பெட்டாலிங் ஜாயா, லெம்பா பந்தாய் மற்றும் ஹூலு லங்காட் ஆகியவை நாட்டின் முதல் மூன்று மாவட்டங்களில் அதிக எண்ணிக்கையிலான கோவிட்-19 பாதிப்புகளைக் கொண்டுள்ளன என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
சுகாதார இயக்குநர் ஜெனரல் நூர் ஹிஷாம் அப்துல்லா இன்று காலை தனது ட்விட்டர் பதிவில் இந்த விஷயத்தை வெளிப்படுத்தினார்.
மார்ச் 21 மதியம் வரை உள்ள நிலவரப்படி, பெட்டாலிங் ஜெயாவைச் சேர்ந்த கோவிட்-19 நோயாளிகளின் எண்ணிக்கை 96 ஆகவும், லெம்பா பந்தாய் (90), ஹுலு லங்காட் (75) ஆகியவையும் பதிவு செய்துள்ளன.
52 நோயாளிகளுடன் ஜொகூர் பாரு, சிரம்பான் (42), தீத்தீவாங்சா (41) ஆகியவை சிவப்பு பட்டியலில் இருக்கின்றன.
போர்னியோவில், சவா இரண்டு மாவட்டங்களில் ஒப்பீட்டளவில் அதிக எண்ணிக்கையிலான பாதிப்புகளைப் பதிவு செய்துள்ளது, அதாவது தவாவ் (37) மற்றும் லாஹாட் டாத்து (32). சரவாக் தலைநகரான கூச்சிங் நகரில் 30 பாதிப்புகள் பதிவாகியுள்ளன.
நேற்று, மலேசியாவில் கோவிட்-19 பாதிக்கப்பட்டு இறந்தவர்களின் எண்ணிக்கை எட்டு ஆக உயர்ந்துள்ளது.
பாதிப்புகளின் எண்ணிக்கையும் சனிக்கிழமையன்று 1,183 ஆக அதிகரித்துள்ளது, இது வெள்ளிக்கிழமைடன் ஒப்பிடும்போது 153 பாதிப்புகளின் அதிகரிப்பை காட்டுகிறது.