கோவிட்-19 அச்சுறுத்தல் தொடர்ந்து அதிகரித்து வருவதால், அரசாங்கத்தின் வேண்டுகோளின் பேரில் பாதிப்பிற்கு எதிரான இயக்கத்தை வழிநடத்த டாக்டர் சுல்கிப்லி அகமத்தை ‘திரும்ப அழைத்து வருவதற்கு’ பக்காத்தான் ஹராப்பான் (பி.எச்) இன்று விருப்பம் தெரிவித்துள்ளது.
“முன்னாள் சுகாதார மந்திரி டாக்டர் சுல்கிப்லி அகமத், கோவிட்-19க்கு எதிரான ‘போரை’ வழிநடத்த தேசிய சேவைக்கு திரும்ப வேண்டும் என்று அரசாங்கத்திடம் கோரிக்கை இருந்தால், பி.எச். இந்த கோரிக்கையை முடிந்தவரை பரிசீலிக்கும் என்று நான் நம்புகிறேன்,” என்று இஸ்கந்தார் புத்ரி நாடாளுமன்ற உறுப்பினர் லிம் கிட் சியாங் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
சுகாதார அமைச்சர் டாக்டர் ஆதாம் பாபா நேற்று தொலைக்காட்சியில் அளித்த பேட்டியில் மக்கள் வெதுவெதுப்பான நீரைக் குடிப்பதால் கோவிட்-19 வைரஸைக் கொல்ல முடியும் என்று விளக்கினார். இந்த கூற்று மருத்துவ நிபுணர்கள் உட்பட பல தரப்பினரிடமிருந்து விமர்சனங்களைப் பெற்றது.
“கோவிட்-19 பாதிப்பிற்கு எதிராக நாம் அனைவரும் ஒன்றுபட வேண்டும். இந்த முயற்சியில் ஒரு ‘நகைச்சுவை நடிகர்’ அதை வழிநடத்த இங்கு இடமில்லை” என்று லிம் மேலும் கூறினார்.
லிம்மின் கருத்துப்படி, கோவிட்-19 பாதிப்பை மலேசியர்கள் ஒன்றிணைந்து சமாளிக்கும் போது, இராணுவ வீரர்களைப் பயன்படுத்துவது அவசியமா என்று சந்தேகித்துள்ளார்.
“இப்போது இருக்கும் மருத்துவ வசதிகளை மேம்படுத்துவது முக்கியமாகும். மருத்துவமனை படுக்கைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும்; மருந்து இருப்புகளை அதிகரிக்க வேண்டும்; மருத்துவ பணியாளர்களை அதிகரித்து இப்போதுள்ள முன் வரிசை பணியாளர்களைப் பாதுகாப்பதில் முன்னுரிமை அளிக்க வேண்டும்”.
“நமது இராணுவம் மருத்துவ, பொறியியல், CBRNe (ரசாயன வெடிபொருட்கள், கதிரியக்கசக்தி மற்றும் அணு ஆயுதங்கள்) ஆகியவற்றைக் கொண்டு பரவலான திறன்களைக் கொண்டுள்ளது, அவை இந்த பாதிப்பிற்கு எதிரான போராட்டத்தில் பயன்படுத்தப்படலாம்.
“இராணுவ மருத்துவமனைகளில் படுக்கைகள் மற்றும் கூடுதல் வார்டுகள் போன்ற தொழில்முறை சேவைகளை உள்ளூர் மருத்துவமனைகளுக்கு உதவ பயன்படுத்தப்படலாம். ஆனால் இராணுவத்தை ரோந்துப் பணிகளுக்குப் பயன்படுத்த வேண்டிய அவசியமில்லை.
“10 நாட்களில் 1,000 படுக்கைகள், பல தனிமை வார்டுகள் மற்றும் 30 தீவிர சிகிச்சை மையங்களுடன் வுஹானில் சீனா வெற்றிகரமாக ஒரு மருத்துவமனையை உருவாக்கியுள்ளது. இந்த உதாரணத்தை நாம் பின்பற்ற முடியுமா?” அவர் மீண்டும் கூறினார்.