பிரதமர் முகிதீன் யாசின் இன்று மக்களுக்கான உதவி தொகை திட்டத்தை அறிவித்தார். இது கிட்டத்தட்ட 10 பில்லியன் ரிங்கிட் ரொக்க ஒதுக்கீடு ஆகும்.
முதல் முறையாக உதவி பி40 குழுவிற்கு மட்டுமல்லாமல், எம்40 குழுவிற்கும் வழங்கப்படும் என்றார். இவர்களில் தனியார் தொழிலாளர்கள், ஃபெல்டா குடியேறிகள், விவசாயிகள், மீனவர்கள், சிறு வணிகர்கள் மற்றும் அனைத்து எம்40 குழுவைச் சேர்ந்தவர்களும் மற்றும் அதற்குக் கீழானவர்கள் அனைவரும் இதில் அடங்குவர் என்றார்.
- RM4,000 மற்றும் அதற்கும் குறைவாக மாத வருமானம் சம்பாதிக்கும் கிட்டத்தட்ட 4 மில்லியன் குடும்பங்கள் RM1,600 பெறுவர். RM1,000 ஏப்ரல் 2020-ல் செலுத்தப்படும், RM600 மே 2020 இல் செலுத்தப்படும்.
- RM4,000 முதல் RM8,000 வரை மாத வருமானம் சம்பாதிக்கும் கிட்டத்தட்ட 1.1 மில்லியன் குடும்பங்கள் RM1,000 பெறுவர். RM500 ஏப்ரல் 2020-ல் செலுத்தப்படும், மீதமுள்ள RM500 மே மாதத்தில் செலுத்தப்படும்.
- RM2,000 மற்றும் அதற்குக் குறைவான மாத வருமானம் சம்பாதிக்கும் 21 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய சுமார் 3 மில்லியன் ஒற்றை நபர்கள் (single individuals) RM800 பெறுவர். RM500 ஏப்ரல் 2020-ல் செலுத்தப்படும், மீதமுள்ள RM300 மே மாதத்தில் செலுத்தப்படும்.
- RM2,000 முதல் RM4,000 வரை மாத வருமானம் சம்பாதிக்கும் 21 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய சுமார் 400,000 ஒற்றை நபர்கள் (single individuals) RM500 பெறுவர். RM250 ஏப்ரல் 2020-ல் செலுத்தப்படும், மீதமுள்ள RM250 மே மாதத்தில் செலுத்தப்படும்.
ஆர்.டி.எம்-இல் இன்று நேரடியாக ஒளிபரப்பிய பிரதமரின் சிறப்பு செய்தியில் முகிதீன் இதனைத் தெரிவித்தார்.
கூடுதலாக, Bantuan Sara Hidup (BSH) திட்டத்தின் கீழ் மீதமுள்ள பண செலுத்துதல் ஜூலை 2020-ல் RM3.2 பில்லியன் ஒதுக்கீட்டில் செலுத்தப்படும்.
உயர்கல்வி மாணவர்கள் மே 2020-ல் RM200 மானியம் பெறுவார்கள். இந்த மானியத்தில் RM270 மில்லியன் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
முன் வரிசையில் மற்றும் ஓய்வு பெற்றவர்களுக்கு உதவிகள்
முதியவர்கள், ஊனமுற்றோர், வீடற்றவர்கள் மற்றும் பூர்வக்குடியின மக்கள் போன்ற பாதிக்கப்பட்ட குழுக்கள் உணவு உதவி பெறுவதை உறுதி செய்ய அரசு தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் சமூக தொழில்முனைவோருடன் இணைந்து செயல்படும் என்று முகிதீன் உறுதியளித்தார்.
ஏப்ரல் முதல் தொற்றுநோயின் இறுதி வரை மருத்துவ முன்னணி பணியாளர்களுக்கு RM400 முதல் RM600 வரை சிறப்பு கொடுப்பனவு இருக்கும் என்றும் பிரதமர் அறிவித்தார்.
முன்னணி பாதுகாப்புப் படையினர் ஏப்ரல் முதல் பாதிப்பு முடியும் வரை RM200 சிறப்பு கொடுப்பனவைப் பெறுவார்கள்.
ஏப்ரல் 2020 இல் 850,000க்கும் மேற்பட்ட அரசு ஓய்வு பெற்றவர்களுக்கு அரசாங்கம் RM500 ஒரு உதவி வழங்கும்.
PPR/பிபிஆர் வாடகை மற்றும் பொது வீட்டு வசதி
இதற்கிடையில், பிபிஆருக்கான வாடகை கட்டண விலக்கை முன்பு அறிவிக்கப்பட்ட ஒரு மாதத்திலிருந்து ஆறு மாதங்களுக்கு நீட்டிக்க அரசாங்கம் ஒப்புக் கொண்டுள்ளது. RM3 மில்லியன் செலவை அரசாங்கம் ஏற்கிறது.
“பொது வீட்டுவசதிகளைப் பொறுத்தவரை, கோலாலம்பூர் மாநகராட்சி மன்றம், அதே போன்ற விலக்கு அளிக்கும், இது 40,000க்கும் மேற்பட்ட வாடகைதாரர்களுக்கு பயனளிக்கும்.
“அந்தந்த மாநிலங்களில் உள்ள பிபிஆர் குடியிருப்பாளர்களின் சுமையை எளிதாக்க அதே விலக்கு அளிக்க மாநில அரசு மற்றும் பிற உள்ளூர் அதிகாரிகளை நான் கேட்டுக்கொள்கிறேன்,” என்று அவர் கூறினார்.
மத்திய அரசுக்கு சொந்தமான அனைத்து வளாகங்களான பள்ளி சிற்றுண்டி சாலைகள், நர்சரிகள், சிற்றுண்டிச்சாலைகள், கடைகள் மற்றும் பலவற்றிற்கு ஆறு மாத வாடகை விலக்கு வழங்கவும் அரசாங்கம் ஒப்புக் கொண்டுள்ளது என்று அவர் கூறினார்.