கொரோனா வைரஸ் | கோவிட்-19 கிருமியால் கொல்லப்பட்ட மலேசியர்களின் எண்ணிக்கை இப்போது எட்டாக உயர்ந்துள்ளது என்று சுகாதார இயக்குநர் ஜெனரல் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா அறிவித்தார்.
ஏழாவது இறப்பு கோலாலம்பூரில் 57 வயதான ஒரு நபர், வியட்நாமுக்கான பயண வரலாற்றைக் கொண்டவர். மேலும் இவர் தப்லீக் சமய கூட்டத்தில் கலந்து கொண்டவர்களுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தார். இன்று பிற்பகல் 3.22 மணிக்கு அவர் இறந்தார்.
எட்டாவதாக பலியானவர் கிளந்தானில் 69 வயதான ஒரு நபர், அவரும் தப்லீக் சமய கூட்டத்தில் கலந்து கொண்டவர். மாலை 4 மணிக்கு அவர் இறந்தார்.
முன்னதாக, நூர் ஹிஷாம் இன்று நண்பகல் வரை நாட்டில் 153 புதிய வழக்குகள் உள்ளன என்றும், இது மொத்தம் எண்ணிக்கையை 1,183 ஆக உயர்த்தி உள்ளது என்றும் கூறினார்.
புதிய பாதிப்புகளில், 90 நபர்கள் கோலாலம்பூரில் உள்ள ஸ்ரீ பெட்டாலிங்கில் உள்ள ஒரு மசூதியில் நடந்த தப்லீக் சமய கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள்.
இதனிடையே, 148 அமைச்சு மருத்துவமனைகளில், 26 மருத்துவமனைகள் கோவிட்-19 சிகிச்சைக்கு பயன்படுத்தப்படுவதாக அடையாளம் காணப்பட்டுள்ளது, என்றார்.
கோவிட் -19 பாதிப்புகளுக்கு, 26 மருத்துவமனைகளில் 3,400 படுக்கைகளையும் 300 ஐ.சி.யூ. யூனிட்களையும் அரசாங்கம் தயார் செய்துள்ளது.
தற்போது 925 வென்டிலேட்டர்கள் உள்ளன, ஆனால் இன்னும் 500 தேவைப்படுகிறது.
“ஐ.சி.யூ நிரம்பினால், தனிமைப்படுத்தப்பட்ட வார்டுகளைப் பயன்படுத்தலாம்”.
தற்போது, 18 சதவீதம் ஐ.சி.யூ யூனிட்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன, 3,400 படுக்கைகளில் 20 சதவீதம் உபயோகத்தில் உள்ளன.