தானியங்கி பண இயந்திரங்களுக்கான (ATM) தினசரி செயல்பாடுகள் நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவு காலத்தில் மட்டுப்படுத்தப்படும். இதன் புதிய இயக்க நேரம் காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை ஆகும்.
“ஏடிஎம்கள், பண வைப்பு இயந்திரங்கள், காசோலைகள் மற்றும் நாணயங்கள் போன்ற சுய சேவை இயந்திரங்கள், பாதிக்கப்படாத இடங்களில் முழுமையாக இயங்கும். இருப்பினும், ஏடிஎம்கள் உட்பட அனைத்து சுய சேவை இயந்திரங்களுக்கான தினசரி இயக்க நேரம் நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவு காலத்தில் (மார்ச் 18-31) காலை 7.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை மட்டுப்படுத்தப்படும்” என்று பேங்க் நெகாரா மலேசியா (பி.என்.எம்.) தெரிவித்துள்ளது.
முக்கியமான சேவையை வழங்க அனுமதிக்கப்பட்டாலும், பி.என்.எம்., மின்னணு சேனல்களைப் பயன்படுத்துவதை ஊக்குவிக்கிறது.
“அனைத்து சாதாரண வங்கி பரிவர்த்தனைகளும் ஆன்லைனில் அல்லது மொபைல் சாதனம் வழியாகவே செய்யப்படலாம். உங்கள் பாதுகாப்பு மற்றும் ஆரோக்கியத்திற்காக இந்த சேவை வழங்குநரின் கிளைகள் மற்றும் வளாகங்களுக்கு செல்வதைத் தவிர்க்கவும்” என்று பி.என்.எம் வழியுறுத்தியுள்ளது.