமும் காலை 6 மணி முதல் நள்ளிரவு 12 வரை மட்டுமே செயல்பட அனுமதிக்கப்படுகின்றன.

இந்த நடவடிக்கையை அறிவித்த சிலாங்கூர் மந்திரி புசார் அமிருதீன் ஷரி, மார்ச் 18 முதல் மத்திய அரசு பிறப்பித்த நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவுக்கு மேல் கூடுதல் நடவடிக்கையாக இது எடுக்கப்பட்டுள்ளது என்றார்.

“வரையறுக்கப்பட்டுள்ள முக்கியமான தேவைகளைத் தவிர்த்து வீட்டில் இருக்கும்படியான உத்தரவை இன்னும் புறக்கணித்து வரும் ஒரு சிலரின் நடவடிக்கை குறித்து மாநில அரசு ஆழ்ந்த கவலை கொண்டுள்ளது”.

“இது சம்பந்தமாக, சிலாங்கூர் முழுவதும் உள்ள உள்ளூராட்சி மன்ற அதிகாரிகளை ஒருங்கிணைப்பதன் மூலம் மாநில அரசு உடனடி நடவடிக்கைகளை அமல்படுத்தும்”.

கட்டுப்பாட்டு உத்தரவின்படி, உணவு டிரக் (food trucks), விவசாயி சந்தை (Pasar Tani) மற்றும் இரவு சந்தை (night markets) ஆகியவை செயல்பட அனுமதிக்கப்படவில்லை.

பொதுச் சந்தை (pasar awam) மற்றும் மொத்த சந்தைகள் (pasar borong) அதிகாலை 5 மணி முதல் மாலை 4 மணி வரை இயங்கும். ஒரு குடும்பத்தில் இருந்து வாங்குபவர்களின் எண்ணிக்கையும் கட்டுப்படுத்தப்படும்.

பேரங்காடிகள் (சூப்பர் மார்க்கெட்), அவை நள்ளிரவு வரை திறந்திருக்க அனுமதி உண்டு. இருப்பினும், நடமாட்டக் கட்டுப்பாடின் கீழ், உணவு சில்லறை பொருட்களின் பிரிவை மட்டும் திறக்க அவைகளுக்கு அனுமதி உண்டு.

இதற்கிடையில், கார் பழுது மற்றும் வாகன உதிரி பாகங்கள் சேவைகள் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை திறந்திருக்கும் என்றும் கட்டுப்பாட்டு உத்தரவு தெளிவுபடுத்தியது.

கார் இழுக்கும் சேவைகளுக்கு (towing), நேர அட்டவணை எதுவும் இல்லை.

அனைத்து சலவை சேவைகள் மற்றும் கார் கழுவும் மையங்கள் செயல்பட அனுமதிக்கப்படவில்லை.