“பயங்கர பேரழிவை எதிர்கொண்டுள்ளோம்” – எச்சரிக்கும் மகாதீர்

நாம் அனைவரும் பயங்கர பேரழிவை எதிர்கொண்டுள்ளதாக மலேசிய முன்னாள் பிரதமர் மகாதீர் முகமட் கவலை தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் போன்ற ஒன்றை இதுவரைக் கண்டதில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

“தற்போது மலேசியாவில் நடக்கக் கூடிய அனைத்தும் உலகின் இதர பகுதிகளிலும் நடக்கிறது. தொழிற்சாலைகள் மூடப்படலாம் அல்லது உற்பத்தி குறைக்கப்படலாம். ஏற்றுமதி, இறக்குமதி பாதிக்கப் படக்கூடும்.

“உலகம் முழுவதும் பொருளாதார மந்தநிலை ஏற்படும். இதனால் பணக்கார நாடுகள் கூட சிரமங்களைச் சந்திக்கும். சிறு நிறுவனங்கள் எதிர்கொள்ளும் நஷ்டமானது கடுமையாக இருக்கும். அன்றாடம் சம்பாதிக்கக் கூடியவர்கள் சிரமப்படுவார்கள். இவர்களால் சம்பாதிக்க முடியும் என்றாலும் தேவையை ஈடுகட்டும் வகையில் வருமானம் இருக்காது. எனவே அரசாங்கம் பொருளாதார ரீதியில் உதவ வேண்டியிருக்கும்”.

“மலேசியாவை பொருத்தவரை சுற்றுலாத்துறை தான் அந்நிய செலாவணியை ஈட்டித் தரும் இரண்டாவது பெரிய துறையாகும். இப்போது சுற்றுலாத்துறை கடுமையாகப் பாதிக்கப்படுவதால் அதை சார்ந்துள்ளவர்கள் வேலையை, வருமானத்தை இழக்க நேரிடும். அரசாங்கத்துக்கும் வருமான இழப்பு ஏற்படும்”.

“மொத்தத்தில் நாம் பயங்கரமான பேரழிவை எதிர்கொண்டுள்ளோம் என்பதே உண்மை,” என்று அண்மையில் எழுதிய கட்டுரை ஒன்றில் மகாதீர் குறிப்பிட்டுள்ளார். – BBC.TAMIL