கோவிட்-19 தொற்றுநோயைத் தொடர்ந்து ஈரான் மற்றும் இந்தியாவில் சிக்கியிருக்கும் 1,565 பேரை மலேசிய அரசாங்கம் திரும்ப அழைத்து வரும்.
இருப்பினும், இத்தாலியில் சிக்கித் தவிக்கும் மலேசியர்கள் சிறிது காலம் காத்திருக்க வேண்டியிருக்கும். எந்த விமானமும் தரையிறங்குவதைத் தடுக்கும் ஐரோப்பிய நாடுகளின் முடிவுக்குப் பின்னர், பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றது.
ஈரானின் தெஹ்ரானில் இருந்து ஏர் ஏசியா விமானம் நாளை (மார்ச் 22) காலை 6.10 மணிக்கு வரவுள்ளதாக துணை வெளியுறவு அமைச்சர் கமாருடின் ஜாபர் இன்று தெரிவித்துள்ளார்.
இந்த விமானத்தில் 46 மலேசியர்களும் எட்டு சிங்கப்பூரர்களும் ஒரு இந்தோனேசிய குடிமகனும் அடங்குவார்கள்.
பதினைந்து உறுப்பினர்கள் மற்றும் எட்டு அதிகாரிகள் – சுகாதார அமைச்சின் (எம்ஓஎச்) ஐந்து பேர், விஸ்மா புத்ராவிலிருந்து இரண்டு பேர் மற்றும் தேசிய பேரிடர் மேலாண்மை அமைப்பின் (நாட்மா) ஒருவரும் இந்த விமான பயணத்தில் ஈடுபட்டுள்ளனர்.
“மலேசியா சுகாதார அமைச்சு வகுத்துள்ள நடைமுறைக்கு இணங்க, நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட அனைவருமே குறிப்பிட்ட பொது பயிற்சி மையத்தில் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்படுவார்கள்.
“இந்த தனிமைப்படுத்துதல் அவர்களின் ஆரோக்கியத்தை கண்காணிக்கவும், தேவைப்பட்டால் சிகிச்சையை வழங்கவும் எங்களுக்கு உதவும்” என்று அமைச்சர் கூறினார்.
இந்தியாவில் சிக்கித் தவிக்கும் 1,519 மலேசியர்களைப் பொருத்தவரை, ஆறு ஏர் ஏசியா விமானங்கள் 1,116 பயணிகளை சென்னை மற்றும் திருச்சிராப்பள்ளியிலிருந்து நாட்டிற்கு கொண்டு வரும்.
மீதமுள்ள 403 பயணிகள் சென்னை மற்றும் மும்பையிலிருந்து இரண்டு மலேசியா ஏர்லைன்ஸ் விமானங்கள் வழியாக கொண்டுவரப்படுவார்கள்.
“புது டில்லியில் உள்ள மலேசிய உயர் கமிஷன் இந்த இரண்டு மாஸ் விமானங்களையும் தரையிறக்க இந்திய அரசிடம் அனுமதி கோருகிறது” என்று அமைச்சர் கூறினார்.
இருப்பினும், விமானம் புறப்படும் தேதி அல்லது திட்டமிடப்பட்ட வருகையை குறிப்பிடவில்லை.
ஏர் ஏசியா விமானங்களை வாடகைக்கு எடுக்க பயன்படுத்தப்படும் RM1.05 மில்லியன் செலவை பி.என். கூட்டணி கட்சியின் ஒரு பகுதியாக இருக்கும் எம்.ஐ.சி. ஏற்றுக் கொள்ளும் என்று அவர் கூறினார்.
இந்த அறிவிப்பை வெளியிடுவதில், காமருடினுடன் மனிதவள அமைச்சரும், எம்.ஐ.சி துணைத் தலைவருமான எம்.சரவணனும் இருந்தனர்.
இதற்கிடையில், இத்தாலியில் 82 மலேசியர்கள் உள்ளனர்.
மலேசியர்களை விரைவில் நாட்டிற்கு அழைத்து வருவதற்கு சிறப்பு அனுமதி பெற விஸ்மா புத்ரா இத்தாலி அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கமாருடின் கூறினார்.
இந்த குழு திங்கள்கிழமை (மார்ச் 23) கோலாலம்பூரில் தரையிறங்கவிருப்பதாக அவர் கூறினார், ஆனால் இத்தாலிய விமானப் போக்குவரத்து ஆணையம் அனைத்து விமானங்களையும் தடை செய்ததால் இத்திட்டம் தாமதப்பட்டுள்ளது.