மலேசிய ஆயுதப்படை (ATM) நாட்டில் 10 சதவீதம் அல்லது சுமார் 3 மில்லியன் மக்கள் இன்னும் நடமாட்டக் கட்டுப்பாடு ஆணையைப் பின்பற்ற மறுக்கின்றனர் என்று கூறியுள்ளது.
“நடமாட்டக் கட்டுப்பாடு ஆணை 90 சதவிகித இணக்க விகிதத்தை எட்டியிருந்தாலும், இன்னும் மறுக்கும் 10 சதவிகிதத்தை நாங்கள் குறைத்து எடைபோட முடியாது”.
“இந்த சதவீதம் சுமார் 3 மில்லியன் மக்களை குறிக்கிறது, இது ஒரு பெரிய எண்ணிக்கையாகும்” என்று ஆயுதப்படை இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
எனவே, கோவிட்-19ஐக் கட்டுப்படுத்தும் நோக்கில் பிறப்பித்த உத்தரவுகளுக்கும் கட்டளைகளுக்கும் கீழ்ப்படியவும், மக்கள் மத்தியில் ஒழுக்கத்தை ஏற்படுத்தவும் மலேசிய காவல்துறைக்கு மலேசிய ஆயுதப்படை உதவும்.
“இந்த ஆயுதப்படை-காவல்துறை ஒத்துழைப்பு குறித்து குறிப்பாக ஆயுதப்படை வகிக்கும் பங்கு குறித்து விவாதிக்க வேண்டிய அவசியமில்லை”.
“இந்த பாதிப்பைக் கையாள்வதில் நம்மால் முடிந்தவரை விரைவாக செயல்பட வேண்டும்” என்று ஆயுதப்படை கூறியுள்ளது.
அதிக ஆபத்துள்ள பகுதிகளில் நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவுகளை அமல்படுத்துவதில் அதிக கவனம் செலுத்த ஆயுதப்படை ஒப்புக்கொண்டது. இதில், சந்தைகள் மற்றும் பல்பொருள் அங்காடிகள் ஆகியவை அடங்கும். அங்கு மக்கள் இன்னும் அதிக எண்ணிக்கையில் கூடுகின்றனர்; கூடல் இடைவெளியையும் பின்பற்றுவதில்லை.
“எந்தவொரு செய்தி அறிக்கைகளுக்கும், குறிப்பாக தகவல், படங்கள், வீடியோக்கள் அல்லது ஒலிப் பதிவுகள், பெரியளவில் இராணுப்படை நிற்பது போன்ற காணொளிகள், அல்லது இராணுவப் பணியாளர்களால் நியாயமற்ற முறையில் நடத்தப்படுவது போன்ற காணொளிகள் ஆகியவற்றை எளிதில் நம்ப வேண்டாம் என்று பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது”.
“இது கவலை மற்றும் பீதியை ஏற்படுத்தும், நடமாட்டக் கட்டுப்பாடு ஆணையின் அமலாக்க முறை தவறானது போல் சித்தரிக்கும்.”
நேற்றிலிருந்து, மலேசிய ஆயுதப்படைகள் மற்றும் காவல்துறையினர் ரோந்து, சாலைத் தடுப்பு, தடைகள், மருத்துவமனைகள் மற்றும் எல்லைகளைக் கட்டுப்படுத்துதல், கிராமப்புறங்கள் மற்றும் அதிக ஆபத்து உள்ள பகுதிகளுக்கு உதவத் தொடங்கியுள்ளன.
மொத்தத்தில், காவல்துறைக்கு உதவ 7,500 ஆயுதப்படையினர் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
“மூன்று சேவைகளிலிருந்தும் ஆயுதப்படையினர் 405 சாலை தடை (ரோட் பிளாக்) இடங்களில் நிறுத்தப்பட்டுள்ளனர். மேலும் 272 இடங்களில் ஒவ்வொரு நாளும் நாடு முழுவதும் மொபைல் ரோந்து வாகனம் ரோந்துப் பணியில் MPV (Mobile Patrol Vehicle) ஈடுபடுகின்றனர்.”